Tuesday, December 11, 2007

‘கல்லூரி’ -எழுத்தாளர் ஜெயமோகன்

திருக்குறளில் ஆகச்சிறந்த கவிதை எது என்று நான் ஒருமுறை மறைந்த பேராசிரியர்ஜேசுதாசனிடம் கேட்டேன். ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுகஉலகியற்றியான்’ என்ற குறள்தான் என்றார்.

பத்து வருடங்களுக்கு முன்பு, இளைஞனான எனக்கு அது விந்தையாக இருந்தது. அருமையானஅணிகளும் சொல்லாட்சிகளும் உள்ள எத்தனையோ குறள்கள் இருக்க, உள்ளர்த்தங்களேஇல்லாத நேரடியான இந்த உணர்ச்சிவெளிப்பாட்டை ஏன் தெரிவுசெய்தார் பேராசிரியர்என்ற எண்ணம் ஏற்பட்டது.

ஆனால் பேராசிரியர் சொன்னார் .”கவிஞனின் மிக உன்னத வெளிப்பாடு என்பதுஅறச்சீற்றம் அவனை மீறி வெளிப்படும் நிலைதான். இந்தக் கவிதையை கொஞ்சம் நிதானமாகசிந்தனை செய்திருந்தால் வள்ளுவரே முட்டாள்தனமாக உணர்ந்திருப்பார். உலகைஉருவாக்கியவனை அவனால் உருவாக்கப்பட்டவனே அழிந்துபோகும்படி சாபம் போடுவதாவது….ஆனால் அந்த உணர்வெழுச்சி உண்மையானது. தமிழில் வெளிப்பட்ட அறச்சீற்றங்களின்உச்சமே இக்குறள்தான். ஆகவே இது மகத்தான கவிதை…”
பாலாஜி சக்திவேல்லின் ‘கல்லூரி’ கேளிக்கையை மட்டுமே அடிப்படை இலக்காகக் கொண்டதமிழ்த் திரையுலகில் வெளிப்பட்டிருக்கும் ஆழமான அறச்சீற்றத்தின் பதிவு.ஆகவேதான் இந்த எளிமையான, அடக்கமான, படம் எனக்கு ஒரு காவியமாகவே தெரிகிறது.மேலான கலை என்பது ஒருபோதும் உத்தி சார்ந்த அலட்டல் அல்ல, செயற்கையானஎடுப்புகளும் அல்ல. அது அடிபட்டவனின் வலி முனகல் போலவோ ஆனந்தக் கண்ணீரின்விம்மல் போலவோ இயல்பாக, தன்னிச்சையாக வெளிப்படுவது.

‘கல்லூரி’ இன்றுவரை நம் திரையுலகம் முன்வைத்துவந்த கல்லூரிகளில் இருந்து அதன்யதார்த்தம் காரணமாகவே வேறுபடுகிறது. உயர்தர உடையணிந்த விடலைகள் பளபளக்கும்இருசக்கர வண்டிகளை சாய்த்துவைத்து உலகையே நக்கல்செய்து திரியும் கல்லூரிகளையேநாம் கண்டிருக்கிறோம். காதல் அல்லாமல் வேறு விஷயமே நிகழாத இடங்கள் அவை. கல்உடைப்பவர்களின், பீடி சுற்றுபவர்களின், ஆட்டோ ஓட்டுபவர்களின்அரைப்பட்டினிப்பிள்ளைகள் படிக்கும் ஒரு கல்லூரி என்பது முப்பது வருடங்களுக்குமுன்னரே தமிழ்நாட்டில் ஒரு அன்றாட யதார்த்தமாக ஆகிவிட்டாலும் கூட இப்போதுதான்அது திரையில் முகம் காட்டுகிறது.
அந்தப் பிள்ளைகள் அவர்களின் துயரங்களால், ஓயாத போராட்டத்தால் ஒன்றாகச்சேர்வதும்அவர்கள் நடுவே உருவாகும் ஆழமான நட்பும் மிகுந்த நுட்பத்துடன்காட்சிப்பதிவாகியுள்ளது இந்த திரைப்படத்தில். அவர்கள் ஒருவரை ஒருவர்‘கலாய்ப்பதும்’ அவர்களின் ஊடல்களும் திரைப்படம் என்ற கலையின் அனைத்துவல்லமைகளும் வெளிப்பட சித்தரிக்கப்பட்டிருந்தமையால் உண்மையான வாழ்க்கையை கண்எதிரே பார்த்த பிரமிப்பும் நிறைவும் ஏற்படுகிறது.

கதாபாத்திரங்களுக்கு ஏற்ப முகங்களைத் தேர்வுசெய்ததில்தான் இப்படத்தின்முதல்பெருவெற்றி நிகழ்ந்திருக்கிறது. முத்து, ஆதிலெட்சுமி, கயல் போன்றகதாபாத்திரங்கள் மிக மிக யதார்த்தமாக இருக்கின்றன. படத்தில் ஒவ்வாமை அளிக்கும்ஒரு முகம் கூட வெளிப்படவில்லை. உழைத்து வாழும் எளிய முகங்கள் தொடர்ந்துவந்தபடியே இருப்பதை பரவசத்துடன் பார்த்தபோது இந்த சாதாரணமான விஷயத்தை எண்ணிஏங்கும்படி இருக்கிறதே தமிழ் திரையுலகு என்ற கசப்பும் ஏற்பட்டது. உதாரணமாககயலின் அப்பாவாக வருபவரின் அந்த முகம்! உழைத்து குடும்பத்தைகரையேற்றத்துடிக்கும் பாசமுள்ள ஒரு தந்தையின் அந்த இனிய சிரிப்பு! அதேபோலசலீமாவாக வரும் அந்தப்பெண். தென்தமிழ்நாட்டு மரைக்காயர் முகங்களுக்கே உரியகூறுகள் துலங்குகின்றன அதில்.
நடிப்பைக் கொண்டுவருவதிலும் பாலாஜி சக்திவேல் பெருவெற்றி பெற்றிருக்கிறார்.கல்லூரி முதல்வராக நடிப்பவரின் முகபாவனைகள் தவிர அனைத்து வெளிப்பாடுகளுமே மிகமிகக் கச்சிதமாக அமைந்துள்ளன. ஒரு பொம்மையாக மட்டுமே வரமுடியும் எனஎதிர்பார்க்கவைத்த கதாநாயகி கூட அற்புதமான மெய்ப்பாடுகளை வழங்கி மனம்நெகிழச்செய்கிறார்.
நமது கிராமப்புற கல்வி நிலையங்களில் இன்றுள்ள உண்மையான அடிப்படைச் சிக்கலேபடத்தின் மையக்கருவாகியுள்ளது.

கட்டுப்பெட்டித்தனமான நம் சமூகம் ஆணும் பெண்ணும்பழகுவதை அனுமதிக்காது. ஆனால் கல்வி நிறுவனங்களில் அதற்கான வாய்ப்புஏற்படுகிறது. ஆனால் அங்கே நட்பும் பாலியல் கவற்சியும் ஒன்றுடன் ஒன்று கலந்துஇனம்பிரிக்க முடியாதபடி சிடுக்குபட்டிருக்கின்றன. கல்லூரிகளில் நிகழும்பெண்சீண்டல்கள் அடிப்படையில் இச்சந்தர்ப்பத்தை எப்படி எதிர்கொள்வது என்றுதெரியாத இளைஞர்களின் வெளிப்பாடுகள். நம் திரைப்படங்கள் தொடர்ந்து பெண்ணைச்சீண்டி மட்டப்படுத்தும் கதாநாயகர்களை முன்வைத்து அவர்களுக்கு வழிகாட்டுகின்றன.ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் மட்டுமே நிகழ முடியும் என்ற எண்ணத்தைமீண்டும் மீண்டும் அவை வலியுறுத்துகின்றன.
அதை மீறி இயல்பான நட்புடன் ஆணும் பெண்ணும் பழக முடியுமா என இளம் உள்ளங்கள் கனவுகாண்கின்றன. அவர்களை தடுப்பது இரு வல்லமைகள். ஒன்று எப்போதும் ஒழுக்கக்கட்டுப்பாட்டின் குண்டாந்தடியுடன் பார்க்கும் சமூகத்தின் கண்கள். இன்னொன்றுஅவர்களுக்குள்ளேயே எழும் இயல்பான பாலியல் இச்சை. அவ்விரண்டாலும் கடுமையானமனக்குழப்பத்துக்கும் குற்றவுணர்வுக்கும் ஆளாகிறார்கள் அவர்கள். நம்குழந்தைகளின் வளர்இளமைப்பருவத்தில் அவர்களை சுழற்றியடிக்கும் மையச்சிக்கலாக இதுவிளங்குகிறது

மிக நேர்மையுடனும் கவித்துவத்துடனும் அதை கலையாக்கியிருக்கிறார் பாலாஜிசக்திவேல். அவ்விளைஞர் குழுவுக்குள் உள்ள இயல்பான நட்பும் அதில் இருவர் அவர்களைமீறி காதல் கொள்ளும்போது ஏற்படும் உக்கிரமான குற்றவுணர்வும் அதனுடன் அவர்கள்நிகழ்த்தும் போராட்டமும் உணர்ச்சிகரமான தருணங்கள் மூலம் வெளிப்படுகின்றன.படத்தில் இளைஞர்களின் போராட்டம் என்பது எந்த புறச்சக்தியுடனும் அல்ல தங்கள்அகமன அலைகளுடன் மட்டுமே என்பது இப்படத்தின் மிக நுட்பமான சிறப்பம்சம்.

கடைசியில் தருமபுரி பேருந்து எரிப்பில் உச்சம் கொண்டு முடிகிறது படம்.துளித்துளியாக ஏழை மக்கள் உருவாக்கியெடுத்த கனவுகளை மூர்க்கமாகஅழித்துச்செல்கிறது வன்முறை அரசியலின் ஈவிரக்கமற்ற கை. ”கெடுக!” எனமூண்டெழும் ஓர் அடிவயிற்று ஆவேசம் தொனிக்க படமாக்கப்பட்டுள்ள இந்தக் காட்சிகளேதமிழ்திரையுலகின் மறக்கமுடியாத படங்களுள் ஒன்றாக இதை நிலைநிறுத்துகின்றன.

எத்தனையோ மௌன அர்த்தங்கள் கோண்டது இக்காட்சி. சிராய்ப்புகளுடனும் கண்ணிருடனும்கனவுகளுடனும் அவ்விளநெஞ்சங்கள் நாளை வெளிச்சென்று எதிர்கொள்ள தங்களைதயாரித்தபடி இருக்கும் புறவுலகம் எப்படிப்பட்டது? அவர்கள் பேணும் மலரசைவுபோன்றமெல்லிய உணர்வுகளுக்கும் தவிப்புகளுக்கும் அங்கு என்ன இடம்? அக்கனவுகளை ஈசல்சிறகுகள் போல உதிர்த்துவிட்டுத்தான் குண்டாந்தடிகளுடன் அலையும் மனிதர்களின்சூழலுக்கு அவர்கள் வந்துசேர வேண்டுமா?

‘கல்லூரி’ உண்மையில் பலநூறு ஏழை உழைப்பாளிகளின் எதிர்காலம் குறித்த கனவுகளின்கூடமாக இந்நாவலில் காட்டப்பட்டுள்ளது. தங்கையை கல் உடைக்க அனுப்பி அண்ணாவைபடிக்க அனுப்பும் கல் உடைப்பவனின் கனவு. ஊதுவத்தி சுற்றி அக்காவை படிக்கஅனுப்பும் தங்கைகளின் கனவு. அவர்கள் படிக்கும் அந்த வரலாறு இளங்கலை அவர்களுக்குஎன்ன அளிக்கப்போகிறது? குண்டாந்தடிகளும் பெட்ரோலுமாக அலையும் அரசியல்வாதிகளிடம்அல்லவா இருக்கிறது அவர்களின் எதிர்காலம்?

செழியனின் ஒளிப்பதிவு இயல்பான ஒளியில் எடுக்கப்பட்டது என்ற எண்ணத்தைஉருவாக்கும் அளவுக்கு அழகும் இயல்பான தன்மையும் உடையதாக இருக்கிறது. இயற்கையானமழை இருளை படம்பிடித்திருப்பதும் சரி, கல் குவாரி சித்தரிப்பில் ஒளிப்பதிவுக்கோணங்களும் சரி நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் உச்ச்சகட்ட காட்சி அதற்குதேவையான உழைப்பையும் பொருட்செலவையும் அளிக்காமல் எடுக்கப்பட்டது போலப் படுகிறது.

சென்ற சில மாதங்களாக ஆழமான மன இக்கட்டில் இருந்தேன். என் நுண்ணுணர்வைஅவமானப்படுத்தி எரிச்சலூட்டிய சில படங்கள், ‘பருத்தி வீரன்’ ‘கற்றது தமிழ்’போன்றவை, ஊடகங்களால் பெரும் படங்களாக முன்வைக்கப்பட்டமைதான் காரணம். ஹாலிவுட்படங்களை நோக்கி பிரதிசெய்த ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு உத்திகளைஎந்தவிதமான கலைநுட்பமும் இல்லாமல் அசட்டுத்தனமான மிகையுடன் தோன்றியவிதமெல்லாம்கையாண்டு எடுக்கப்பட்ட இலக்கற்ற முதிரா முயற்சிகள் அவை. அவற்றின்இயக்குநர்களின் அசட்டு ஆணவமும் கலை மொண்ணைத்தனமும் மட்டுமே வெளிப்படுபவை. அவைபோன்ற படங்கள் கொண்டாடப்படும் ஒரு சூழல் காலப்போக்கில் தன் கலைமனத்தையே இழக்கநேரும் என்றே நான் அஞ்சினேன்.

நல்ல படைப்பு அடிப்படையில் உண்மையான மனஎழுச்சிகளை ஒட்டி உருவாவது. எத்தனைதொழில்நுட்பச் சரிவுகள் இருந்தாலும் ஆத்மா பங்கப்படாதது. அவ்வகைப்பட்ட படம்‘கல்லூரி’. எளிமையையே வலிமையாகக் கொண்டது. செயற்கையான மன வக்கிரங்களுக்குப்பதிலாக நம்மைச்சுற்றி வாழும் வாழ்க்கையை நம்மைப் பார்கக்ச்செய்வது. ஒரு எளியசமூகம் தன்னைத்தானே பார்க்க, தன் வலிகளை தானே சொல்லிக்கொள்ள , முயல்வதன் விளைவுஇது வெற்றிபெற்றாக வேண்டியவை இவ்வகைப்பட படங்களே. இவற்றின் வெற்றியே நம்மைப்பற்றியபெருமிதத்துடன் நாம் மேலும் எதிர்பாக்கச் செய்யும். குறைகள் இருக்கின்றன,அவற்றை இப்படம் நூறுநாள் ஓடும்போது அம்மேடையிலேயே அலசவேண்டும்.

source: http://jeyamohan.in/?p=111

Tuesday, November 27, 2007

நவம்பர் குளிரும் கலங்கிய கண்களும்….

வருடத்திற்கு 10மாதங்கள் கொளுத்தும் சென்னையில் இன்று காலை மெலிதான குளிரை உணர்ந்தேன். இரவும் குளிரத்துவங்கிவிட்டது. நள்ளிரவில் வந்து குல்பி ஐஸ் விற்கிறவனின் மணியோசை நேற்றிலிருந்து கேட்கவில்லை.காலையில் கோலம் போடும் பெண் தலையில் கம்பளிக்குல்லா அணிந்திருக் கிறாள். .வாசலில் நிறுத்திய வாகனத்தில் காலையில் ஈரம் படிந்திருக்கிறது. எதிர்வீட்டில் இருக்கும் முதியவர் இரவானதும் எப்போதும் திறந்திருக்கும் சன்னலை சாத்துகிறார். வீட்டுக்குள் எப்போதாவது வருகிற சிட்டுக்குருவியைப்போல நம் நகரத்திற்கு குளிர்காலம் வந்திருக்கிறது. முடிந்தால் பின்னிரவில் ஒரு மெது நடை நடக்கலாம். எதிரில் நீங்கள் வந்தால் புன்னகைத்துக்கொள்ளலாம்.


###############################

கமலஹாசனும் எஸ்பி பாலசுப்ரமணியனும் தொலைக்காட்சியில் பாடிக்கொண்டிருக்கிறார்கள். முகம் தெரியாதவர்களின் கைதட்டல் ஒலித்து ஓய்கிறது.ஏக் துஜே கேலியேவில் ஒரு சோகப்பாடல். கண்கலங்குகிறது.

ஒருமுறை வெயில்காலத்தில் வடபழனி பேருந்துநிலையத்தில் கேட்ட பாடலைப்பாடியவர்... கண்தெரியாத ஒரு பெண்...'கண்கள் இரண்டும்' என்று உன்னைக்கண்டு பேசுமோ'என்று கீச்சுக்குரலில் துவங்கும் பழைய பாடல். சில்லறை கொடுக்கலாம் என்று எடுத்துக் கையில் வைத்திருந்தேன். பேருந்து கிளம்பும் நேரம்வர நடத்துனர் விரட்ட பாதிப் பாடலுடன் அவள் இறங்கி வெயிலில் நடந்துபோனாள். கண்கலங்கியது.

ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் நல்ல குடிபோதையில் நண்பர் பாடிய 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது.'. என்று பாடத்துவங்கி பாதியில் அழுதார். ஏனோ கண் கலங்கியது.

ஊரிலிருக்கும் அப்பாவிடம் எனது பையன் பாட்டுப்பாடு என்று கேட்க அவர் நான் சின்னவனாகத் தூளியில் இருக்கையில் பாடியதாக 'சிங்காரப்புன்னகை கண்ணாரக்கண்டாலே..' என்று குரலுடைந்து பாடினார். கண்கள் கலங்கி வழிந்தன.

பயணத்தில் சிலநேரம். தூக்கம் வராத இரவுகளில் எப்போதாவது...அழவைக்கும் பாடல்கள் உன்னிடமும் இருக்கிறதா நண்பா?

(இணையத்தில் மேய்ந்தபோது கண்ட இவ்வரிகளை எழுதியது ஒளிப்பதிவாளரும்,விகடனில் 'உலக சினிமா' எழுதிவரும் செழியன் அவர்கள்)

Thursday, November 22, 2007

இரத்த ஞாயிறு(Bloody Sunday)..திரைப்பார்வை


இந்தப்படம் 2002-ம் ஆண்டே வெளிவந்திருந்தாலும் எனக்கு இப்போதுதான் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.1972-ம் ஆண்டு அயர்லாந்து மனித உரிமை அமைப்பினர் நடத்திய ஒரு அமைதிப்பேரணியில், இங்கிலாந்து ராணுவத்தினர் நடத்திய கொடுரமான தாக்குதலை,அந்த உண்மைச் சம்பவத்தை கதைக்களனாக கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்த மோதலின் போது 27 பேர் சுடப்பட்டார்கள்..அதில் 13 பேர் கொல்லப்பட்டார்கள்.




வடக்கு அயர்லாந்து நகரமான டெர்ரியில்(Derry) நடந்த இந்த சம்பவத்தை ஒரு documentary style-ல் எடுத்திருக்கிறார் இயக்குனர் Paul Greengrass. அதை மிகச்சிறந்த முறையில் hand-held camera முறையில் படமெடுத்திருக்கிறார் Ivan Strasburg என்ற ஒளிப்பதிவாளர்! close-up காட்சிகளை அருமையாக பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த மாதிரி மக்கள் கூட்டம் அதிகமாக பங்கேற்கும் வெளிப்புற காட்சிகளை படமெடுக்கும் போது அந்த இடத்தின் topography-ஐ ஒரிருமுறை காட்டிவிட்டு close-up-களை நிறைய காட்டுவார்கள். அப்படி காட்டும்போது படம்பார்ப்பவர்களை சிரமப்படுத்தக்கூடாது. இதில் அழகாக செய்திருக்கிறார்கள் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும்.



கலவரத்தின் போது வெளிப்படும் வலி,வேதனை,சோகம் போன்றவற்றை அற்புதமாக இந்தப்படம் வெளிப்படுத்துகிறது. பேரணியின் ஒரு பிரிவினர் தன்னிச்சையாக பிரிந்து சென்று தாக்குதலை ஆரம்பிக்கும் அந்த mob psychology-ஐ கூட இயல்பாக காட்டுகிறார்கள். அங்கங்கு சில பிரச்சார நெடிகளும், நாடகத்தன்மைகளும் இருந்தாலும் ஒரு நல்லப் படம் பார்த்த திருப்தியை அளித்தது.இந்த படம் 2002-ம் ஆண்டு பெர்னிலில் நடந்த திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை பகிர்ந்துகொண்டது

Wednesday, November 14, 2007

இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி பேசியது...

சுப்ரபாரதிமணியனின் தேர்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலான

" THE LAST SYMPHONY "

வெளியிட்டு விழா சமீபத்தில் திருப்பூரில் நடந்தது. அக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் எஸ் எஸ் ஸ்டேன்லி(மெர்க்க்குரிப்பூக்கள், ஏப்ரல் மாதத்தில், புதுக்க்கோட்டையிலிருந்து சரவணன், கிழக்குக் கடற்கரை சாலை ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ) பேசியது::


சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுப்ரபாரதிமணியன் போன்ற நல்ல எழுத்தாளர்கள் தமிழ் திரைப்பட உலகத்திற்குள் வர வேண்டும் என அழைக்கிறேன்.ஆனால் பன்னாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டினரும் தமிழ் திரைப்படங்களில் முதலீடு செய்ய ஆரம்பத்திற்கும் இந்த காலகட்டம் சிக்கலானது. தமிழ் திரைப்படம் மக்களின் தமிழ் வாழ்வும், கலாச்சார அம்சங்களும் கொண்ட படங்களைத் தயாரித்து முன்னோடிகளாக இருக்கும் பதினாறு வயதினிலே முதல் சேது வரையிலான சிறு தயாரிப்பாளர்கள் வரும் வாய்ப்புகள் அடைபட்டு போகும் துர்ப்பாக்கியங்கள் பன்னாட்டு நிறுவன முதலீட்டு முயற்சியில் உள்ளன. சுப்ரபாரதிமணியனின் "சாயத்திரை", "தேனீர் இடைவேளை" போன்ற நாவல்கள் முன்பே ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளன என்பது ஆரோக்கியமான விசயம்.

எனக்கு ஆர்குட் இணைய தளத்தில் அறிமுகமானவர் சுப்ரபாரதிமணியன்.இணைய தளம் போன்றவற்றில் எழுத்தாளர்கள் இயங்குவதும்,இலக்கியம் குறித்தும், திரைப்படத்துறை குறித்தும் விவாதிப்பது இன்றைய எழுத்தாளர்களுக்கு மிகவும் தேவையானது.

வாசிப்பதில் அக்கறை கொண்ட நான் சுந்தரராமசாமியின் நாவலொன்றை படமாக்குகிற ஆசையில் ஆரம்ப கட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். அசோகமித்திரன் , பிரபஞ்சன் போன்றவர்களின் படைப்புகளும் திரைப்படமாகும் நேர்த்தி பெற்றவை. காலம் அதற்கு உதவி புரிய வேண்டும்.

நான் என்னுடைய கதைக்கு பொருத்தமானவர்களை தேர்வு செய்கிறேனே தவிர கதாநாயகர்களுக்குத் தகுந்த மாதிரி கதை அமைப்பதில்லை.

இப்போதுள்ள கதாநாயகர்களிட்மும், தயாரிப்பாளர்களிடமும் படத்தில் நீங்கள் ஒரு டாக்டராக வருகிறீர்கள் அல்லது பொறியாளராக வருகிறீர்கள் என்று சொன்னால் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள். ஆனால் ஒரு ரவுடியாக வருகிறீர்கள் என்று சொன்னால் உடனே கதையைக் கேட்பார்கள் இப்போது ரசிகர்கள் இதைத் தான் விரும்புகிறார்கள் அதற்குத் தகுந்தமாதிரிதான் படத்தின் பெயர்களும் பொறுக்கி, பொல்லாதவன், கெட்டவன் என்று உள்ளன. இதற்கு ரசிகர்கள்தான் காரணம்.

தமிழில் நிறைய நல்ல படங்கள் வரும் போது நாமும் ஒரு இயக்குனராக இருக்கிறோமே என கூச்சமாக இருக்கும். என்னுடைய லட்சியம் நல்ல படம் தர வேண்டும் என்பதுதான். ஆனால் அதற்குப் பொருளாதாரம் வேண்டும் அதனால் இப்போது சம்பாதித்து விட்டு புதுமுகங்களை வைத்து நல்ல படங்களை எடுப்பேன். மலையாளத்தில் மட்டும் நல்ல படங்கள் வருகின்றன என்று சொல்ல முடியாது. தமிழிலும் மிக நல்ல படங்கள் சமீபத்தில் வந்திருக்கின்றன..

நல்ல படங்கள் வரவேண்டுமென்றால் பார்வையாளராகிய நீங்கள் மோசமான படங்களை நிராகரிக்க வேண்டும். நீங்கள் உங்கள் பார்வையை மாற்றும் போதுதான் நாங்கள் மாறுவோம்..

எல்லோரும் திருப்பூர் என்றால் 10,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி தரும் நகரம் என்றுதான் நினைக்கிறார்கள் .ஆனால் அதற்கு வேறு பார்வை உண்டு. பனியனுக்குத் தேவையான அதிநவீன இயந்திரங்களை எல்லாம் தயாரிக்க முடிந்த வெளிநாட்டினரால் பனியனை ஏன் தயாரிக்க முடியவில்லை.அங்கு பனியன் தயாரித்தால் சாயக்கழிவுகளால் அவர்கள் நாட்டில் சுற்றுச்சூழல் சீர்கேடு இருக்கும். சுகாதாரக் கேடு இருக்கும். இதை மனதில் வைத்துக் கொண்டு திருப்பூர் போன்ற நகரங்களைக் குப்பைகூடையாக்கிக் கொண்டுருக்கின்றனர்..திருப்பூரைப் பற்றி நான் ஒரு படம் எடுக்கும் போது இதையெல்லாம் என் படத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்வேன்.. சமூக மனிதனை எனது கதாநாயகனாகக் கொள்வேன். அவன் சமூகத்தில் இருந்து அந்நியனானவனாக இருக்கமாட்டான்..

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60711086&format=html

Wednesday, October 17, 2007

இவனையெல்லாம் அடித்தால் தப்பா?

நேற்று பூந்தமல்லி நெடுஞ்சாலையில் என் இருச்சக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்தேன். பச்சையப்பன் கல்லூரி தாண்டி ஹாரிங்டன் சாலையில் திரும்பினேன்.அப்போது என்னை உரசுவது போல் இரு சக்கர வாகனத்தில் கடும் வேகத்தில் ஒருவன் கடந்தான்.கடந்த சில அடிகளிலேயே இடது புறம் திரும்பி பான்பராக் எச்சிலை காற்றில் துப்பினான். அவ்வளவுதான்.. என் இடது கை, கால், ஹெல்மட்...என் அருகில் குழந்தையை வைத்துக்கொண்டு பயணம் செய்த தம்பதி.. எல்லோர் மீதும் எச்சில் தூறல்."ஏய்.." என்று கத்ததான் முடிந்தது.நொடியில் வாகன நெரிசலில் மறைந்தான்.

இவனையெல்லாம் அங்கேயே சட்டையை பிடித்து நாலு அறை அறைந்தால் தப்பா?

இந்த அதீத எச்சில் துப்பும் பழக்கம்..அதுவும் ஓடும் வாகனத்திலிருந்து எச்சில் துப்பும் பழக்கம் சென்னைக்கே உரித்தான ஒன்றா..இல்லை மற்ற நகரங்களிலும் இருக்கிறதா?

Tuesday, October 9, 2007

சோதிடம் என்ற புண்ணாக்கு ஒரு புரட்டாம்...

சோதிடம் புவியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் தலைவிதியை அந்த நேரத்தில் விண்ணில் காணப்படும் சில குறிப்பிட்ட கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள் ஆகியன தீர்மானம் செய்கின்றன என்று சொல்லுகிறது. இதனை அறிவியல் அடிப்படையில் எண்பிக்க முடியாது. சோதிடத்தின் அடிப்படை மத நம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கை போல் வெறும் மனத்தளவிலான நம்பிக்கை மட்டுமே.

சோதிடம் - சாதகம் என்பவை போலி அறிவியலே என்பதை சுருக்கமாகக் காண்போம்..

1) சோதிட சாத்திரம் நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் வேறுபடுகின்றன.

2) வெப்ப மண்டல சோதிடம் நெப்தியூன், யுறேனஸ் மற்றும் புளுட்டோ கோள்களைக் கணக்கில் எடுக்கிறது. ஆனால் இராகு கேது கோள்களையும் 27 நட்சத்திரங்களையும் கணக்கில் எடுப்பதில்லை.

3) இந்திய சோதிடம் நெப்தியூன், யுறேனஸ், புளுட்டோ கோள்களைக் கணக்கில் எடுப்பதில்லை. ஆனால் இராகு கேது என்ற கற்பனைக் கோள்களைக் கணக்கில் எடுக்கிறது.

4) சோதிடம் ஞாயிறு குடும்பத்தின் மையம் புவி என்று சொல்வது பெரிய மடமை. அதன் மையம் ஞாயிறு என்பது இன்று அறிவியல் பால பாடம்.

5) சோதிடம் ஞாயிறு போன்ற விண்மீனையும் நிலா போன்ற துணைக் கோளையும் கோள்களாகவே கொள்கிறது.

6) இராசி மண்டலத்தை 12 ஆகப் பிரித்து அவை ஒவ்வொன்றையும் 30 பாகை கொண்ட வீட்டுக்குள் அடைப்பது செயற்கை ஆனது. அப்படிப் பிரிக்கப்படுவதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் கிடையாது. அது முற்றிலும் விதிக்கட்டின்றி (Arbitrary) மனம் போன போக்கில் வகுக்கப் பட்டதாகும். கோள்கள் வௌ;வேறு இராசியில் வௌ;வேறு காலத்தைச் செலவிடுகின்றன. பாம்பாட்டி என்ற இராசியை சோதிடம் முற்றாகக் கணக்கில் எடுப்பதில்லை.

7) இராசி உருவங்கள் (மேடம், இடபம்...) வெறும் கண்காட்சியை அடிப்படையாகக் கொண்டவை. வௌ;வேறு தொலைவில் கூட்டமாக இருக்கும் நட்சத்திரங்கள் பண்டைய மனிதனுக்கு ஆடு, மாடு, சிங்கம், நட்டுவக்காலி போன்ற தோற்ற மயக்கத்தைக் கொடுத்தன. அந்தத் தோற்றத்தை வைத்து அந்த இராசிகளுக்கு உண்மையான ஆடு, மாடு, சிங்கம், நட்டுவக்காலி போன்றவற்றின் குணாம்சங்களை மாடேற்றினர்! அறிவியல் வளர்ந்து விட்ட இந்தக் காலத்திலும் அறிவிலிகளான சோதிடர்கள் தங்கள் மூடத்தனத்தைக் கைவிடாது தொடர்ந்து சோதிடத்தைக் குரங்குப் பிடியாகப் பிடித்து வருகின்றனர்.

8) சோதிடத்தில் ஒரு குழந்தை பிறந்த நேரம் மற்றும் இடம் முக்கியமானது. ஆனால் குழந்தையின் பிறப்பு என்னும் பொழுது அது குழந்தை கருவறையில் இருக்கும் பொழுது உயிர் ஏற்பட்ட நேரமா? பிறக்கும் பொழுது தலை வெளியில் தெரிந்த நேரமா? கால் தரையில் படும் நேரமா? மருத்துவச்சி கையில் எடுத்த நேரமா? தொப்புள்கொடி அறுக்கப்பட்ட நேரமா? மருத்துவர் வயிற்றை அறுத்து எடுத்த நேரமா? குழந்தையின் முதல் மூச்சா? அல்லது அழுகையா? இதில் எது என்பதில் சோதிடர்களிடையே கருத்து ஒற்றுமை இல்லை. இரண்டொரு மணித்துளி நேர வித்தியாசம் ஒரு குழந்தை பிறக்கும் சமயத்தில் அடிவானத்தில் எழுகிற இராசி வீடான பிறப்பு (ஜென்ம) இலக்கினம், சந்திரன் நின்ற இராசி வீடான பிறப்பு (ஜென்ம) இராசி, பிறப்புக் காலத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இடம்பெற்று இருந்ததோ அந்தப் பிறப்பு (ஜென்ம) நட்சத்திரம் ஆகியவை வேறு வேறாக மாறி விட வாய்ப்பு இருக்கிறது.

9) புவி தன்னைத்தானே தனது அச்சில் சுற்றும்பொழுது தளம்பல் (றழடிடிடந) ஏற்படுகிறது. அதனால் ஞாயிறு தனது பயணத்தில் புவியின் நடுவட்டக்கோட்டைக் கடக்கும் பொழுது முந்திய ஆண்டைவிட மறு ஆண்டு சற்று மேற்கு நோக்கிக் கடக்கிறது. இந்த வேறுபாட்டை வெப்ப மண்டல சோதிடம் கணக்கில் எடுப்பதில்லை. இரண்டுக்கும் இடையிலான இந்த வேறுபாடு இன்று ஏறத்தாழ 24 பாகையை (24 நாள்களை) எட்டி இருக்கிறது.

(10) ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் விண்ணில் வலம் வரும் கோள்கள், இராசிகள் மற்றும் விண்மீன்களின் இருக்கைகள் அந்தக் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்கிறது என்றால் அந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்ன? பல கோடி கல் அப்பால் இருக்கும் கோள்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசையா? பல நூறு ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள நட்சத்திரங்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசையா? ஆம் என்றால் அந்தக் குழந்தைக்கு அண்மையில் உள்ள பருப்பொருள்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசை ஏன் கணக்கில் எடுக்கப்படுவதில்லை?

(11) புவியின் நடுவட்டக்கோட்டுக்கு அண்மித்த நிலப் பகுதிகளிலேயே சோதிட சாத்திரம் தோற்றம் பெற்றது. இதன் தார்ப்பரியம் என்னவென்றால் நடுவட்டக்கோட்டுக்கு வடக்கே அலஸ்க்கா, நோர்வே, பின்லாந்து, கிறீன்லாந்து போன்ற நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்குச் சாதகம் கணிப்பது முடியாத செயலாகும். காரணம் இந்த நாடுகளில் பகல் இரவுகள் பல கிழமைகள் பல மாதங்கள் தொடர்ச்சியாக நீடிக்கிறது. இதனால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அடிவானத்தில் 2 மணித்தியாலத்துக்கு ஒரு இராசி என எழும் இராசி மண்டலங்களையும் கோள்களையும் பார்க்க முடியாது. இதனால் சோதிடத்தின் அடித்தளமே ஆட்டங்கண்டு விடுகிறது.

(12) மனிதன் பிறந்த புவி;க் கோளையும் அதன் தாக்கத்தையும் சோதிட சாத்திரம் அறவே கணக்கில் எடுப்பதில்லை. புவியும் ஒரு கோள் என்பது சோதிட சாத்திரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதே அதற்கான ஏது ஆகும்.

கீழே கொடுக்கப்பட்ட அட்டவணை ஈர்ப்பு விசையின் பெறுமதியை (செவ்வாய்க் கோளோடு ஒப்பிடும் பொழுது) காட்டுகிறது. செவ்வாய்க் கோள் விதிக் கட்டின்றித் தெரிவு செய்யப்பட்டது. செவ்வாயோடு ஒப்பிடுவது சோதிடம்; அந்தக் கோளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாகவே! .
ஈர்ப்பு விசை ஈர்ப்பு விசையின் பெறுமதி
தாய் 20
மருத்துவர் 06
மருத்துவமனை 500
ஞாயிறு 854,000
நிலா 4,600
புதன் .38
வெள்ளி 27
செவ்வாய் 1
வியாழன் 46
யுறேனஸ் 0..1
நெப்தியூன் 0.03
புளுட்டோ 0.059
வால்மீன் 0.00001
ஈர்ப்பு விசை கோள்கள் புவிக்கு அருகில் வரும் பொழுது கணிக்கப்பட்டதாக கொள்ளப்பட்டது. மேலதிகமாக கொள்ளப்பட்ட அனுமானங்கள் (யுளளரஅpவழைளெ)-
குழந்தையின் எடை - 3 கிலோ
தாயின் எடை - 50 கிலோ
மருத்துவர் எடை - 75 கிலோ
மருத்துவமனைக் கட்டடத்தின் எடை- 2.1 தர 1012
தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் உள்ள தொலை- 0.1 மீ
மருத்துவருக்கும் குழந்தைக்கும் இடையில் உள்ள தொலை- 0.3 மீ
மருத்துவமனையின் மைய எடைக்கும் குழந்தைக்கும்இடையில் உள்ள தூரம் - 6.1 மீ
மேலே கொடுக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் குழந்தை பிறக்கும் பொழுது தாய், மருத்துவர் மற்றும் மருத்துவமனைக் கட்டடம் மூலமாக இடம் பெறும் ஈர்ப்பு விசையின் தாக்கம் (force of gravity) சோதிடம் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் செவ்வாய்க் கோளை விட முறையே 20, 6 மற்றும் 500 மடங்கு கூடுதலாக இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். எனவே ஒரு சோதிடர் ஒரு குழந்தையின் சாதகத்தை ஈர்ப்பு விசை அடிப்படையில் தயாரித்தால் கோள்களை மட்டுமல்ல விண்வெளியிலும் மண்ணிலும் காணப்படும் ஏனைய பருப்பொருள்களையும் கணக்கில் எடுக்க வேண்டும்.
ஈர்ப்பு விசை அல்ல அந்த ஆற்றல் மின்காந்த ஆற்றல் (electro-magnetic energy) என்று சோதிடம் சொல்லுமானால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அதன் மீது பருப்பொருள்கள் செலுத்தும் மின்காந்த ஆற்றல் செவ்வாய்க் கோளில் இருந்து வெளிப்படும் மின்காந்த ஆற்றலோடு ஒப்பிடும் பொழுது பின்வருமாறு காணப்படும்.

பருப்பொருள் மின்காந்த ஆற்றல்
ஞாயிறு 3 தர 109
200 வட்ஸ் மின்குமிழ் 9 தர 106(2 மீ தொலைவில்)முழு நிலா 7,600
புதன் 0.4
வெள்ளி 4.4
செவ்வாய் 1
வியாழன் 0.8
சனி 0.1
யுறேனஸ் .0004
நெப்தியூன் .00005
புளுட்டோ 8 தர 10 - 3
மேலே கொடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 200 வாட்ஸ் ஆற்றல் உடைய ஒரு மின்குமிழியில் இருந்து வெளிப்படும் மின்காந்த ஆற்றல் செவ்வாய், புதன், வெள்ளி போன்ற கோள்களைவிட பல ஆயிரம் மடங்கு வலுவானது!
குழந்தை பிறக்கும் பொழுது அதனைப் பாதிப்பது கோள்களின் ஈர்ப்பு விசையும் அல்ல மின்காந்த விசையும் அல்ல என்றால் பின் எதுதான் அந்தக் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்கிறது என்பதைச் சோதிடர்கள் தெளிவாக விளக்க வேண்டும். பிறப்பதற்கு முன்னரே முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினை காரணமாக ஒவ்வொரு உயிரின் தலைவிதி தீர்மானிக்கப்படுகிறது என்று இந்து மதம் சொல்கிறது! அது உண்மையென்றால் ஒரு குழந்தையின் பிறப்பின் பொழுது கோள்கள், நட்சத்திரங்கள், இராசிகள் ஆகியவற்றின் இருக்கை முக்கியமற்றுப் போய்விடுகிறது.

சோதிடம் முற்றிலும் பிழையான அடித்தளத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது என்பதற்கு மேலே எடுத்துக் காட்டியவை மேலதிக சான்றுகளாகும்.
வானியல் பற்றிய அறிவு இன்றிருப்பது போல் பண்டைக் காலத்தில் இல்லாததால் சோதிடர்கள் மனம் போன போக்கில் கோள்கள் பற்றியும் இராசிகள் பற்றியும் இராசி வீடுகள் பற்றியும் எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்ததைப் பெரிய குற்றம் என்று சொல்ல முடியாது. அன்றைய அறிவு அவர்களுக்கு அந்த அளவில் மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய சோதிடர்கள் தொலமி, வராகமிரர் போன்றோர் தங்கள் காலத்தில் எழுதி வைத்ததையே கிளிப்பிள்ளை போல் மனப்பாடம் செய்து அதன் அடிப்படையில் சாதகம் கணித்துப் பலன் சொல்கிறார்கள். இது சோதிடர்களின் உச்ச கட்ட புரட்டு ஆகும்.

source: http://thozharperiyar.blogspot.com/2007/07/blog-post_8530.html

Saturday, October 6, 2007

ஜோதிடம்‍‍‍- என் கேள்வியும் வந்த பதிலும்

செல்லா அவர்களின் பதிவில் நான் இட்ட பின்னூட்டதிற்கு Dr.Bruno அவர்கள் தன் பதிவில் பதிலளித்திருக்கிறார்.அது எனக்கு ஒரு தெளிவை தராததால் மீண்டும் விளக்கம் கோருகிறேன்.

என் கேள்வி:

Greenwich Mean Time- பல முறை மாற்றி அமைக்கப்பட்டது.இலங்கையின் நேரம் கூட சிறிது நாட்களுக்கு முன் மாற்றி அமைக்கப்பட்டது.இது போன்ற சமயங்களில் எல்லா ஜாதகங்களும் மாற்றி எழுதப்படுமா?

http://osaichella.blogspot.com/2007/10/blog-post_8682.html

வந்த பதில்:

Horoscope is written with reference to the Time of Sun Rise. So Change of GMT or the DST will not have any impact on the horoscope.

For example, if you are going in Pandian Express from Egmore to Madurai. If the train starts at 9 PM, and if you eat a biscuit after 30 mintues, then you have eaten the biscuit at 9:30

If the train starts at 8 PM and if you eat a biscuit after 30 minutes, then you have eaten the biscuit at 8:30

http://bruno.penandscale.com/2007/10/faq-on-astrology.html

எனக்கு இன்னும் புரியவில்லை...Time of sun rise ஐ எப்ப‌டி க‌ணிக்கிறார்க‌ள்? GMT அல்ல‌து local standard time ஐ வைத்துதானே? குழந்தை பிறக்கும் நேரத்தையும் நாம் இந்த முறையில்தான் குறிக்கிறோம்.திடிரென்று இதில் அரைமணி,ஒருமணி மாற்றிவைத்தால்,பழைய சூரிய உதய நேரத்தின்படி ஏற்கனவே எழுதிவைக்கப்பட்ட ஜாதகங்கள் அனைத்தும் மறுபடியும் மாற்றி எழுதப்படுமா என்பதுதான் நான் அறிய விரும்புவது.

Day light saving time concept உள்ளது என்கிறார் டாக்டர்.புரூனோ.. எல்லாம் ஒரு மாதிரி adjusட் பண்ணி ஒரு குத்து மதிப்பாக ஒரு நேர அளவுகோலை ஏற்படுத்துவது...அப்படிதானே டாக்டர்?

Biscuit உதார‌ண‌ம் ஒரு பிஸ்கோத்து...வேறு எதாவ‌து சொல்லியிருக்க‌லாம்.

Thursday, October 4, 2007

கொஞ்சம் சிந்திப்போமா சகோதரிகளே...?

சமீபத்தில் நண்பரொருவர் புதிதாக ஆரம்பித்த (Fancy Store)கடைக்குச் சென்றிருந்தேன்.நண்பர் சில சாமான்களை அடுக்கிக் கொண்டிருக்க,நானும் உதவலாமே என்ற எண்ணத்தில் சாமான்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.அவை முகப்பூச்சு அழகுக் க்றீம்கள்.சில க்றீம்கள் அடங்கியிருக்கும் பெட்டிகளின் பின்பக்கத்தைப் பார்க்க,சின்ன எழுத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு வரி கண்ணில் பட்டது."Not tested on animals" (விலங்குகளின் மேல் இச்சாதனம் உபயோகிக்கப் படவில்லை).வேறு சில நிறுவனங்களின் க்றீமில் அவ்வரி காணப்படவில்லை. அன்று முழுவதும் அவ்வரியே என் மனதில் வந்து போக,அது என்ன "Not tested on animals" என ஆராய்ச்சி செய்ய களத்தில் குதித்தேன்.இதற்காக எனக்கு இணையத்தளங்கள் பெரிதும் உதவின.எவ்வளவு கொடூரமான உண்மைகள்...?

மனிதர்களது முகப்பூச்சுக்காக என்னென்ன கொடுமைகளை ஒன்றும் அறியா விலங்குகள் அனுபவிக்க நேரிடுகின்றன?அந்த வேதனைகளை நீங்களும் சற்றுப் படித்துப் பாருங்கள்.

விலங்குகளின் மீது திணிக்கப்படும் அமிலக் கொடுமைகள் :

மனிதர்கள் அன்றாடம் உபயோகிக்கும் பலவித அழகுசாதனங்களிலும் அமிலப் பொருட்கள் கலந்துள்ளன என்று தெரியும்.ஆனால் ஒவ்வொரு அழகுப்பொருளிலும் 50,000 இலிருந்து 60,000 வரை அமிலக்கூட்டுப் பொருட்கள் அடங்கியுள்ளன தெரியுமா...?ஆனால் பலருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால் இந்த அபாயகரமான அமிலக்கூட்டுக் கலவைகள் ஆயிரமாயிரம் முயல்கள்,குரங்குகள், எலிகள்,அணில்கள்,பன்றிகள் மீது மிகவும் கொடூரமான முறையில் பரிசோதிக்கப்படுகின்றன.பரிசோதனைகளின் போது அவற்றின் கண்கள் குருடாக்கப் படுகின்றன.உறுப்புக்களை எரித்து,அரித்து விடும் அமிலங்கள் வாய்க்குள் ஊற்றப்படுகின்றன.

கொடூரமான சில பரிசோதனைகள் :

அழகு சாதனங்களின் முடிசூடா மன்னியான உதட்டுச் சாயம் எல்.டி 50 முறையில் அதாவது Lethal dose என்ற முறையில் 1927ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வருகின்றன.இந்த லிதல்டோஸ் முறையில்,ஆசனிக் என்ற தீங்கு விளைவிக்கும் அமிலத்தை முயல் போன்ற பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் விலங்குகளின் வாயில் ஒரு குழாயை நுழைத்து அதில் ஊற்றி பரிசோதனை செய்யப்படுகின்றது.இதனால்,அவ்விலங்குகளின் கண்களிலிருந்தும் வாயிலிருந்தும் இரத்தம் கசிந்து விடுகின்றன.அல்லது வாழ்நாள் முழுவதும் பக்கவாத நோய் தாக்கி அவதிப்பட்டு இறந்து விடுகின்றன.

நாம் தலைக்குத் தேய்த்து தலைமுடியை பளபளவென்று வைத்துக்கொள்ள உதவும் ஷாம்புக்கள்,கண்களை அழகுபடுத்தும் மஸ்கராக்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன தெரியுமா?இந்த வகை பரிசோதனைகளை குருட்டுப்பரிசோதனைகள் என்கிறார்கள்.
இதில் கருணை,இரக்கம்,அன்பு சிறிதளவேனும் இன்றி விலங்குகளின் கண் இமைகளை கத்தரித்து எடுத்து விடுகிறார்கள்.பின் கண்களைப் பெரிதாக்குவதற்காக,அவைகள் கண்களை மூடாமல் இருக்க அவற்றின் கண்மேல் பகுதியை கிளிப் போட்டு நெற்றிப் பகுதியோடு இணைத்து விடுகிறார்கள்.தலையைத் திருப்பாமல் இருக்க சுவரோடு ஒரு உலோக பெல்ட் போட்டு விடுகிறார்கள்.

அதன் பின் ஆரம்பிக்கும் கொடுமைகள்.விதவிதமான அமிலக்கலவைகள் கண்களில் ஊற்றும் போது கதறித் துடிக்கும் இம் மிருகங்களின் கண்களிலிருந்து வெளிப்படும் இரத்தத்தை பரிசோதனைக்கூடத்தில் பரிசோதனை செய்து அழகுசாதனங்களில் அவற்றை உபயோகப்படுத்துவதால் மனிதர்களுக்குத் தீங்கு விளையுமா,விளையாதா எனக்கண்டுபிடிக்கப் படுகின்றன.ஆனால் அவ்விலங்குகளோ மருத்துவ உதவி ஏதுமின்றி,இரத்தம் கக்கி மடிகின்றன.

இதற்கான தீர்வு என்ன ?

PETA (People for Ethnic Treatment of Animals) போன்ற விலங்குகளின் பாதுகாவலர்களின் எதிர்ப்புக்குரலால் சிந்திக்கத் தொடங்கியவர்களின் சட்டம் ஒன்று அமுல்படுத்தப் பட்டிருக்கின்றது.அதாவது எல்லா அழகு சாதனங்களிலும் ஒரு வாக்கியம் இருக்க வேண்டும்.
"இச்சாதனம் விலங்குகளின் மேல் பரிசோதிக்கப்பட்டதல்ல"

எனவே சகோதரிகளே !அடுத்த முறை உங்களுக்குப் பிடித்த மேக்-அப் பொருட்கள் வாங்கும் முன் அந்தப் பொருளில் "விலங்குகளின் மேல் பரிசோதிக்கப் படவில்லை" என்ற லேபிள் உள்ளதா என்று பார்த்து வாங்கவும்.இல்லையென்றால் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத (Herbal) அழகுசாதனங்கள் வாங்கவும்.இதனால் அவற்றை உபயோகிக்கும் போது பரிதாபமாக வலியினால் கதறும் விலங்குகளின் குரல் உங்களை உலுக்காதல்லவா..?!

குறிப்பு: இந்த பதிவு நண்பர் ரிஷான் ஷெரீப் என்பவரின் பதிவிலிருந்து,அவருடைய அனுமதியுடன் இங்கு மறுபதிவு செய்யப்படுகிறது.மூலத்திற்கு இங்கு செல்லவும்:

http://rishanshareef.blogspot.com/2007/10/blog-post.html

Wednesday, October 3, 2007

அமெரிக்க கூலிப்படை-Blackwater

அமெரிக்காவின் அடியாள் படையில் முக்கியமானது இந்த ‘பிளாக் வாட்டர்’ (Blackwater- private military and security company) தனியார் ராணுவ கம்பெனி. காசு கொடுத்தால் போதும்..எங்கு வேண்டுமானாலும் இறங்கி அடித்து நொறுக்குவார்கள்.



எரிக் பிரின்ஸ் என்பவரால் அமெரிக்காவில் உள்ள நார்த் கரோலினாவில் 1997-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த தனியார் ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு, வருடத்திற்கு 40,000 பேருக்கும் அதிகமாக பயிற்சி தருவதாக கூறப்படுகிறது.

எரிக் பிரின்ஸ் ஒரு முன்னால் அமெரிக்க கப்பற்படையின் கமாண்டோ ஆவார்.இந்த நிறுவனம் தன்னை ஒரு தொழில்முறை ராணுவம் என்றும்,சட்ட ஒழுங்குகளை அமல்படுத்துவது, பாதுகாப்பு மற்றும் போர் நடைபெறும் இடங்களில் அமைதிப்படையாகவும் செயல் படுவதாகவும் சொல்லிக்கொள்கிறது.இந்த தனியார் ராணுவத்தில் அமெரிக்கர்கள் அல்லாது கொலம்பியா,சிலி,தென் ஆப்ரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்களும் பணத்திற்காக பணியாற்றுகிறார்கள்.



தற்போது இதன் தீவிரமான செயல்பாடுகள் இராக்கில் நடைபெற்று வருகின்றன.இராக்கிற்கான அமெரிக்க தூதர், அங்கு பயணம் செய்யும் அரசு அதிகாரிகளின் பாதுகாப்பு, மற்றும் சில பாதுகாப்பு நடவடிக்கைகளும் இந்த நிறுவனத்திடம்தான் ஒப்படைக்கப் பட்டுள்ளது.இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள்தான் இப்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.இராக்கிய பாதுகாப்பு படையினரோடும், பொதுமக்களிடமும் அத்துமீறலில் இறங்கியதாகவும் கடும் குற்றச்சாட்டுக்கு எழுந்துள்ளது

சென்ற மாதம் பாக்தாதில் நடைபெற்ற ஒரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் 11 இராக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். அதில் இந்த ‘பிளாக் வாட்டர்’ கடுமையான குற்றச்சாட்டுக்கு ஆளானது.ஒரு முறை இராக்கிய துணை அதிபரின் மெய்காப்பாளரை ‘பிளாக்வாட்டர்’ வீரர் ஒருவர் குடிபோதையில் சுட்டுவிட்டார்.அந்த வீரர் மீது எந்த ஒரு வழக்கும் பதியப் படாமல் இராக்கை விட்டு அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டார். இராக்கில் நடைபெற்ற 195 மோதல் சம்பவங்களில் இந்த ‘பிளாக்வாட்டர்’ படைதான் துப்பாக்கி சூட்டை 163 முறை முதலில் துவக்கியுள்ளது.



இராக்கின் பலூஜாவில் இந்தக் கூலிப் படையின் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டு அதில் இரண்டு பேரின் உடல்கள் பாலத்தில் தொங்கவிடப்பட்டன. அதைத் தொடர்ந்து நடந்த அமெரிக்க படையின் பதிலடியில் ஏகப்பட்ட இராக்கிய பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். எண்ணற்றோர் அகதிகளாக இடம் பெயர்ந்தார்கள்.

பெரும்பாலான மோதல்களில் ‘பிளாக்வாட்டர்’படை ஒடும் வாகனங்களில் இருந்து சுட்டிருக்கிறார்கள். எத்தனை பேர் இறந்தார்கள் என்ற கணக்கையும் இவர்கள் எடுப்பதில்லை.காயம் பட்டவர்களுக்கு உதவுவதும் கிடையாது.

ஆப்கனிலும் இவர்களின் செயல்பாடுகள் நடந்து வருகிறது. இவர்களின் விமானிகள்
எந்த ஒரு விதிமுறைகளையும் கடைபிடிப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது.2004-ல் ஆப்கனில் இரண்டு அமெரிக்க வீரர்கள் விமான விபத்தில் கொல்லப்பட்டதற்கு ‘பிளாக்வாட்டர்’ விமானிகளும்,அவர்கள் விமானமும்தான் காரணம் என்று செய்திகள் கூறுகின்றன.



வெளிநாட்டில் மட்டுமல்லாமல் அமெரிக்காவின் நியு ஆர்லியன்ஸ் நகரிலும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டபோது மக்களின் அதிருப்தியை பெற்றது. அவர்கள் அதிநவீன ஆயுதங்களோடும், லூசியானா மாகாணத்தின் பாதுகாப்புத் துறையின் ‘பேட்ஜ்’களை மார்பில் அணிந்திருந்ததும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் லூசியானா மாகாணத்தின் கவர்னரின் அனுமதியோடு புயல் நிவாரண பணிகளைத்தான் தாங்கள் செய்வதாக அந்த நிறுவனம் சொன்னது.

FBI இவர்கள் சம்பந்தமான குற்றச்சாட்டுகளை இப்போது விசாரணையை துவக்கியுள்ளது. இந்த விசாரணையின் லட்சணம் எப்படியிருக்கும் என்பதை ஓரளவுக்கு யூகிக்கலாம். இருந்தாலும் அமெரிக்காவிலும்,உலகின் பல பகுதிகளிலும் இந்த கூலிப்படைக்கு எதிர்ப்பு வரத்தொடங்கி விட்டது.



ஆனால் இந்நிறுவனத்தின் தலைவர்கள்,தங்கள் வீரர்கள் எப்போதுமே சரியான மற்றும் தேவைப்படும் நடவடிக்கைகளைத்தான் எடுப்பார்கள் என்று கூறுகிறது.

இந்த நிறுவனம் 2001-லிருந்து அமெரிக்க அரசிடமிருந்து ஒரு பில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டியிருக்கிறது.2004-2006 ஆண்டுக்காக மட்டும் அமெரிக்க அரசிடமிருந்து 832 மில்லியன் டாலர்களை தன் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பெற்றிருக்கிறது.

அமெரிக்கா இப்போது நாடு பிடிக்கும் பணியையும் outsourcing முறையில் ஆரம்பித்திருப்பதாக தெரிகிறது.

குவைத்தை முழுங்கியாகிவிட்டது…ஆப்கன் பிடியில் உள்ளது…இராக்கில் வேலைகள் நடை பெறுகின்றன..இரானும்,வடகொரியாவும் project list-ல் உள்ளன.

ஆகவே ஆயுதங்கள் காத்திருக்கின்றன ஆட்களுக்காக…!

Tuesday, September 11, 2007

எதிர்காலத்தில் சென்னை-படங்கள்

இந்தப் படங்கள் junk mail-ல் எனக்கு வந்தன. பார்ப்பதற்கு என்னவோ நன்றாகவே இருக்கின்றன..இந்த அழகியப் படங்களுக்கு அடியில் எத்தனை ஊழல் பெருச்சாளிகள் ஒளிந்திருக்கின்றனவோ!












Wednesday, September 5, 2007

கவிஞர் சினேகனுடன் ஒரு திடீர் சந்திப்பு.



என் நண்பர்கள் சிலர் கவிஞர் சினேகனை ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கப் போனபோது நானும் உடன் செல்ல வேண்டிவந்தது.

தோழா தோழா , அவரவர் வாழ்க்கையில் (படம்:பாண்டவர் பூமி), ஆடாத ஆட்டமெல்லாம் (படம் : மௌனம் பேசியதே) பருத்திவீரன், ராம் போன்ற படங்களில் கருத்தாழமிக்க பாடல்களையும்,…கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஒடிப்போலாமா? போன்ற உலகப் புகழ் பெற்ற பாடல்களையும் எழுதியவர். மிகவும் இளஞராக இருந்தார். கிடைத்த சந்தர்ப்பத்தில் நானும் சில விளக்கங்களைக் கேட்டேன். அவர் கருத்துக்களுடன் முழுக்க முழுக்க ஒத்து போகிறோமோ இல்லையோ அவர் சிரித்த முகத்துடன்,மிக நம்பிக்கையுடன் பதிலளித்த விதத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

“அதென்ன ‘டைனமிக் திருமணம்’? எதற்கு அந்த ‘கட்டிப்புடி’ திருமண வாழ்த்து கலாட்டக்கள்..என்ன சொல்ல வருகிறீர்கள்?”

“இந்த ‘கட்டிப்புடி’ விசயம் மட்டுமே எல்லோருக்கும் தெரிவது மிகவும் வருத்தத்துக்குரிய விசயம்..இது சில ஊடகங்கள் செய்த வேலை. இதை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் முதலில் எங்கள் அமைப்பின் நோக்கத்தினை புரிந்து கொள்ள வேண்டும். Dynamic Self Awakening என்ற இந்த அமைப்பு (http://www.dynamicdsa.com)15 ஆண்டுகளுக்கு மேலாக செயல் பட்டு வருகிறது.மலேசியாவில் ஆரம்பிக்கப்பட்டு, இப்போது சென்னையிலும், தமிழகத்தின் பல ஊர்களிலும் கிளை பரப்பி செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் மனிதர்களை, தங்களை பற்றி தாங்களே அறிந்து கொள்ளச் செய்வது, அதன் மூலம் மன வலிமை கூடி மொத்த சமூகத்திற்கும் பயனுள்ளதாக மாற்றுவது,மூட பழக்க வழக்கங்களை ஒழித்து மனித சமூகத்தை நாகரீக அமைப்பாக மாற்றுவது.

“இதற்கு எந்த வகையில் நீங்கள் உங்கள் உறுப்பினர்களை தயார் படுத்துகிறீர்கள்?”

“இதற்கென்று பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன. இந்த பயிற்சி ஐந்து நிலைகளுக்கு நடத்தப்படுகின்றன. முதல் நிலை பயிற்சி வகுப்பு மூன்று தினங்கள் எனத் தொடங்கி ஐந்து நிலைகள் வரை இந்த வகுப்புகள் போகின்றன. மூன்று தின முதல் நிலை வகுப்புக்கு ரூபாய் 2000/= வசூலிக்கப் படுகிறது.இதில் உணவு, தங்குமிடம் போன்றவற்றிக்கு ஆகும் செலவும் சேர்ந்து அடங்கும்.பயிற்சி திருப்தி அளிக்காவிட்டால் முழுப் பணமும் திருப்பித்தரப்படும். இது லாப நோக்கத்திற்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் அல்ல.உண்மையில் சொல்ல வேண்டுமானால் இதில் ஆர்வமாக இருப்பவர்கள் கணிசமான அளவில் தங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்து இந்த வகுப்புகளை நடத்தி வருகிறார்கள்.

“சரி.. பயிற்சி பற்றி சொல்லுங்கள்..”

“இது முழுக்க முழுக்க ஒருவர் தன்னைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளும் விதமாக பயிற்சிகள் இருக்கும்.அதன் மூலம் தங்களுடைய மனபலம்,செய்யும் தொழிலின் நேர்த்தி, சமூக உறவு குறித்த பார்வைகள் போன்றவற்றில் மிகப் பெரிய மாறுதல்களை நிச்சயம் உணர்வீர்கள்.இது உறுதி.இந்த பயிற்சிகள் எந்த ஒரு மத,இன,நாடு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நடத்தப்படவில்லை. இது மனிதம் சார்ந்தது.இது ஒரு மாதிரியான self- awakening training .எவரையும் கட்டாயப்படுத்தி இதில் சேர்க்க மாட்டோம். விருப்பமுள்ளவர்களை இணைத்து இப்பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. இந்த பயிற்சிகளின் அனுபவத்தை வார்த்தையால் கூறமுடியாது.ஒரு முறை இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்தால்தான் அதை உணரமுடியும்.

“அதெல்லாம் சரி..இதில் எங்கே வந்தது ‘டைனமிக் மேரேஜ்’..?”

“இந்த பயிற்சிகளில் சமூகத்தை நாம் எப்படிப் பார்க்க வேண்டும்,அதை எந்த வகையில் மாற்ற வேண்டும் எனவும் சொல்லித்தரப்படுகிறது. இந்த அமைப்பினரின் இல்லத் திருமணங்கள் முழுக்க, தந்தை பெரியாரின் சுயமரியாதை திருமண முறைப்படி நடத்தப்படுகின்றன. வேத மந்திரங்கள் கிடையாது,வரதட்சணை கிடையாது. இது போன்ற பல சீர்திருத்தங்கள் இதில் அடங்கும். அதில் ஒரு அங்கமாகத்தான் வாழ்த்துக்களை ஒருவரை ஒருவர் தழுவி பரிமாறிக் கொள்கிறார்கள்.இது தான் இப்போது சர்ச்சைக்குரிய விசயமாகி இருக்கிறது.

“இந்த தழுவுதல் ஒரு சமூக ஒழுக்கப் பிழையை நோக்கி எடுத்துச் சென்று விடாதா?..”

“இல்லை..அப்படி ஆகாது. தழுவுதல் என்பது ஒரு உயிரினச் செயல்.மனிதனும் ஒரு உயிரினமே. தழுவுதலின் போது மனிதர்களிடையே அன்பும்,பாதுகாப்பு உணர்வும் அதிகரிப்பதாக மனவியல் நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். மனிதர்களிடையே இயல்பாக நடைபெற வேண்டிய இந்த தழுவல்கள் ஒரு பாலின உணர்ச்சியாகவும், ஆபாச நடவடிக்கையாகவும் நம் சமூகத்தில் பார்க்கப் படுகிறது. இதை மறுபடியும் இயல்பான ஒரு செயலாக மாற்றவே இந்த முயற்சி. இதை சரியான முறையில் பார்ப்பதற்கும்,செயல் படுத்துவதற்கும் இந்த பயிற்சி வகுப்புகளில்
சொல்லித்தரப்படுகிறது. எங்கள் அமைப்பினர் இதில் தெளிவாகவே உள்ளார்கள். இதை ஒரு செக்ஸ் நடவடிக்கையாக பார்ப்பது அவரவர் மனோபாவத்தை பொறுத்தது”

“இந்த பிரச்சனையின் போது வந்த எதிர்ப்பை எப்படி சமாளித்தீர்கள்?”

“அவை ஒரு மோசமானத் தருணங்கள்…எல்லாத் திசைகளிலிருந்தும் எதிர்ப்பு வந்தது. ஏன் நான் இருக்கும் சினிமாத் துறையிலிருந்தும் கண்டனங்கள் வந்தன. நான் வசிக்கும் தெரு முழுக்க என்னைக் கண்டித்து சுவரொட்டிகள். என் வீட்டிற்கே கூட்டமாக வந்து போராடப்
போவதாக ஒருவர் அறிவித்திருந்தார். எல்லாவற்றையும் சமாளித்தேன். அதற்கான மனவலிமையை நான் சார்ந்திருக்கும் இந்த அமைப்பின் பயிற்சிகள் எனக்கு அளித்தன.”


“தங்களின் சில பாடல்களுக்கு எதிர்ப்பு வந்ததே…குறிப்பாக..’கல்யாணந்தான் கட்டிகிட்டு’…இந்த மாதிரி பாடல்களை எந்த நிர்பந்த்தில் எழுதுகிறீர்கள்?”

“திரைப்பட பாடல்கள் என்பது இயக்குனரின் கதைக்கும்,கற்பனைக்கும் ஏற்றவாறு எழுதப்படுவது. வியாபார ரீதியில் எழுதப் படுவது. .இதே சினிமாவில் தான்`அவரவர் வாழ்க்கையில்’ போன்ற பாடல்களையும் எழுதியிருக்கிறேன்.என் தீவிர எழுத்துக்களை என்னுடைய கவிதை நூல்களில் தேடுங்கள்.”

இதற்கு பின்னால் எங்கள் பேச்சு பல திசைகளிலும் போனது. அதில் அவர் அ.தி.மு.க வில் சேர்ந்தது பற்றியும், அவர் சந்தித்த எதிர்ப்புகள் எப்படி ஒரு சாதீய பிரச்சனையாக பரிணாம வளர்ச்சி அடையப் பார்த்தது குறித்தும் பேசினோம். அதற்கு கவிஞர் சினேகன் அளித்த பதில்கள் அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை. கவிஞர் சினேகனின் சில திரைப்பட பாடல்கள் சர்ச்சைக்குரியதாக இருப்பது போலவே அவருடைய கருத்துகள் சிலவும் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது.ஒரு முறை ஆபாசமாக எழுதும் பெண் கவிஞர்களை சென்னை அண்ணா சாலையில் வைத்து கொளுத்த வேண்டும் என்று கூறியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ச.மனோகர்.

sa.manoharan@gmail.com



இது சம்பந்தமான சுட்டிகள்:

http://www.dynamicdsa.com/home.htm

http://bsubra.wordpress.com/2007/03/19/lyricist-snehan-is-raping-tamil-culture-by-innovative-marriage-ceremonies/

http://www.aaraamthinai.com/cinema/cini-katturai/june30katturai.asp

Saturday, September 1, 2007

Chak De! India..திரைப்பார்வை




இந்தியா-பாக்கிஸ்தான் இடையே ஹாக்கி உலகக்கோப்பை இறுதி ஆட்டம்-ஷாரூக் பெனால்ட்டி ஷாட்டை தவறவிடுகிறார்-இந்தியா தோல்வி-ஷாரூக் துரோகி என குற்றச்சாட்டு-ஷாரூக் ஏழு வருடம் எங்கும் தென்படவில்லை-பெண்கள் ஹாக்கி அணிக்கு பயிற்சியாளர் வேலைக்கு யாருமே தயாரில்லாத சூழ்நிலையில் ஷாரூக் ஏற்றுக்கொள்கிறார்-பயிற்சி கொடுத்து பெண்கள் ஹாக்கி உலகக்கோப்பையை வென்று வருகிறார்.

இது Chak De! India ! திரைப்படத்தின் கதை.

இப்படத்தின் கதை பெரிதாக கவரவில்லை. ஆனால் இப்படத்திற்கான shooting script-ஐ எப்படி தயார் செய்திருப்பார்கள் என்ற பிரமிப்பு நம்மை வியப்படையச் செய்கிறது. ஒரு விறுவிறுப்பான கிரிக்கெட் ஆட்டத்தையோ அல்லது ஹாக்கி ஆட்டத்தையோ முழு விறுவிறுப்புடன் நேரில் கண்டுகளிக்க முடியும். ஆனால் அதே விறுவிறுப்புடன் ஒரு ஆட்டத்தை செயற்கையாக பிலிமில் கொண்டுவருவது மிகக் கடினம். அதற்கு script எழுதுவது என்பது கடினத்திலும் கடினம்.


ஹாக்கி பயிற்சிக்கு இந்தியாவின் பல பகுதியிலிருந்தும் பெண்கள் வருகிறார்கள். பல மொழி பேசிக்கொண்டு,பல சமுக,பொருளாதார பின்னணியிலிருந்து இவர்கள் வருகிறார்கள். எல்லோருமே அவரவர் மாநிலத்தில் சிறப்பான ஆட்டக்காரர்கள். இவர்களிடையே ஆரம்பத்தில் ஒற்றுமை,புரிந்துணர்வு இல்லாமலிருக்கிறது. ஹாக்கி விளையாட்டு,பயிற்சியாளர்,விளையாடும் பெண்கள்,அவர்களின் உணர்வுகள் இவற்றை களனாக வைத்து திரைக்தையை அமைத்திருக்கிறார் திரைக்கதை எழுதிய ஜெய்தீப் சாஹ்னி. அதை மிகவும் நேர்த்தியாக திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குனர் ஷிமிட் அமின். ஹாலிவுட் படங்களின் ஒளிப்பதிவை இப்படத்தில் பார்க்கலாம்.

விளையாட்டு வீராங்கனைகளாக நடித்த பெண்கள் தங்கள் பாத்திரங்களை உள்வாங்கி நடிதிருக்கிறார்கள்.இதில் நடித்த பல பெண்களுக்கு காமிரா அனுபமே கிடையாது.சில பெண்கள் உண்மையான ஹாக்கி வீராங்கனைகள்.ஷாருக்கானின் நடிப்பு,வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழி மிகவும் அருமை.

நான் ரசித்த சில காட்சிகள்:

1)பயிற்சிமுகாம்.பதிவாளர் கேட்கிறார்.
“எங்கிருந்து வருகிறாய்?”
“ஆந்திர பிரதேஷ்”
“ஓ..மதராஸி…தமிழ்?”
“இல்லை..ஆந்திரா..தெலுகு”
“தெலுகுக்கும் தமிழுக்கும் அப்படி என்னமா வித்தியாசம்?”
“பஞ்சாபிக்கும் பீகாரிக்கும் என்ன வித்தியாசமோ அவ்வளவு வித்தியாசம்”

இந்த காட்சியில் வட இந்தியர்களின் தென்னிந்திய புரிதல்களை இயக்குனர் காட்டியிருப்பது வித்தியாசமாக இருந்தது.

2) பயிற்சியின் போது எதிர்த்து பேசும்,சண்டை போடும் பெண்களை ஷாரூக்
மைதானத்தை விட்டு வெளியேற்றிவிடுகிறார். அவர்களை கண்டுகொள்ளாமல்
மற்றவர்களை ஆட வைக்கிறார். வெளியேறிய பெண்கள் அமைதியாக
விளையாட்டை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நேரம் ஆகஆக
அவர்களால் இருப்பு கொள்ளவில்லை.விளையாடிய கால்கள் அல்லவா..
ஒவ்வொருராக ஷாரூக்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு பயிற்சியை
தொடருகிறார்கள். இந்த இடத்தில் ஷாரூக் ஒரு நீண்ட அறிவுரையெல்லாம்
கொடுக்காமல் ஒரு சைகை மூலம் அவர்களை விளையாட அனுமதிப்பது
ரசிக்கக்கூடியது.

3) இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலியா போய் இறங்குகிறது. அங்கு
ஆஸ்திரேலிய அணியினரும் மற்றவர்களும் பயிற்சி பெறுவதை ஏக்கத்துடன்
இந்திய அணி பார்ப்பதை எடுத்த விதம்.


இந்த படம் சில உறுத்தல்களையும் ஏற்படுத்தியது.

இந்த படம் அமீர்கான் நடித்த ‘லகானை’ நினையூட்டியதை தவிர்க்கமுடியவில்லை. கிரிகெட்டுக்கு பதில் ஹாக்கி ..வித்தியாசம் காட்டுவதற்கு பெண்கள் அணி.. அதிலிருக்கும் அதே தேசபக்தி கலந்த விளையாட்டு. தேசபக்தி ஒரு proved subject என்பதை மறுபடியும் இந்தப் படம் நிரூபித்துள்ளது.

பெண்கள் ஹாக்கி அணி உலகக் கோப்பை போட்டிக்குச் செல்வதை.. எப்படியும்
தோற்கப் போகிறார்கள்…செலவு எனக்கூறி நிறுத்திவிடுகிறார்கள். ஷாரூக் அவர்களிடம் வாதாடி, வேண்டுமானால் ஆண்கள் அணி பெண்கள் அணியோடு மோதி பார்க்கட்டும் என போட்டிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. பெண்கள் அணி தோற்பதாக இக்காட்சி முடிகிறது. இந்த ஆண்கள்-பெண்கள் ஆட்டம் சாத்தியம்தானா? சற்று அதீத கற்பனை போல் தெரிந்தது.


பின்னணி இசை உணர்ச்சிகளை தூண்டினாலும்,சில இடங்களில் திடீரென விழித்துக் கொண்டு வாசித்தது போல் இருந்தது.

சில குறைகள் இருந்தாலும்…குத்து பாட்டுக்களை பார்த்துப்பார்த்து சேர்த்துக் கொண்ட பாவங்களை,இந்த மாதிரி படங்களைப் பார்த்துப் போக்கிக் கொள்ளலாம்.

குறிப்பு: இப்படத்தின் திரைக்கதையை, சினிமா தயாரிப்பாளர்கள்,மாணவர்கள்
மற்றும் சினிமா பற்றிய ஆராய்ச்சியாளர்கள் பார்வையிடுவதற்காக
Beverly Hills- ல் இருக்கும் Oscar Library கேட்டிருக்கிறது.

Tuesday, August 28, 2007

காட்டுமிராண்டித்தனம்..



பீகார் மாநிலத்தின் பகல்பூர் மாவட்டத்தில் ஒரு பெண்ணின் தங்கச் சங்கிலியை திருடி மாட்டிக் கொண்ட ஒருவனை பொதுமக்கள் திரண்டு அடித்து உதைத்தார்கள்.பொது மக்களோடு சேர்ந்து, சட்டப்படி நடக்கவேண்டிய போலீஸும் சேர்ந்து திருடியவனை அடித்து நொறுக்கினார்கள். இதன் உச்சக் கட்டமாக திருடனை போலீசாரே ஒரு மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்து போனார்கள். இது அந்த ஊர் பொதுமக்களின் முன்னிலையிலேயே நடந்திருக்கிறது.திருடனை மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்றது ஒரு சப்-இன்ஸ்பெக்டர் என்று தெரிகிறது.

இது சம்பந்தமாக லல்லு பிரசாத் யாதவ் கூறியது:

“பீகாரில் காட்டு தர்பார் நடப்பதற்கு இதுவே சாட்சி.. பீகாரின் சட்டம் ஒழுங்கு நிலமை முதல்வர் நித்திஷ் குமார் கையை விட்டு போய்விட்டது”

பீகார் முதல்வர் நித்திஷ் குமார் கூறியது:

“இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யப்படும்…சம்பந்தபட்ட போலிசார் மீது
நடவடிக்கை எடுக்கப்படும்”

இந்த காட்சிகளை NDTV தொலைக்காட்சி,அதிர்ச்சி தரும் காட்சிகள் குழந்தைகள் பார்க்க வேண்டாம் என்ற அறிவிப்போடு ஒளிபரப்பியது. என்னதான் அறிவிப்பு செய்தாலும் அந்த கொடுரமான, காட்டுமிராண்டித்தனமான அந்த காட்சிகள் மனதை மிகவும் பாதித்தது. எனவே இந்த மாதிரி காட்சிகளை தவிர்க்க வேண்டும்.தவிர்க்க முடியாத நேரங்களில் இந்த மாதிரி காட்சிகளை ஒரு சில stills ஆக காட்டினால் போதும். தொலைக்காட்சி நிறுவனங்கள் யோசிக்குமா?

Tuesday, August 21, 2007

கலைஞர் அரசும் ஹெல்மெட் தலைகளும்...



ஜுன்/01/2007

கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும்.

ஜுன்/03/2007

ஹெல்மெட் விசயத்தில் பொதுமக்களை இடையூறு செய்ய வேண்டாம் என போலீசாருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

ஆகஸ்ட்/17/2007

ஹெல்மெட் அணியாத 8 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு-
போலீசார் அதிரடி நடவடிக்கை (தினத்தந்தி)

ஆகஸ்ட்/21/2007

இதிலே முடிவெடுப்பது இப்போது அரசின் கையிலே
இல்லை.நீதிமன்ற தீர்ப்பினையும் அரசாங்கம் மதிக்க வேண்டியுள்ளது.
-முதல்வர் கருணாநிதி(தினத்தந்தி)

ஏன் இன்னும் ஹெல்மெட் குழப்பம் தீரவில்லை?? அரசாங்கம் இந்த பிரச்சனையில் என்னதான் சொல்லவருகிறது?

அப்படியே சற்று இதையும் பார்த்துக்கொள்ளுங்கள்:

அரசு ஆணை எண்:1213-லிருந்து சில பகுதிகள்:

G.O.Ms.No.1213
Dated: 13.8.2007

AMENDMENT

In the said rules , after rule 417, the following rule shall be inserted namely:-

“417 – A . Exceptions in wearing Protective headgear (Helmet):-

The provisions of section 129 of the Act providing for compulsory wearing of Protective headgear (helmet) shall not apply to the following categories, namely:-

(i) Persons who belong to “ Meivazhi Sabha “ or “Meivazhi Salai” who wear turban while riding on a motor cycle: and

(ii) “Woman” or “Child” riding in motor cycle as pillion rider.

Explanation:

For the purpose of this rule, “Woman” means a female human being of any age and “Child” means a male human being under twelve years of age.

By Order of the Governor

(S. Malathi)
Secretary to Government

Saturday, August 18, 2007

சென்னை ட்ராபிக்-விழி பிதுங்குகிறது...













நேற்று மைலாப்பூரில் இருந்து என் இரு சக்கர வாகனத்தில் அண்ணா நகர் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆனது. இத்தனைக்கும் நேற்று வார விடுமுறை தினம்..அதுவும் நான் பயணித்த நேரம் பிற்பகல் இரண்டு மணி. எங்கு பார்த்தாலும் வாகனங்கள்..வாகன நெரிசல்கள்.. ஒரு சந்து பொந்து விடாமல். சின்ன சந்துகளிலும் சென்னை நகர போக்கு வரத்து காவற்துரையினரின் தடுப்பு ஏற்பாடுகள். தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு சாலையில் இறக்கி விடப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அதற்கேற்றவாறு சாலை உள் கட்டமைப்பு ஏற்ப்படுத்துவதே இல்லை.அரசு தினந்தோறும் போக்குவரத்து சம்பந்தமாக பல அறிவிப்புகளை,திட்டங்களை கூறி வருகிறது. சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இன்னும் சில வருடங்களில் சென்னை நகரம் கடும் போக்குவரத்து சிக்கலில் மாட்டுவது உறுதி. உங்கள் வாகனத்தை உங்கள் வீட்டிலிருந்து வெளியே எடுப்பது கூட பிச்சனையாகிவிடும்.

அரசாங்கமும்,நாமும் என்னதான் செய்யப் போகிறோம்?



(படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை)

Monday, August 13, 2007

தஸ்லிமா தாக்குதல்-கருத்துரிமைக்கு எதிரான சவால்




தஸ்லிமா நஷ்ரீன் ஐதரபாத் நகரில் தாக்கபட்ட சம்பவம் கருத்துரிமைக்கு எதிரான ஒரு மோசமான அராஜகம்.தாக்குதல் பற்றி MIM தலைவர் அக்பரூதின் ஓவைஸி சொன்னது....

"MLA அந்தஸ்து பற்றி நாங்கள் கவலை படவில்லை.முதலில் நாங்கள் முஸ்லிம்கள்.இஸ்லாத்திற்கு எதிராக பேசுபவர்களை எந்த முறை சாத்தியப்படுகிறதோ அந்த முறையில் எதிர்ப்போம்.அது எங்களின் கடமையும்கூட.."

"மேற்கு வங்கத்தில் வேண்டுமானால் அந்தம்மாவை அனுமதித்திருக்கலாம்...இது ஐதராபாத்..இங்கு இந்த பெண்ணை அனுமதிக்க முடியாது. இந்த தாக்குதல் அந்த பெண்மணிக்கு தேவையான ஒன்றுதான்.."

என்னயா இது? ஐதராபாத் இன்னும் இந்தியாவில் இணக்கப்படவில்லையா? இந்திய அரசியல் சாசனம் அங்கு அமுலுக்கு வரவில்லையா? MLA அந்தஸ்து பற்றி கவலை படவில்லையென்றால் இந்திய அரசியல் சாசனம் பற்றியும் கவலை படவில்லை என்றுதானே அர்த்தம்.பதவி ஏற்பு அன்று செய்த உறுதி மொழிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டாரா இந்த ஆள்? அடிப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறதா என்பதை அரசு விளக்கியாக வேண்டும்.அவருக்கு எது முக்கியம் என அவர் முடிவு செய்யட்டும்.சட்டம் தன் முடிவை எடுக்க வேண்டும்

கருத்து சொன்னதற்காக தாக்கப்படுவதை நியாயப்படுத்தும் இந்த மத அடிப்படை வாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடித்து நொறுக்க வேண்டும்.இல்லாவிட்டால் ஜனநாயகம்,மக்களாட்சி என்று நாம் பீற்றிக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

Monday, August 6, 2007

பதிவர் பட்டறை- ஒரு வருத்தம்

ஒன்றும் இல்லை...கலந்து கொள்ளமுடியாமல் போய் விட்டதே என்றுதான்.

அப்பாடா! நாமும் பட்டறை குறித்த ஒரு பதிவை போட்டு விட்டோம்!

நடத்திக் காட்டிய அனைவருக்கும் பாராட்டுக்கள்.

Friday, August 3, 2007

‘சஜி’யுட மரணம்…

சஜி டேனியல் என் நீண்டநாள் நண்பன். மனைவி, ஒரு பெண் குழந்தை (வயது8), மற்றும் புன்னகையோடும் வாழ்ந்து கொண்டிருந்தவன். இனிமையானவன்.உருப்படியான நகைச்சுவைகளை உதிர்ப்பவன். நேர்த்தியாக உடை உடுப்பான். அவன் மகளோடு விளையாடுவதை பார்த்தால் இரண்டு குழந்தைகள் விளையாடுவது போல் இருக்கும். இவன் வெளியே கிளம்பினால் அந்தக் குழந்தை வீட்டை ரணகளமாக்கிவிடுவாள். முதலில் நாங்கள் வெளியே சென்று சற்றுத்தொலைவில் காத்திருக்க வேண்டும். இவன் பின்பக்கமாக சென்று வெளியேறி, எங்களோடு சேர்ந்து கொள்வான். மோட்டார் சைக்கிளில் நெடும்பயணத்தை மிகவும் விரும்புபவன். ஒரு முறை...அப்போது அவனுக்கு திருமணமாகவில்லை.. தெருமுனையில் உடன் பேசிக்கொண்டிருந்த நண்பர்களை உசுப்பேத்தி அப்படியே, போட்டிருந்த ஒரே உடையோடு மோட்டார் சைக்கிளில் மூணாறு வரை அழைத்துச் சென்றுவந்தவன். உணவு விடுதி,bar எங்கு சென்றாலும் முதலில் அவன் செய்யும் காரியம்..சப்ளை செய்பவரின் பெயரை கேட்டுத் தெரிந்துகொள்வது. அடுத்தமுறை அழைக்கும்போது அவர்களை பெயர் சொல்லியே அழைப்பான். அவனுக்கு தெரிந்தவர்கள் சென்னையின் எந்த மூலையிலும் இருப்பார்கள். தியேட்டர், ஷாப்பிங் மால் எங்கு சென்றாலும், அந்த கூட்டத்திலும் இரண்டு பேர் இவனை கண்டுபிடித்து பேசத் துவங்கிவிடுவார்கள். நாங்கள் எரிச்சலோடு காத்திருப்போம். சில சமயங்களில் ஜீன்ஸ் அணிந்த பெண்களோடு பேசிக்கொண்டிருப்பான். அப்போது நாங்கள் மகிழ்ச்சியோடு காத்திருப்போம். அவனோடு பேசும் நபர்கள் எந்தச் சமூக,பொருளாதார பின்ணனியிலும் இருப்பார்கள். ஒரு முறை நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் பிணம் எரிக்கும் அந்த இளைஞன் இவனைப் பார்த்து "என்னா மச்சி இங்க..?" என்று கேட்டதை பார்த்திருக்கிறேன். ஆங்கில திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பான். அவனுக்கு மிகவும் பிடித்த John Denver-ன் பாடல்களை இனிமையாக பாடுவான் அந்த இனிமையானவன்.

மஸ்கட்டில் சிலவருடங்கள் இருந்தபோது திடீரென அவன் உடல்நிலை மோசமாகி,வீல் சேரில் சென்னை கொண்டுவரப்பட்டான்.Food poison-என்று மஸ்கட்டில் சொல்லியிருக்கிறார்கள். சென்னை கொண்டுவரப்பட்ட சிலமணி நேரங்களிலேயே அது சிறுநீரக கோளாறு என்றும்,இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துவிட்டதாகவும் உடனடியாக dialysis ஆரம்பித்தாக வேண்டும் எனக் கூறிவிட்டார்கள்..மனைவியின் முகம் இருளடைந்தது.

அதன்பின் சுமார் ஒரு வருடகாலம் dialysis -ல் ஓடியது. ஏகப்பட்ட டெஸ்ட், மருந்துகள் என உடலே போர்க்களமாகியது. அதன் பிறகு பலவித போராட்டங்களுக்கு பின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு,கொஞ்சம் அதிக நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு வீடு திரும்பினான். மாடியில் தனி அறை கொடுக்கப்பட்டு,எந்த infection-னும் ஆகிவிடாதபடி பார்த்துக் கொள்ளப்பட்டது. அவனை பார்ப்பதை நாங்களே தடை செய்து கொண்டோம். போனிலும், SMS மூலமாகவும்தான் தொடர்பு.அவனும் DVD, nternet மற்றும் சில உடற்பயிற்சிகளோடு மெல்ல தேறி வந்தான். முழுக்க தேறியவுடன் Goa செல்லலாம் என கூறினான். நிச்சயமாக என்றோம். அப்போது அவன் சொன்னான் 'மோட்டார் சைக்கிளில்..' என்று.

இருந்தும் இரண்டு மாதங்களுக்கு முன் diarrhea மற்றும் pneumonia தாக்கி அவதி பட்டான். கொஞ்ச நாளில் மறுபடியும் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு உடலில் பல்வேறு குழாய்கள் சொருகப்பட்டு,கை கால், தொடை என ஊசிகளால் குத்தப்பட்டு, வீரியமிக்க மருந்துகள் உடலை ஆக்கிரமிக்க, ventilator பொறுத்தப்பட்டு… உடல் எடை 30kg ஆகி, மறுபடியும் dialysis ஆரம்பிக்கப்பட்டபோது அவன் மெல்லிய குரலில் சொன்னது…..

“Beena…leave me in peace..”

போய் சேர்ந்துவிட்டான்!

சஜியின் உடல் ஹாலில் வைக்கப்பட்டிருக்கிறது.போர்டிக்கோவில் எண்ணற்ற செருப்பு ஜோடிகள் கால்களுக்காக காத்திருக்கின்றன. சாலையிலும் ஏகப்பட்ட பேர் நின்று கொண்டிருக்கிறார்கள்.புதிது புதிதாக மக்கள் மலர் வளையங்களோடும், மாலைகளோடும் உள்ளே சென்று திரும்புகிறார்கள். syrian orthodox சர்ச்சை சேர்ந்த அந்த இளம் பாதிரியார் சஜியின் உடலுக்கு பிரார்த்தனை செய்கிறார். பிரார்த்தனை மலையாளத்தில் இருந்தாலும் நன்றாக புரிகிறது.

“சஜியின் இந்த மரணம் ஒரு முடிவல்ல.. இவர் பூமிக்கு வந்த பணி முடித்து அவர் சொர்கத்துக்கு,ஆண்டவனிடத்தில் போகிறார்…எனவே இதை ஒரு துக்கமாக நினைக்காமல் அவரை சந்தோசமாக வழி அனுப்புவோம்..அதற்கான சந்தோசமான கீதங்களை இப்போது பாடுவோம்..”

சர்ச்சில் இருந்து வந்த ஒரு பெண்கள் கூட்டம் இப்போது பாடத்தொடங்குகிறது.

சஜியின் நண்பர்கள் சாலை முழுவதும் வியாபித்துள்ளார்கள். அவ்வப்போது தெருமுனையில் இருக்கும் டீ கடைக்கு சென்று டீ அருந்தி புகைத்துவிட்டும் வருகிறார்கள்.எல்லோர் முகத்திலும் ஒரு சோகம் தெரிகிறது. ஜோக்குகளை உதிர்த்துவிட்டு செயற்கையாக சிரிக்கிறார்கள்.

மதியம் 3மணி வரை கார்கள்,பைக்குகள், மலர்வலையங்கள்... அதன் பின் கீழ்பாக்கம் கல்லறை.

கல்லறை தோட்டம் சமீபத்திய மழையால் குளிர்ச்சியாகவும், பசுமையாகவும் இருந்தது.ஆனால் அந்த இரண்டுமே அங்கு நடைபெறும் சோக விசயங்களுக்கு நடுவே பொருத்தமில்லாமல் இருந்தது.இப்போது முன்னை விட கூட்டம் அதிகம். உறவுகள், நண்பர்கள் என மீண்டும் ஜபங்கள்,பிரார்த்தனைகள். எல்லா முகங்களிலும் சோகம்.கதறும் தாய், கல்லாய் உரைந்து போன மனைவியின் முகம்…உணர்ச்சியில்லாமல் இருந்த தந்தையின் முகம். உணர்வுகளுக்கு மத்தியிலும் ஓடி ஓடி வேலைகள் பார்க்கும் சகோதரர்கள்.

கயிறு கட்டி உடல் இருந்த பெட்டியை குழிக்குள் இறக்கிவிட்டார்கள். சாம்பிராணி தூக்கு போன்ற ஒன்றை அங்கும் இங்கும் ஆட்டியவுடன் குழியில் மண்ணைப் போட்டு மூடினார்கள்.

இப்போது கூட்டம் மெல்லக் கலைகிறது. சிலர் சொல்லிக்கொண்டும்,சிலர் சொல்லிக்கொள்ளாமலும் கிளம்புகிறார்கள்.சஜியின் தந்தை அமைதியாக எல்லோரிடமும் கைகுலுக்கிறார். நாங்கள் நண்பர்கள் அனைவரும் சஜியின் மனைவி பீனாவிடம் சென்று அவளை சமாதான படுத்துவதுமாதிரி பேசினோம்.ஒரு கணவன் இறந்தபிறகு மனைவிக்கு எவ்வளவு கடமைகள் உள்ளன என்பதை பற்றியெல்லாம் நண்பர்கள் எடுத்துரைத்தார்கள்.அதற்கு கண்ணீரோடு அவள் கூறியது…

“ He was never a husband to me…he was the best friend I ever had in my life!”

நான் அவளை தவிர்த்துவிட்டு,அவள் மகளை தேடினேன்.

சற்றுத் தொலைவில் அவள் வயதையொத்த குழந்தைகளோடு….

“inky pinky ponky..”

நான் வெளியே நடந்தேன்.

லேசாக மழை தூறத் தொடங்கியது.

Thursday, August 2, 2007

ரயில் மறியல் செய்தால் கடும் நடவடிக்கை - வேலு எச்சரிக்கை.

ரயில் மறியல் செய்வது, தண்டவாளத்தில் அமருவது என பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டால் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம், கடும் நடவடிக்கை எடுப்போம் என மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் கடந்த சில வாரங்களாக ரயில் பயணிகள் சொல்லொணா துயரத்தை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக சென்னை சென்டிரல், அரக்கோணம் மார்க்கத்தில் மின்சார ரயிலில் பயணம் செய்வோர் பெரும் அவஸ்தையை சந்தித்து வருகிறார்கள்.குறிப்பிட்ட நேரத்திற்கு ரயில்கள் வருவதில்லை. ரயில்களின் நேரத்தை, அதிகாரிகள் திடீர் திடீரென மாற்றியமைத்து வருகின்றனர்.

இதனால் ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் இதுவரை நான்கு முறை போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டனர்.



"பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பல வழிகள் உள்ளன. யாருக்கும் ரயிலை நிறுத்த உரிமை இல்லை. இனிமேல் இதுபோன்ற போராட்டங்களை அனுமதிக்க முடியாது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் வேலு.


எல்லாம் சரி…ஆனால் மக்களுக்கு ஒரு சட்டம், அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா?

எத்தனை முறை அரசியல் கட்சிகள் ரயில் மறியல்,சாலை மறியல் போராட்டங்கள் செய்திருக்கின்றன?

அதுவும் மரத்தை வெட்டி சாலைமறியல் செய்யப்பட்ட விசயம் அமைச்சர் வேலுவுக்கே நன்றாக தெரியும்.

ஏன் அப்போது அதை அவர் கண்டிக்கவில்லை? இப்போது ஏன் இவ்வளவு கண்டிப்பான அறிவிப்பு?

அரசியல்வாதிகளின் போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டவை… நேரடியான மக்கள் போராட்டம் கட்டுப்படுத்தமுடியாதவை என்பதை அரசியல்வாதிகளும்,அரசியல் கட்சிகளும் நன்றாகவே அறியப்பட்டிருப்பதைதான் இது காட்டுகிறது.

Wednesday, July 4, 2007

சினிமா ஷூட்டிங்

சிவகங்கைச் சீமைக்கு ஒரு பயணம்.

போவது ஒரு சினிமா படபிடிப்புக்கு.

அந்தப் பட இயக்குனர் என் நண்பர்.அவரின் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். திருச்சியிலிருந்து மூன்றரை மணி நேரம் பஸ்ஸில் பயணித்து அந்த ஊரை அடைந்தேன்.நான் போவதற்கு முன்பே மொத்த யூனிட்டும் கிளம்பி நகருக்கு வெளியே சென்றுவிட்டது.புரடக்சன் மானேஜர் போனில், நான் தங்கும் விடுதி போன்ற தகவல்களை சொல்லி ஒரு மணி நேரத்தில் தயாராக இருக்கும்படியும்,வண்டி அனுப்புவதாகவும் சொன்னார். சொன்னபடி கார் அனுப்பி படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அழைத்துக்கொண்டார்.

ஓடும் பஸ்ஸில் மாணவர்கள் பாடி,ஆடும் பாடல்காட்சி படமாக்கப்படுகிறது. காட்சி பஸ்ஸுக்கு உள்ளேயும்,வெளியே இருந்தும் மாறிமாறி எடுக்கப்படுகிறது.ஒரு பஸ் வாடகைக்கு எடுக்கப்பட்டு, அதில் மாணவ,மாணவியர் நிரப்பப்பட்டு உடன் பொதுமக்களும் பயணிப்பதாக காட்சி.பஸ்ஸின் மேற்கூறையைச் சிறிது பிரித்து உள்ளே சூரிய வெளிச்சம் வருவது போல் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஒளியைக்கூட, கூட்டி குறைப்பதற்காக சிலர் குடையுடன் பஸ்ஸின் மேற்புறம் அமர்ந்திருக்கிறார்கள். இந்த பஸ் இல்லாமல் நாலைந்து வேன்கள்,கார்கள் மற்றும் படப்பிடிப்பு யுனிட் வண்டிகள் என ஒரு convoy. இந்த வண்டிகள் காமிரா கோணத்தில் மாட்டாமல் பஸ்ஸுக்கு முன்னும் பின்னும் மாறிமாறி வரும்.

சார்..இங்க Low-வா வைக்கமுடியாது”- இது காமிராமேன்


“அப்படியா…சரி மாத்திக்கலாம்”-இது இயக்குனர்.

காமிரா கோணம் மாற்றப்பட்டு “ஒரு மானிட்டர் பாத்துரலாம்”-இது இயக்குனர்.

மானிட்டர் பார்க்கப்பட்டு, பஸ் கிளம்பத் தயாராகிறது.ஒரு ராணுவ பட்டாலியன் மாதிரி எல்லோரும் புயலென கிளம்பி, கிடைத்த வாகனத்தில் தொத்திக்கொள்கிறார்கள்.

“சைலென்ஸ்…சவுண்ட்…காமிரா..”


“ரோலிங் சார்”

“ஆக்சன்”

மொத்த யூனிட்டும் உஷாராகி, நடிகர்கள் உதடசைத்து,உணர்ச்சிகளை முகத்தில் கொண்டுவந்து நடிக்க..இயக்குனர் மைக்கில் உத்தரவுகளை தர,உதவி இயக்குனர்கள் கையில் எழுதும் ‘pad’ களை பார்க்க..சிலர் ‘field’ கிளியர் செய்ய, ‘நாகரா’ சவுண்ட் மற்றும் ‘pilot track’ விசயங்களை கவனித்துக் கொள்ள, அந்த சில வினாடி காட்சியை வியர்வையில் குளித்தபடி ‘காமிரா’வில் படம் பிடிக்கிறார் ஒளிப்பதிவாளர்.

“கட்”

“ஷாட் ok..”

உடனே மொத்த கூட்டமும் கலைந்து மறுபடியும் கலந்து கொண்டேயிருந்தது. அடுத்த ஷாட்டுக்கு வசனம் சரி பார்க்கப்படுகிறது.கலைந்து போன மேக்கப் சரி செய்யப்படுகிறது.காமிரா ஒரு கலப்பையை போல தூக்கிச் செல்லப்பட்டு வேறு கோணத்தில் வைக்கப்படுகிறது.அதற்கேற்றவாறு lights அமைக்கப்படுகிறது. இதற்கு நடுவில் டீ..,ஜுஸ்,மோர் என்றுஅனைவருக்கும் வழங்கப்படுகிறது. இயக்குனரின் ஒரு வார்த்தைக்கு, மொத்த கூட்டமும் ஒரு வாத்திய கோஷ்டியை போல இயங்குவதை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது. பல காட்சிகள்,பல கோணங்களில் எடுக்கப்படுகின்றன. பஸ் நிற்கும் போதெல்லாம் அந்தந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூடி நின்று படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கிறார்கள். பெண்கள் தங்கள் முகம் சினிமாவில் தெரிந்துவிடுமோ என வெட்கத்தோடு சிரிக்கிறார்கள்.

காமிரா இப்போது பஸ்ஸின் வெளியே,படியின் அருகில் பொருத்தப்பட்டு மக்கள் ஏறுவது போலவும்,இறங்குவது போலவும் படமாக்கப்படுகிறது.

“யாரும் காமிராவை பாக்காதீங்க…நாயன கோஷ்டி…கொஞ்சம் ஓடி வந்து ஏறுங்க… கூடக்காரம்மா…பஸ்ஸு ஸ்லோ ஆகும்போது கூடையை எடுத்து தலையில் வைச்சுகிட்டு பஸ்ஸ பார்த்து வாங்க…இந்தாங்கம்மா..நீங்க இந்த ரண்டு ஸ்கூல் பசங்களையும் ரண்டு கையிலேயும் பிடிச்சுகிட்டு ஏறுங்க…பைய்ய தோளில் மாட்டிகீங்க…காமிராமேன்…ஒரு மானிட்டர் பாத்துரலாமா? இல்லே ஷாட் போயிரலாமா?”

“ஷாட் போயிரலாம் சார்..”

இரண்டாவது டேக்கில் ஷாட் ok ஆகிறது.

"எனக்கு ok உங்களுக்கு?"

"எனக்கும் ok"

"பிரேக்"

இதை சொன்ன அடுத்த நொடி அனைத்து வாகனங்களும் ரிவர்ஸ் எடுத்து மதிய உணவு உண்ணும் இடத்திற்கு விரைந்தன. நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.எல்லோருக்கும் தட்டுகள் வினியோகிக்கப்பட்டு, நேர்த்தியாக பறிமாறப்படுகிறது.

சரியாக ஒருமணி நேரம் கழித்து அனைவரும் கிளம்பி திருப்பத்தூர் செல்லும் சாலையில் பயணிக்கிறோம்.இப்போது காமிரா பஸ் வாசற்படியின் மேலே,பஸ்ஸின் கூறையிலிருந்து கீழே பார்க்கும்படி பொருத்தப்படுகிறது. மாணவர்கள் கும்பலாக பஸ்ஸின் படிக்கட்டில் தொத்திக்கொண்டு பயணிப்பதாகக் காட்சி.

“பசங்களா பார்த்து…கவனம்..உள்ளே இருக்கிறவங்க வெளியே தொங்குறவுங்கள இழுத்துப் புடிச்சுகுங்க…டிரைவர் அண்ணே..ரொம்ப ஸ்பீட் வேணாம்… கொஞ்சமா, பசங்க முடி காத்துல பறக்கணும்…அவ்வளவுதான்..ரெடி..ஸ்டார்ட்”

அந்தக் காட்சி படமாக்கப்படுகிறது.

“உட்கார்ந்துகிட்டு இருக்கறவங்க மூஞ்சிclose up எல்லாம் இப்பவே எடுத்துடலாம்… அதெல்லாம் வெளி லைட்டோடு வேணும்..பஸ்
Exterior-கூட அப்புறமா எடுத்துக்கலாம்”

“ok..ஸார்”

மாணவ,மாணவிகளின் முகங்கள்…கண்டக்டர் டிக்கட் கொடுப்பது…கவலை தோய்ந்த ஒரு முதியவரின் முகம்…குழந்தையுடன் பயணம் செய்யும் தாய்..பூ கட்டிக்கொண்டிருக்கும் பெண்…சிவனடியார் போன்ற ஒரு சாமியார்…டிரைவரின் முகம்…எத்தனைவிதமான முகங்கள். அனைத்தும் எடுக்கப்படுகின்றன.

“ஸார்..லைட் போய்க்கிட்டிருக்கு…”

“வீல் ஷாட் எடுத்துரலாம்…டிரைவர் அண்ணே..சொல்லும்போது ஸ்டீயரிங்கை நல்லா வளைச்சு வளைச்சு ஓட்டுங்க…வீல் திரும்பறது நல்லா தெரியனும்”

காமிரா, முன் சக்கரத்தை பார்த்தவாறு பொருத்தப்பட்டு அந்தக் காட்சியும் எடுக்கப்படுகிறது. இப்போது எல்லோரும் கூடி நின்று பேசுகிறார்கள். ‘Light meter’-ஐயும் வானத்தையும் பார்த்துப் பார்த்து பேசுகிறார்கள். கிட்டத்தட்ட அனைவருமே கைகடிகாரத்தில் நேரம் பார்க்கிறார்கள். நேரம் மாலை 6 மணியை நெருங்குகிறது.

“pack up”-இது இயக்குனர்.

உடனே மொத்தக் காட்சியும் மாறுகிறது. காமிரா பிரிக்கப் பட்டு பேக் செய்யப்படுகிறது.மேக்கப் அழிக்கப்படுகிறது..போட்டிருந்த உடைகள் உருவப்பட்டு, அவரவர்களின் சொந்த உடைகள் திரும்பக் கொடுக்கப்படுகின்றன. யூனிட் வண்டிகள் சாமான்களை அள்ளிக்கொண்டு நகருக்குத் திரும்ப தயாராகின்றன. இயக்குனரும்,ஒளிப்பதிவாளரும் தனி காரில் கிளம்பினார்கள்.என்னையும் அதில் ஏற்றிக்கொண்டனர்.நகருக்குத் திரும்பி நானும் இயக்குனரும், அவருடைய அறைக்கு சென்று சில விசயங்களை விவாதித்தோம்.பிறகு நான் என் அறைக்கு திரும்பினேன். வியர்வையில் உடல் கசகசத்தது.குளித்து உடை மாற்றியதும் சற்று நன்றாக இருந்தது.

ஒரு திரைப்படத்தின் உருவாக்கம் மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றது. கதைக்கான கரு தெரிவு செய்யப்பட்டு,திரைக்கதை அமைக்கப்பட்டு…வசனங்கள் எழுதப்படுகின்றன.பிறகு நடிக,நடிகையர் தேர்ந்தெடுக்கப்பட்டு artist combination சரி பார்க்கப்பட்டு, தயாரிப்பில் தலை அசைக்கப்பட்டவுடன் படப்பிடிப்புக்குப் போகிறார்கள். காமிராவும் அதற்குண்டான உபகரணங்களும் ஒரு வண்டியில் வருகின்றன.கிரேனும்,குண்டுகுண்டாக இரும்பு சமாச்சாரங்களும் இன்னொறு வண்டியில் வருகின்றன.உடைகளை தொங்கவிட்டுக்கொண்டு..உள்ளேயே ஒரு தையல் இயந்திரத்தோடு costume வேனும் வருகிறது.உணவு மற்றும் பானங்களுடன் மற்றொரு வாகனம்…இது இல்லாமல் ஜெனரேட்டர் வாகனம், Art department என்று பல சமாச்சாரங்கள்…

இந்த சாதனங்களும்,வாகனங்களும் அவற்றை இயக்குபவர்களும், ஒரு இயக்குனரின் கற்பனையை ஒரு close to real போன்றதோர் தோற்றத்தை film-ல் உருவாக்கப் பாடுபடுகிறார்கள்.நடிக,நடிகையர் மற்றும் இயக்குனர்களின் உழைப்பைப் போலவே,வெளி உலகுக்கு தெரியாத இந்த தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு மகத்தானது. அவர்கள் எல்லோரிடமும் ஒரு கனவு இருக்கத்தான் செய்கிறது. தாங்கள் சார்ந்திருக்கும் துறையில் என்றாவாது ஒரு நாள் பெரிய ஆளாக வந்துவிடுவோம் என்ற நம்பிக்கைதான்,பணத்திற்கு அப்பாலும் அவர்களை இயங்க வைக்கிறது.

கதவு தட்டப்படும் சப்தம் கேட்கிறது.

எழுந்து கதவை திறக்கிறேன். இரவு உணவு வந்துவிட்டது.இரண்டு பெரிய காரியரில். காரியர் சாப்பாடு என்பது சினிமாவின் ஒரு அடையாளம்.

“என்னப்பா..இப்பவே கொண்டுவந்துட்டே?”

“சார்..வழக்கமா கொண்டுவர நேரம்தான்…first shot காலை ஆறரைக்குன்னு சொன்னாங்க..சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு படுத்தாத்தான் காலையில் பிரஷ்ஷா இருக்கும்”

உணவு கொண்டுவந்தவனுக்கு முப்பது வயது இருக்கலாம்.கண்களில் ஒரு ஒளியோடு, ஆனால் தளர்ச்சியாகக் காணப்பட்டான்.தமிழ் சற்று வித்தியாசமாக பேசினான்.சினிமா கம்பெனிகளில் பலதரப்பட்ட மொழி பேசுபவர்கள் இருப்பது ஒரு சாதாரண விசயம்.

இவனுக்கு என்ன மாதிரி கனவு இருக்கும்?

இவன் உணவு சப்ளை செய்யும் ஒரு ஆள்.. சினிமா சூட்டிங்க்கு உணவு சப்ளை செய்யும் கம்பெனியை சொந்தமாக ஆரம்பிக்கும் கனவாக இருக்குமா?

“சார்..தண்ணி பிடிச்சு வைச்சுட்டேன்..வேறெதுவும் வாங்கி வரணுமா? மானேஜர் சொல்லியிருக்கிறார்..நீங்க மெதுவா சாப்பிடுங்க…சாப்பிட்டுவிட்டு காரியர மட்டும் வெளியே வச்சுருங்க..நா வந்து அப்புறமா எடுத்துக்கிறேன்”

“நீங்க எவ்வளவு நாளா இந்த வேலைல இருக்கீங்க?”

ஒரு நிமிடம் நிமிர்ந்து என்னை கூர்ந்து பார்த்துவிட்டு
“அஞ்சு வருசமா இருக்கேன்”

“என்ன பிளான் வச்சுருக்கீங்க? சொந்தமா இதே மாதிரி ‘கேட்டரிங்’ கம்பெனி ஏதும் ஆரம்பிக்கிறதா எண்ணம் இருக்குதா?”

“அப்படியெல்லாம் எந்த ஐடியாவும் இல்ல சார்..”

“ஐடியா இல்லையா? அப்புறம் என்னதான் செய்யப் போறீங்க எதிர்காலத்தில… இதிலேயே எவ்வளவு காலம்தான் ஓட்டுவீங்க? குடும்பத்த எப்படி சமாளிப்பீங்க?”

“ஏதோ காலம் ஓடிட்டிருக்கு.. பார்க்கலாம் சார்…”

“என்னப்பா இது…ஒரு பிளானும் இல்லேனா எப்படி?”

கதவின் அருகில் போனவன் திரும்பி..சில வினாடிகள் விட்டு
“சார்.. என் அப்பா கன்னட சினிமாவில் ஒரு தயாரிப்பாளர்…சொல்ல,சொல்ல கேட்காம ரெண்டு படம் எடுத்து, ரெண்டுலேயும் தோத்துப் போனார்…இப்போ பக்கவாதம் வந்து ‘மண்டியா’வுக்கே போய்ட்டார்…நான் சென்னைக்கு வந்துட்டேன்…இதுல எங்க சார் பிளான் பண்றது?....வரேன் சார்..”

கதவு மூடப்பட்டது.




.

Wednesday, June 27, 2007

பிரதிபா பட்டீலும் அருள்வாக்கும் !!

‘நான் உயர் பதவியில் அமர்வேன் என்று எனக்கு அருள்வாக்கு கிடைத்தது’
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதிபா பட்டீல் பேட்டி.


இதுதொடர்பாக தனியார் டெலிவிஷன் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதீபா பட்டீல் கூறியதாவது:-


அருள்வாக்கு..

‘நான் சமீபத்தில் பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழத்தின் தலைவர் தாதிஜியை சந்தித்து பேசிய போது, எனக்கு ஓர் இனிய அனுபவம் கிடைத்தது. தாதிஜியின் உடலில் பாபா (பிரம்மகுமாரிகள் பிரிவின் நிறுவன தலைவர் மறைந்த லெக்ராஜ்) ஆவி வந்து அவர் மூலம் பாபா எனக்கு அருள்வாக்கு சொன்னார். நான் அதிர்ஷ்டசாலி என்றும் மிகப்பெரிய பொறுப்பு எனக்காக காத்து இருப்பதாகவும் அதற்கு நான் தயாராக இருக்குமாறும் கூறினார்.’

இவ்வாறு பேட்டியில் பிரதிபா பட்டீல் தெரிவித்து உள்ளார்.
(தினத்தந்தி-27/06/2007)

ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேறும் அப்துல் கலாம் அவர்கள் குழந்தைகள் மத்தியில் விஞ்ஞானத்தையும்,நாட்டின் வளர்ச்சியையும் பற்றிய கனவுகளை உருவாக்கினார். இந்த அம்மையார் உள்ளே வரும் போதே ஆவி,அருள்வாக்கு என்று குழந்தைகளை குழப்பத் தொடங்கிவிட்டார்.

நாட்டின் மிக உயர்ந்த பதவியில் அமரப்போகும் ஒரு பெண்மணி,தன் தனிப்பட்ட நம்பிக்கையை வெளிப்படையாக தெரிவித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. பல்வேறு மதத்தினரும் வாழ்ந்து வரும் ஒரு நாட்டின் ஜனாதிபதியாக வாய்ப்பு உள்ள ஒருவர் இப்படி கூறுவது மற்ற மதத்தினரின் நம்பிக்கையை பெறமுடியாமல் போகலாம்.

பதவி என்றதும் எல்லா மக்களுமே உணர்ச்சிவசப்படுகிறார்கள் !

Friday, May 18, 2007

ஒரு பகல்நேர ரயில் பயணம்-ஒலிகளின் ஊடாக...

‘இது குருவாயூர் எக்ஸ்பிரஸ் டிரெயின் தானே?..’
‘ஆமா…’
‘மாலா…இந்த வண்டிதான்…ஓடி வா..ஏறு’

‘நான் ஒத்தாளுதான்…’
‘சரி..உட்கார்ந்துக்குங்க’

‘யோவ்..வழியவிட்டு உள்ளே போய்யா..எருமை மாடு மாதிரி வழிய மறிச்சிகிட்டு..’
‘உள்ளே எங்கய்யா எடமிருக்கு? இவரு வந்துட்டாரு பெரிய இவராட்டம்..’
‘யோவ்..உன்னாலே உள்ளே போக முடியலேனா இறங்குய்யா கீழே…பொம்பல ஆளுங்க படியிலே நிக்குது…யோய்..வண்டி கிளம்பிருச்சுய்யா..’

‘இந்தாம்மா…எங்க வந்து பைய்ய வக்கிற…?போம்மா அந்த பக்கம்..’
‘என்னையா இது..அங்கேயிருந்து எல்லாரும் இப்பிடியே சொன்னா நாங்க எங்கதான் போறது..!’
‘இங்க எங்கம்மா இடமிரூக்கு?’
‘எம் பேரன் மட்டும் இங்கன கீழேயே உட்காரட்டும்..சின்ன புள்ளைங்க.. இந்தாடா.. பைய்ய வச்சிகிட்டு இங்கனயே உட்காரு..’
‘பாட்டி….’
‘எழவெடுத்தவனே…உட்காருடா…எல்லாம் உங்க ஆத்தாகாரினாலே வந்த வினை..’

‘பரதேசி பசங்க..22,000 ஆயிரம் கோடி லாபம்கிறாங்க…இன்னும் ரண்டு வண்டியத்தான் விட்டா என்ன?

‘காமாட்சி…தண்ணி பாட்டில் இருக்குதில்ல…?’
‘கருமம்…உங்களதானே தண்ணி புடிச்சு பையிலே வைக்க சொன்னேன்..ஒரு வேலையே உருப்படியா செய்யிரதில்ல..’
‘நீ வச்சிருப்பேனு நான் நினச்சேன்..சரி விடு..இங்க விப்பான்.. வாங்கிக்கலாம்..’
‘ஆமாம்..ஒரு பாட்டில் பத்து ரூபாம்பான்…காசு விளையுதில்ல…புள்ளைங்க எதாவது கேட்டா எறிஞ்சு விழறது…இங்க வந்து வாரி இறைக்கவேண்டியது…விடுடி சேலைய..’

‘அண்ணே..கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க…கால்ல ஒரு சின்ன ஆக்சிடெண்ட்…ரொம்ப நேரம் நிக்கமுடியாது..’
‘இங்க ஏற்கனவே மூணுபேரு…இந்த பையனையும் சேர்த்தா நாலு பேரு.. இதுல நீங்க எங்க வந்து உட்காருவீங்க..?’
‘ஒண்ணும் பிரச்சனையில்ல அண்ணே…தம்பி இங்க வா..மாமா மடியில உட்கார்ந்துக்கோ..’
‘அப்ப்பா..’
‘சும்மா வா ராஜா…இங்க பார்…செல்போன்ல வீடியோ கேம்ஸ் விளையாடலாம்…’

‘ஏம்மா..பச்ச குழந்தய வச்சுகிட்டு…ரிசர்வேசன் பண்ணி வரக்கூடாது?எங்கம்மா போற?.’
‘நாகர்கோயில்’
‘அட பாவமே…நைட் எட்டறைக்குதானே போவான்..அதுவரைக்கும் நின்னுகிட்டா போவ..?’
‘மேடம்..பைய்ய வேன்னா இங்க கீழே வச்சுகிங்க..கொஞ்ச நேரம் கழித்து கீழேயே உட்கார்ந்துடுங்க..கொழந்தைய வச்சுகிட்டு எவ்வளவு நேரம் நிப்பீங்க..? தனியாவா மார்த்தாண்டம் போறீங்க..?’
‘இல்ல..எங்க அண்ணன் ஒருத்தர்..அதோ அங்க நிக்கிறார்..’
‘அப்போ சரி..’
‘பாட்டி…அந்த பைய்ய கொஞ்சம் தள்ளுங்க…இருமல் மருந்த எடுக்கணும்..’

‘ஏன்யா மேலே வந்து விழுறீங்க…பொம்பளைங்க இருக்கிறது கண்ணுக்கு தெரியலே..?’
‘ஏம்மா இவ்வளவு கூட்டத்திலே வந்துகிட்டு ‘பொம்பல ஆம்பலெனு’ இம்சைய கொடுத்துகிட்டு..’

‘இல்ல…நான் இருக்கிறது சத்தீஸ்கர்…பூரா நக்ஸலைட் ஏரியா.. முதலில் நக்ஸலைட்டுக்கு காசு கட்டிவிட்டுதான் வேலையை தொடங்கணும். ரோடுபோட ஒரு காண்டிராக்ட் காரனும் வரமாட்டேங்குறான். அரசாங்க அதிகாரியெல்லாம் டவுன்ல தான் இருப்பாங்க…சாயந்தரம் நாலரைக்கே வீட்டுக்கு போய்டுவாங்க…அந்த ஊரு உருப்பட ரொம்ப நாளாகும்...ரண்டு வருசம் கழிச்சு இப்போதான் ஊருக்கு போறேன்…மெட்ராஸ்ல இந்த பய படிக்கிறான்…அக்கா மகன்..அதுதான் இங்க வந்து இவனையும் கூட்டிகிட்டு போறேன்..நீங்க..?’

‘நமக்கு மதுரை…கூட்டுறவு பாங்க்லே வேலை..வீட்டுகாரம்மா டீச்சர்… லீவு விட்டதிலிருந்து இந்த பயக தொந்தரவு தாங்க முடியல.. மெட்ராஸ்ல ஒய்பு சித்தப்பா வீடு இரூக்கு… வில்லிவாக்கம்…அதான் வந்து ஒரு ரவுண்டு அடித்து விட்டு போறோம். பய புள்ளைங்க பத்தாயிரத்தை காலி பண்ணிடுச்சுக…போத்தீஸ் போனோம்…பாக்கட் காலி…முறைக்காதம்மா…உள்ளததானே சொல்லுறோம்… கடையா அது… லட்சம் பேர் உள்ளார இருக்கான்…எப்படியா இந்த ஊர்ல மனுசன் இருக்கான்…!’

‘இட்லி…வடை…மசாலா தோசை..’
‘யோவ்..இந்த கூட்டத்தில எங்கயா போய் இதெல்லாம் விக்க போறே..’
‘சாமி…நீங்க இன்னைக்கு ஒரு நாளைக்கு இதுல போறீங்க…நாங்க டெய்லி போறோம்..இட்லி..வடை..மசால்தோசை..’

‘நாளைக்கே திரும்ப வேண்டியதுதான்…மச்சானுக்கு ஓரகடத்தில் ஒரு இடம் பார்த்திருக்கு…ஒரு ரண்டு வருசம் கடைய நடத்திட்டோம்னா.. அப்புறம் நின்னுக்கலாம்…இனிமே அந்த ஏரியாதான் டெவலப்பாக போகுதாம்…நிறைய பேக்ட்டரியெல்லாம் வரப் போகுதாம்…பார்ப்போம்..நாம ஒரு பிளான் போடுறோம்..ஆண்டவன் என்ன நினைக்கிறானோ..’

‘அம்மா..ஒண்ணுக்கு வருது..’

‘ஹலோ..ஜெயந்தி…நான்தான்…என்னாச்சு? மூர்த்தி கிளம்பிட்டானா இல்லையா? …சொதப்பிட்டான்…சரி…செட்டியாருக்கு போன் செஞ்சு செவ்வா கிழமை செட்டில் செஞ்சுடுலாம்னு சொல்லு….பாரமொவுண்ட்டா? அட நீ வேறே…குருவாயூர் எக்ஸ்பிரஸ்…அன் ரிசர்வுடு கம்பார்ட்மெண்ட்…நின்னுகிட்டு போறேன்..சரி..சரி..நா கூப்பிடுறேன்..’

‘காப்பி..காப்பி…..காப்பி..’

‘பாத்திமா…சேட் வீடு எங்க இருக்கு? விளக்கு தூண்லயா?..ஒண்ணு செய்யு..நீ மட்டும் போயிட்டு வந்துடு…அவன பார்த்தாலே எனக்கு எரிச்சல் வருது…நாங்கு நேரில இடம் வித்து பணம் வந்திருக்கு….ஒரு வார்த்த சொன்னானா பார்த்தியா? வட்டி பணத்தையாவது கொடுத்திருக்கலாம்லே..’

‘என் பேரா…நாகலச்சுமி… எல்.கே.ஜி….இப்பவா..? விருதுநர்க்கு போறோம்..எங்கப்பா ஐஸ் பாக்டரி வச்சுருக்கார்..’

‘பிரதர்…சட்ட பாக்கெட்ல ஒரு மாத்திரை இருக்கு..பிரசருக்கு..கொஞ்சம் எடுத்து கொடுங்க..பிளீஸ்…கைய கூட எடுக்க முடியல..என்ன எழவு கூட்டம்டா இது..’

‘விழுப்புரத்திலே இஞ்சின் மாத்துவான்யா….’

‘அட கருமாந்திரமே..இங்க பார்ரா கூட்டத்தை…இவங்க எல்லோரும் இந்த வண்டியிலே ஏறப் போறாங்களாமா? கிழிஞ்சது…’

‘பெரியவனே…வடை சாப்பிடுறியா…நல்லா இருக்கும்டா..’

‘பிரட் சாண்ட்விச்…சமோசா…’
‘ஏங்க…புளியோதரை இருக்கா? பிரட் சாண்ட்விச் எல்லாம் யாருங்க சாப்பிட போறாங்க?’
‘அட நீங்க வேற..இது இல்லேனு சொன்னா வெள்ளைக்காரன் கம்பளைண்ட் எழுதி போட்டுட்டு போயிருவான்..நம்ம தாழி அறுந்துடும்..’

‘ஏய்..வெள்ளரிபிஞ்சு…உப்பு, மிளகாய் தூள் இருக்கா…?’
‘இந்த கூட்டத்திலே எப்படி தடவி தர்றது…இந்தா…நீயே தடவிக்க..’

‘இந்தாம்மா..கொஞ்ச நேரம் நீ உட்கார்ந்துக்கோ…காலுக்கு நல்லாயிருக்கும்… நான் கொஞ்ச நேரம் நிக்கிறேன்…’

‘அய்யா…இந்தாங்க தண்ணி..முதல்ல மாத்திரைய சாப்பிடுங்க…கண்ணெல்லாம் ஒரு மாதிரி இருக்கு..’

‘பாப்பா..குழந்தைய ஏங்கிட்ட கொடு…கொஞ்ச நேரம் நான் வச்சிருக்கேன்…’

‘பெரியம்மா…நான் திருச்சிலே இறங்கிடுவேன்…அப்ப நீ இங்க உட்காந்துக்க…’

‘புண்ணியமா போச்சு…நீ நல்லா இருப்பய்யா…’

இந்திய ரயில்கள் ஒரு பயணம் அல்ல…ஒரு அனுபவம் என்று ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணி எழுதியிருந்தார்.

Thursday, May 17, 2007

கமல்ஹாசனின் சொந்தப் பிரச்சனை

என் நண்பனின் வீடு.

எல்லோரும் டி.வி பார்த்துக்கொண்டிருக்கிறோம்.டி.வியில் ஏதோ திரைப்படத் துறையினரின் விழாவை காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.முக்கிய நடிகர்கள்,இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் என்று ஒரே கூட்டம்....அவ்வப்போது காமிரா, கூட்டத்தில் அமர்ந்திருப்போரையும் காண்பிக்கிறது.என் நண்பனின் தங்கை ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லிக்கொண்டே வருகிறாள்.

இந்த முறை காமிரா கமல்ஹாசனை காண்பிக்கிறது.அருகில் அமர்ந்திருக்கும் கெளதமியையும் காண்பிக்கிறது.உடன் அந்த இருவரின் குழந்தைகளையும் காண்பிக்கிறது.அந்த காட்சியை ஒருவித குறுகுறுப்புடன் எல்லோரும் பார்க்கிறார்கள்.அப்போது என் நண்பனின் அப்பா கேட்கிறார்" இந்தப் பெண் யார்?" என்று.அவர் கேட்டது கெளதமியை குறித்து.என் நண்பன் திடுக்கிட்டு"கூட நடிக்கிற பொண்ணு" என்று தடுமாறி கூறினான்.

ஆனால் அவனுடைய தங்கை, கமல்-கெளதமி குறித்த முழுக் கதையையும் அவிழ்த்து விட்டுவிட்டாள்.நண்பன் டென்சனாகி " போடி உள்ளே" என்று கத்தினான்.அவளும் பதில் சண்டைக்கு தயாராகி இருவரும் உள்ளே சென்றார்கள்.அவ்வளவாக சினிமா தெரியாத அந்த அப்பா அதிர்ந்து விட்டார்."இருவரையும் விட்டுவிட்டு மூன்றாவதாக இவளை சேர்த்துக்கொண்டானா? அதுவும் ஒரு குழந்தையோட.." என்று என்னிடம் கேட்டார்.நான் மய்யமாக தலையசைத்தேன்.அப்போது வந்த நண்பன் "அப்பா அதெல்லாம் அவங்களோட சொந்த விசயம்...அவங்களோட நடிப்பை மட்டும் தான் நாம பார்க்கனும்" என்று சற்று உரத்தகுரலில் கூறினான். அப்பா அமைதியாக சற்று நேரம் டி.வி பார்த்தார்.

பிறகு என்னிடம் திரும்பி "அது அவுங்க சொந்த விசயம்தான்...ஆனா இந்த உறவுகளை பற்றி சரியாக புரிந்து கொள்ள முடியாத அவர்களின் குழந்தைகளின் மனநிலை எப்பிடியிருக்கும்? இவர்களை பற்றிய செய்திகளை பத்திரிக்கையில் படிக்கும் நம் வீட்டு குழந்தைகளின் ஒழுக்கம் பற்றிய சிந்தனை என்னவாக இருக்கும்?...இதை எப்பிடி அவர்களின் சொந்த பிரச்சனை என்று கூறமுடியும்?" கேட்டார்.

உடனே என் நண்பன் இடைமறித்து "உனக்கு டயமாகுது.கிளம்பு.." என்றான்

Tuesday, May 15, 2007

அழும் பெற்றோர்கள்..

விஜய் டி.வியில் 'ஜுனியர் சூப்பர் சிங்கர்' என்ற நிகழ்ச்சி ஒளி பரப்பாகி வருகிறது. இதில் பங்கேற்கும் குழந்தைகள் கடும் பயிற்சிக்கு பின்னரே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். பல்வேறு கட்டங்களாக இந்த தேர்வு நடை பெறுகிறது. சில கட்டங்களில் சில குழந்தைகள் தோல்வியுற்று போட்டியிலிருந்து விலக்கப் படுகிறார்கள்.அப்போது நிகழ்ச்சியின் நீதிபதிகளாக வருபவர்கள் தோல்வியுற்ற குழந்தைகளுக்கு ஆறுதலாக பேசி, இன்னும் நல்ல முறையில் பயிற்சி செய்தால் பல வெற்றிகளை அடையமுடியும் என்று நம்பிக்கையூட்டுகிறார்கள்.கலங்கிய கண்களுடன் அந்த குழந்தைகள் மேடையைவிட்டு விலகுகிறார்கள்.

சின்ன வயதில் அந்த தோல்வியை அச்சிறு குழந்தைகளின் மனம் ஏற்று கொள்ளும் நிலையில் பக்குவப்பட்டு இருக்குமா? பாடுவதற்கு பயிற்சி அளிக்கும் பெற்றோர்கள், வெற்றி அல்லது தோல்வி அடையும்போது அதை எதிர்கொள்ளும் வகையில் குழந்தைகளை தயார் செய்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே தெரிகிறது. ஏனென்றால் தோல்வியுற்று குழந்தைகள் மேடையை விட்டு இறங்கும் போது அவர்களின் பெற்றோர்களும் கண்கலங்கி உணர்ச்சிவசப்படுகிறார்கள்.

குழந்தைகளு க்கு ஆறுதல் சொல்லி, அவர்களின் மனநிலையை மாற்ற வேண்டிய பெற்றோர்களே கண்கலங்குவது குழந்தைகளின் மனநிலையை நிச்சயம் பாதிக்கும். பெற்றோர்கள் இதை கவனத்தில் எடுத்து கொள்வார்களா?