Wednesday, July 4, 2007

சினிமா ஷூட்டிங்

சிவகங்கைச் சீமைக்கு ஒரு பயணம்.

போவது ஒரு சினிமா படபிடிப்புக்கு.

அந்தப் பட இயக்குனர் என் நண்பர்.அவரின் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். திருச்சியிலிருந்து மூன்றரை மணி நேரம் பஸ்ஸில் பயணித்து அந்த ஊரை அடைந்தேன்.நான் போவதற்கு முன்பே மொத்த யூனிட்டும் கிளம்பி நகருக்கு வெளியே சென்றுவிட்டது.புரடக்சன் மானேஜர் போனில், நான் தங்கும் விடுதி போன்ற தகவல்களை சொல்லி ஒரு மணி நேரத்தில் தயாராக இருக்கும்படியும்,வண்டி அனுப்புவதாகவும் சொன்னார். சொன்னபடி கார் அனுப்பி படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அழைத்துக்கொண்டார்.

ஓடும் பஸ்ஸில் மாணவர்கள் பாடி,ஆடும் பாடல்காட்சி படமாக்கப்படுகிறது. காட்சி பஸ்ஸுக்கு உள்ளேயும்,வெளியே இருந்தும் மாறிமாறி எடுக்கப்படுகிறது.ஒரு பஸ் வாடகைக்கு எடுக்கப்பட்டு, அதில் மாணவ,மாணவியர் நிரப்பப்பட்டு உடன் பொதுமக்களும் பயணிப்பதாக காட்சி.பஸ்ஸின் மேற்கூறையைச் சிறிது பிரித்து உள்ளே சூரிய வெளிச்சம் வருவது போல் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஒளியைக்கூட, கூட்டி குறைப்பதற்காக சிலர் குடையுடன் பஸ்ஸின் மேற்புறம் அமர்ந்திருக்கிறார்கள். இந்த பஸ் இல்லாமல் நாலைந்து வேன்கள்,கார்கள் மற்றும் படப்பிடிப்பு யுனிட் வண்டிகள் என ஒரு convoy. இந்த வண்டிகள் காமிரா கோணத்தில் மாட்டாமல் பஸ்ஸுக்கு முன்னும் பின்னும் மாறிமாறி வரும்.

சார்..இங்க Low-வா வைக்கமுடியாது”- இது காமிராமேன்


“அப்படியா…சரி மாத்திக்கலாம்”-இது இயக்குனர்.

காமிரா கோணம் மாற்றப்பட்டு “ஒரு மானிட்டர் பாத்துரலாம்”-இது இயக்குனர்.

மானிட்டர் பார்க்கப்பட்டு, பஸ் கிளம்பத் தயாராகிறது.ஒரு ராணுவ பட்டாலியன் மாதிரி எல்லோரும் புயலென கிளம்பி, கிடைத்த வாகனத்தில் தொத்திக்கொள்கிறார்கள்.

“சைலென்ஸ்…சவுண்ட்…காமிரா..”


“ரோலிங் சார்”

“ஆக்சன்”

மொத்த யூனிட்டும் உஷாராகி, நடிகர்கள் உதடசைத்து,உணர்ச்சிகளை முகத்தில் கொண்டுவந்து நடிக்க..இயக்குனர் மைக்கில் உத்தரவுகளை தர,உதவி இயக்குனர்கள் கையில் எழுதும் ‘pad’ களை பார்க்க..சிலர் ‘field’ கிளியர் செய்ய, ‘நாகரா’ சவுண்ட் மற்றும் ‘pilot track’ விசயங்களை கவனித்துக் கொள்ள, அந்த சில வினாடி காட்சியை வியர்வையில் குளித்தபடி ‘காமிரா’வில் படம் பிடிக்கிறார் ஒளிப்பதிவாளர்.

“கட்”

“ஷாட் ok..”

உடனே மொத்த கூட்டமும் கலைந்து மறுபடியும் கலந்து கொண்டேயிருந்தது. அடுத்த ஷாட்டுக்கு வசனம் சரி பார்க்கப்படுகிறது.கலைந்து போன மேக்கப் சரி செய்யப்படுகிறது.காமிரா ஒரு கலப்பையை போல தூக்கிச் செல்லப்பட்டு வேறு கோணத்தில் வைக்கப்படுகிறது.அதற்கேற்றவாறு lights அமைக்கப்படுகிறது. இதற்கு நடுவில் டீ..,ஜுஸ்,மோர் என்றுஅனைவருக்கும் வழங்கப்படுகிறது. இயக்குனரின் ஒரு வார்த்தைக்கு, மொத்த கூட்டமும் ஒரு வாத்திய கோஷ்டியை போல இயங்குவதை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது. பல காட்சிகள்,பல கோணங்களில் எடுக்கப்படுகின்றன. பஸ் நிற்கும் போதெல்லாம் அந்தந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூடி நின்று படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கிறார்கள். பெண்கள் தங்கள் முகம் சினிமாவில் தெரிந்துவிடுமோ என வெட்கத்தோடு சிரிக்கிறார்கள்.

காமிரா இப்போது பஸ்ஸின் வெளியே,படியின் அருகில் பொருத்தப்பட்டு மக்கள் ஏறுவது போலவும்,இறங்குவது போலவும் படமாக்கப்படுகிறது.

“யாரும் காமிராவை பாக்காதீங்க…நாயன கோஷ்டி…கொஞ்சம் ஓடி வந்து ஏறுங்க… கூடக்காரம்மா…பஸ்ஸு ஸ்லோ ஆகும்போது கூடையை எடுத்து தலையில் வைச்சுகிட்டு பஸ்ஸ பார்த்து வாங்க…இந்தாங்கம்மா..நீங்க இந்த ரண்டு ஸ்கூல் பசங்களையும் ரண்டு கையிலேயும் பிடிச்சுகிட்டு ஏறுங்க…பைய்ய தோளில் மாட்டிகீங்க…காமிராமேன்…ஒரு மானிட்டர் பாத்துரலாமா? இல்லே ஷாட் போயிரலாமா?”

“ஷாட் போயிரலாம் சார்..”

இரண்டாவது டேக்கில் ஷாட் ok ஆகிறது.

"எனக்கு ok உங்களுக்கு?"

"எனக்கும் ok"

"பிரேக்"

இதை சொன்ன அடுத்த நொடி அனைத்து வாகனங்களும் ரிவர்ஸ் எடுத்து மதிய உணவு உண்ணும் இடத்திற்கு விரைந்தன. நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.எல்லோருக்கும் தட்டுகள் வினியோகிக்கப்பட்டு, நேர்த்தியாக பறிமாறப்படுகிறது.

சரியாக ஒருமணி நேரம் கழித்து அனைவரும் கிளம்பி திருப்பத்தூர் செல்லும் சாலையில் பயணிக்கிறோம்.இப்போது காமிரா பஸ் வாசற்படியின் மேலே,பஸ்ஸின் கூறையிலிருந்து கீழே பார்க்கும்படி பொருத்தப்படுகிறது. மாணவர்கள் கும்பலாக பஸ்ஸின் படிக்கட்டில் தொத்திக்கொண்டு பயணிப்பதாகக் காட்சி.

“பசங்களா பார்த்து…கவனம்..உள்ளே இருக்கிறவங்க வெளியே தொங்குறவுங்கள இழுத்துப் புடிச்சுகுங்க…டிரைவர் அண்ணே..ரொம்ப ஸ்பீட் வேணாம்… கொஞ்சமா, பசங்க முடி காத்துல பறக்கணும்…அவ்வளவுதான்..ரெடி..ஸ்டார்ட்”

அந்தக் காட்சி படமாக்கப்படுகிறது.

“உட்கார்ந்துகிட்டு இருக்கறவங்க மூஞ்சிclose up எல்லாம் இப்பவே எடுத்துடலாம்… அதெல்லாம் வெளி லைட்டோடு வேணும்..பஸ்
Exterior-கூட அப்புறமா எடுத்துக்கலாம்”

“ok..ஸார்”

மாணவ,மாணவிகளின் முகங்கள்…கண்டக்டர் டிக்கட் கொடுப்பது…கவலை தோய்ந்த ஒரு முதியவரின் முகம்…குழந்தையுடன் பயணம் செய்யும் தாய்..பூ கட்டிக்கொண்டிருக்கும் பெண்…சிவனடியார் போன்ற ஒரு சாமியார்…டிரைவரின் முகம்…எத்தனைவிதமான முகங்கள். அனைத்தும் எடுக்கப்படுகின்றன.

“ஸார்..லைட் போய்க்கிட்டிருக்கு…”

“வீல் ஷாட் எடுத்துரலாம்…டிரைவர் அண்ணே..சொல்லும்போது ஸ்டீயரிங்கை நல்லா வளைச்சு வளைச்சு ஓட்டுங்க…வீல் திரும்பறது நல்லா தெரியனும்”

காமிரா, முன் சக்கரத்தை பார்த்தவாறு பொருத்தப்பட்டு அந்தக் காட்சியும் எடுக்கப்படுகிறது. இப்போது எல்லோரும் கூடி நின்று பேசுகிறார்கள். ‘Light meter’-ஐயும் வானத்தையும் பார்த்துப் பார்த்து பேசுகிறார்கள். கிட்டத்தட்ட அனைவருமே கைகடிகாரத்தில் நேரம் பார்க்கிறார்கள். நேரம் மாலை 6 மணியை நெருங்குகிறது.

“pack up”-இது இயக்குனர்.

உடனே மொத்தக் காட்சியும் மாறுகிறது. காமிரா பிரிக்கப் பட்டு பேக் செய்யப்படுகிறது.மேக்கப் அழிக்கப்படுகிறது..போட்டிருந்த உடைகள் உருவப்பட்டு, அவரவர்களின் சொந்த உடைகள் திரும்பக் கொடுக்கப்படுகின்றன. யூனிட் வண்டிகள் சாமான்களை அள்ளிக்கொண்டு நகருக்குத் திரும்ப தயாராகின்றன. இயக்குனரும்,ஒளிப்பதிவாளரும் தனி காரில் கிளம்பினார்கள்.என்னையும் அதில் ஏற்றிக்கொண்டனர்.நகருக்குத் திரும்பி நானும் இயக்குனரும், அவருடைய அறைக்கு சென்று சில விசயங்களை விவாதித்தோம்.பிறகு நான் என் அறைக்கு திரும்பினேன். வியர்வையில் உடல் கசகசத்தது.குளித்து உடை மாற்றியதும் சற்று நன்றாக இருந்தது.

ஒரு திரைப்படத்தின் உருவாக்கம் மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றது. கதைக்கான கரு தெரிவு செய்யப்பட்டு,திரைக்கதை அமைக்கப்பட்டு…வசனங்கள் எழுதப்படுகின்றன.பிறகு நடிக,நடிகையர் தேர்ந்தெடுக்கப்பட்டு artist combination சரி பார்க்கப்பட்டு, தயாரிப்பில் தலை அசைக்கப்பட்டவுடன் படப்பிடிப்புக்குப் போகிறார்கள். காமிராவும் அதற்குண்டான உபகரணங்களும் ஒரு வண்டியில் வருகின்றன.கிரேனும்,குண்டுகுண்டாக இரும்பு சமாச்சாரங்களும் இன்னொறு வண்டியில் வருகின்றன.உடைகளை தொங்கவிட்டுக்கொண்டு..உள்ளேயே ஒரு தையல் இயந்திரத்தோடு costume வேனும் வருகிறது.உணவு மற்றும் பானங்களுடன் மற்றொரு வாகனம்…இது இல்லாமல் ஜெனரேட்டர் வாகனம், Art department என்று பல சமாச்சாரங்கள்…

இந்த சாதனங்களும்,வாகனங்களும் அவற்றை இயக்குபவர்களும், ஒரு இயக்குனரின் கற்பனையை ஒரு close to real போன்றதோர் தோற்றத்தை film-ல் உருவாக்கப் பாடுபடுகிறார்கள்.நடிக,நடிகையர் மற்றும் இயக்குனர்களின் உழைப்பைப் போலவே,வெளி உலகுக்கு தெரியாத இந்த தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு மகத்தானது. அவர்கள் எல்லோரிடமும் ஒரு கனவு இருக்கத்தான் செய்கிறது. தாங்கள் சார்ந்திருக்கும் துறையில் என்றாவாது ஒரு நாள் பெரிய ஆளாக வந்துவிடுவோம் என்ற நம்பிக்கைதான்,பணத்திற்கு அப்பாலும் அவர்களை இயங்க வைக்கிறது.

கதவு தட்டப்படும் சப்தம் கேட்கிறது.

எழுந்து கதவை திறக்கிறேன். இரவு உணவு வந்துவிட்டது.இரண்டு பெரிய காரியரில். காரியர் சாப்பாடு என்பது சினிமாவின் ஒரு அடையாளம்.

“என்னப்பா..இப்பவே கொண்டுவந்துட்டே?”

“சார்..வழக்கமா கொண்டுவர நேரம்தான்…first shot காலை ஆறரைக்குன்னு சொன்னாங்க..சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு படுத்தாத்தான் காலையில் பிரஷ்ஷா இருக்கும்”

உணவு கொண்டுவந்தவனுக்கு முப்பது வயது இருக்கலாம்.கண்களில் ஒரு ஒளியோடு, ஆனால் தளர்ச்சியாகக் காணப்பட்டான்.தமிழ் சற்று வித்தியாசமாக பேசினான்.சினிமா கம்பெனிகளில் பலதரப்பட்ட மொழி பேசுபவர்கள் இருப்பது ஒரு சாதாரண விசயம்.

இவனுக்கு என்ன மாதிரி கனவு இருக்கும்?

இவன் உணவு சப்ளை செய்யும் ஒரு ஆள்.. சினிமா சூட்டிங்க்கு உணவு சப்ளை செய்யும் கம்பெனியை சொந்தமாக ஆரம்பிக்கும் கனவாக இருக்குமா?

“சார்..தண்ணி பிடிச்சு வைச்சுட்டேன்..வேறெதுவும் வாங்கி வரணுமா? மானேஜர் சொல்லியிருக்கிறார்..நீங்க மெதுவா சாப்பிடுங்க…சாப்பிட்டுவிட்டு காரியர மட்டும் வெளியே வச்சுருங்க..நா வந்து அப்புறமா எடுத்துக்கிறேன்”

“நீங்க எவ்வளவு நாளா இந்த வேலைல இருக்கீங்க?”

ஒரு நிமிடம் நிமிர்ந்து என்னை கூர்ந்து பார்த்துவிட்டு
“அஞ்சு வருசமா இருக்கேன்”

“என்ன பிளான் வச்சுருக்கீங்க? சொந்தமா இதே மாதிரி ‘கேட்டரிங்’ கம்பெனி ஏதும் ஆரம்பிக்கிறதா எண்ணம் இருக்குதா?”

“அப்படியெல்லாம் எந்த ஐடியாவும் இல்ல சார்..”

“ஐடியா இல்லையா? அப்புறம் என்னதான் செய்யப் போறீங்க எதிர்காலத்தில… இதிலேயே எவ்வளவு காலம்தான் ஓட்டுவீங்க? குடும்பத்த எப்படி சமாளிப்பீங்க?”

“ஏதோ காலம் ஓடிட்டிருக்கு.. பார்க்கலாம் சார்…”

“என்னப்பா இது…ஒரு பிளானும் இல்லேனா எப்படி?”

கதவின் அருகில் போனவன் திரும்பி..சில வினாடிகள் விட்டு
“சார்.. என் அப்பா கன்னட சினிமாவில் ஒரு தயாரிப்பாளர்…சொல்ல,சொல்ல கேட்காம ரெண்டு படம் எடுத்து, ரெண்டுலேயும் தோத்துப் போனார்…இப்போ பக்கவாதம் வந்து ‘மண்டியா’வுக்கே போய்ட்டார்…நான் சென்னைக்கு வந்துட்டேன்…இதுல எங்க சார் பிளான் பண்றது?....வரேன் சார்..”

கதவு மூடப்பட்டது.




.