Monday, January 3, 2011

ஜெயமோகனிடம் ஒரு கேள்வி!

அன்பு ஜெமோ..

தங்களின் இந்த 'கீதை வழிகள்' கட்டுரை பல விசயங்களை தொட்டுச் செல்வதே அதன் சிறப்பு. இறை நம்பிக்கை சம்பந்தமான விசயத்தில் ஒரு வரி வருகிறது..'நான் என் தர்க்கத்தின் தடியுடன் போய் அவர்களை உடைக்க முயல்வதில் என்ன பொருள் இருக்க இயலும்?' என்று. சரி.. தடியை எடுத்துச் செல்லவேண்டாம். மெல்லிய குரலில் அவர்களை விலகிச் செல்ல கேட்கலாம் இல்லையா? நம்பிக்கை என்ற பெயரில் மற்ற மனிதர்களுக்கு கிடைக்க வேண்டிய பயனை தடுப்பவர்களை எப்படி கையாள்வது? பாலத்தை ராமர் கட்டினார் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை, அது ஒரு நம்பிக்கைதான் என்று அகழாராய்ச்சி நிபுணர்கள் சொல்லிவிட்டபின்பு, சொன்ன நிபுணர்களின் கையை பிடித்து திருகி அவர்களை பணி மாற்றம் செய்யும்அளவுக்கு சமூகத்தை அழுத்தும் இந்த நம்பிக்கையாளர்களை எப்படி சமாளிப்பது? இயற்கையை மனிதன் ஆராய்ந்து அதை தன் வசப்படுத்தும் போது மனிதன் இப்போது வைத்திருக்கும் இந்த இறை நம்பிக்கைகள் உதிர்ந்து விட வாய்ப்புள்ளதாலே மனிதன் அஞ்சுகிறான். அந்த அச்சம்தான் மற்ற மனிதர்களுக்கு இடைஞ்சலை கொடுக்கின்றது. இறை நம்பிக்கை என்பது தனி மனித விசயமாக இருக்கும்போதே அது ஒரு சமூக பிரச்சனையாகவும் இருப்பதால் அதை விவாதத்துக்குள் இறக்குவதை தவிர வேறு வழியில்லை. இறை நம்பிக்கையை முழுக்க முழுக்க தனிமனித விசயமாக பார்க்கமுடியாது என்பது என் கருத்து.

மற்றபடி 'கீதை' படிப்பதற்கு ஒரு நல்ல நூல். அதன் கதைகளில் ஒருவித விட்டேத்தியான, நம் கைகளில் ஒன்றும் இல்லை போன்ற ஒப்பியம் கலந்த சித்தர்கள் போக்கு தெரிவதாகவே நான் கருதுகிறேன்.

சஞ்சீவி மனோகரன்.



அன்புள்ள மனோகர்

நான் சொன்னவற்றைணிவ்வாறு வலியுறுத்த விரும்புகிறேன். தர்க்கம் போலவே நம்பிக்கையும் ஒரு கருவி. இரண்டுக்கும் பயன்கள் உண்டு. பயன்படுத்தப்படும் ஒரு பொருளை பயனற்றது என்று வாதிடுவதும் சரி வெல்வதும் சரி நடக்காத காரியம். நம்பிக்கையுடன் மோதும் தர்க்கம் வீணாக இயங்கும் இயந்திரம் போன்றது. நம்பிக்கை அரசியல்,சமூகவியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும்போது அது வேறு ஒரு தளத்தை அடைகிறது. கண்டிப்பாக அது எதிர்க்க படவேண்டியதே. அது இவ்விவாதத்துக்குள் வராது. இது தனிமனித ஆன்மீக தேட்டம் தொடர்பான விவாதம் மட்டுமே. நம்பிக்கையின் அடிப்படையிலேயே உலகில் எப்போதும் சர்வாதிகாரங்களும் வன்முறைகளும் கட்டமைக்கப்படுகின்றன. தர்க்கம் என்பது ஜனநாயகத்தின் அடிக்கட்டுமானமாகும். இன்னொன்று உண்டு. ஒரு சமூகச் செயல்பாட்டில் தர்க்கமும் நம்பிக்கையும், மதமும் ஆன்மீகமும் , அறிவியலும் மூடநம்பிக்கைகளும் மோதியபடியேதான் இருக்க வேண்டும். அச்சமூகம் அந்த முரணியக்கம் மூலமே முன்னகர முடியும். சொல்லப்போனால் சமூகத்தில் சிந்தனை என்பது நிகழ்வதே ஒரு விவாதமாகத்தான். இந்த கீதை விவாதத்திலேயே ஒரு தரப்பை அப்படி முன்னிறுத்தி பிறவற்றுடன் விவாதிக்கும் போக்கை நாம் காணலாம். அதற்கும் தனிமனித ஆன்மீக தேட்டத்துக்கும் தொடர்பில்லை என்பதே என் எண்ணமாகும்.

ஜெயமோகன்.