Monday, February 4, 2008

வாக்கிங்!

கீதாவிடமிருந்து ஃபோன். கீதா என் நண்பன் கல்யாணசுந்தரத்தின் மனைவி. என்னவாக இருக்கும் என்ற யோசனையுடன் ஃபோனை எடுத்தேன். எடுத்தவுடனேயே எரிச்சலாக பேசினாள்.

“அண்ணா..பேசாமா நீங்க நாளைக்கு வாக்கிங் போகும்போது இவரையும் கூட்டிட்டு போங்க..வாய கட்ட மாட்டேங்கிறார்.. ஒரு மாசத்திலே அஞ்சு கிலோ ஏறியிருக்கு.. துண்டு கீழ விழுந்தாகூட நானோ இல்ல அபியோதான் எடுத்து தரணும்..இல்லேன்னா புட்பால் மாதிரி கட்டிலுக்கு உதைத்து அப்புறமா எடுக்குறார்..இதுல சீட்டிவேற.. கருமம்..ராமநாதன் டாக்டர் என்னை கண்டபடி திட்றார்..கொலஸ்ட்ரால் ஏறியிருக்காம்..இந்த தடவ இவர விடுதறா இல்ல..பிளீஸ்னா..” என்றாள்.

எனக்கு திக்கென்றது.ஏனென்றால் ஒரு வருடத்திற்கு முன்னால் இவனோடு வாக்கிங் போய், அது எப்படி முடிந்தது என நினைவுக்கு வந்தது.இப்போது மறுபடியுமா?

“சரி..அவன்கிட்ட கொடு..”

“ஹலோ..”

“என்னடா இது..”

“இல்ல மாமா..இந்த தடவ சீரியஸ்..போயிர வேண்டியதுதான்…ட்ராக் சூட்..ஷு.. எல்லாம் வாங்கிட்டேன்..இனிமே நான் ஹெல்த் ஃபிரீக்தான்..காலைலெ ஒரு அஞ்சு மணிக்கு ஒரு மிஸ்டு கால் கொடு..நான் ரெடியா வெளியே வந்து நிக்கிறேன்..”

உண்மையில் வாக்கிங் போகும் பழக்கமெல்லாம் எனக்கு இல்லை. தூக்கம் கலைந்த அதிகாலை பொழுதுகளில் டீ கடைகளிலும்,செய்தித்தாள் விற்கும் கடைகளிலும் சற்று பொழுதை ஓட்டுவதுண்டு. இது ஒரு தவறான சித்திரத்தை என் மீது உருவாக்கி,நான் ரெகுலராக வாக்கிங் செல்பவன் என்ற ஒரு கருத்தை நண்பர்களின் வீடுகளில் ஏற்படுத்தியிருந்தது.இது என் இமேஜை சற்று தூக்கியது என்றாலும் அது உண்மையில்லை என்பதை உணர்ந்தே இருந்தேன். இந்த கல்யாணசுந்தரத்திற்கு தனியார் நிறுவனம் ஒன்றில் மார்கெட்டிங் வேலை.பெரிய உருவம்..கரிய நிறம்..முகத்தில் ஒரு குழந்தைத்தனம். விரிந்து பரந்து..110 கிலோவில் ஆறடி உயரத்திலிருந்து பேசுவான். சாப்பிடுவதை ஒரு வேள்வியாக செய்வான்.சில சமயம் உணவுக் கட்டுபாடு என்று கூறி பதினான்கு இட்லி மட்டும் சாப்பிடுவான். வரவர அவன் அளவுகளுக்கு பேண்ட்டும்,காலணிகளும் கிடைப்பதில்லை. அதைப்பற்றியெல்லாம் அவன் கலைப்பட்டதாக தெரியவில்லை. ‘அதெல்லாம் ஆர்டர் பண்ணி செஞ்சுக்கலாம் மாப்பள..’ என்று சொல்லிக்கொண்டே நாலாவது உளுந்த வடையை உள்ளே தள்ளுவான். பார்களில் வைக்கப்படும் ‘சைட் டிஷ்’சமாச்சாரங்களை நிமிடத்தில் காலி செய்வான். போன வருடத்தில் ஒரு நாள், அவன் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண் ஒரு முறை கிண்டலாக ‘ஹாய்..fatty..’ என்று சொன்னதில் கோபப்பட்டு, வாக்கிங் போகும் முடிவுக்கு வந்து என்னையும் துணைக்கு அழைத்தான்.

விடிகாலையில் காரில் பீச்சுக்கு போய்விடுவோம். காந்தி சிலையருகில் காரை நிறுத்திவிட்டு நடப்போம். அங்கு முதல் நாள், எடுத்த எடுப்பில் அவனுடைய பார்வையில் பட்ட விசயம்…அருகம்புல் ஜூஸ்,வெஜிடபுள் ஜூஸ் விற்கும் வண்டிகள்தான். “இதெல்லாம் குடித்தால் உடம்புக்கு நல்லது” எனக்கூறி ஓரக்கண்ணால் பார்த்தான். “டேய்..நடக்கலாம்டா..” என்று கூறி தள்ளிக்கொண்டு போனேன். சிறிது தூரம்தான் சென்றிருப்போம்.. அதற்குள் இரண்டு இடங்களில் ஓய்வு. “இப்போது மறுபடி காந்திசிலைக்கு நடந்தால் இரண்டு கிலோமீட்டர் சரியாக இருக்கும்..” என்றான்.திரும்பி வந்து காந்திசிலை அருகிலும் சற்று ஓய்வு.பின்னர் கிளம்பினோம். காரை எடுக்கும் போதே “போகும் வழியில் சரவணபவனில் ஒரு காப்பி சாப்ட்டு போவோம்” என்றான். அதே போல் ஒரு காப்பியை குடித்து விட்டு வீட்டிற்கு போனோம்.

மறுநாள் உற்சாகமாக கிளம்பித் தயாராக இருந்தான். அன்று ஜூஸ் வண்டிகளை திரும்பிக்கூட பார்க்கவில்லை.கை,கால்களை உதறிக் கொண்டு பல பயிற்சிகளை செய்து கொண்டே நடந்தான்.பரவாயில்லையே என நினைத்தேன்.எதிரில் வந்த ஒரு வெள்ளைக்காரிக்கு ‘ஹாய்’ சொன்னான். காரில் திரும்பி வரும்போது ஒரு பாடலைக்கூட முணுமுணுத்துக்கொண்டே ஓட்டினான்.இன்று என்னிடம் சொல்லக்கூட இல்லை. வண்டியை நேராக சரவணபவனுக்குள் விட்டான். டோக்கன் வாங்கும் இடத்தில் ஒரு நிமிடம் நின்று என்னை திரும்பிப் பார்த்து “நீ இங்க நெய் ரோஸ்ட் சாப்பிட்டிருக்கியா..?” என்று கேட்டான்.புரிந்துவிட்டது. இந்த நெய்ரோஸ்ட் திட்டத்தோடுதான் வெள்ளைக்காரிகெல்லாம் ‘ஹாய்’ சொல்லியிருக்கிறான். “டேய்..வேணாம்.. இதையெல்லாம் சாப்பிட்டா வாக்கிங் போனதற்கு அர்த்தமே இல்லை” என்றேன். “ஒன்றே ஒன்று..” எனக் கூறி சிரித்தான். சில தினங்களிலேயே எங்கள் நடைப்பயிற்சி, சரவணபவனில் தினசரி அதிகாலை உணவருந்தும் பயிற்சியாக மாறிப்போயிருந்தது.ஒரு நெய்ரோஸ்டில் ஆரம்பித்த சுந்தரம் அடுத்து ரவா தோசை, மினி இட்லிஸ்,ஆனியன் ஊத்தப்பம், ஸ்ட்ராங் காப்பி என வெளுத்துக்கட்டினான். ஒரு நாள் உற்சாக மிகுதியில் ‘அபிக்கு ரொம்ப பிடிக்கும்..’ எனக்கூறி சில நெய் ரோஸ்ட்டுகளை பார்சல் செய்து வீட்டுக்கு எடுத்துப்போனதில் கீதா டென்சனாகி “நீங்க வாக்கிங் போய் கிழிச்சது போதும்” என்று கத்த,அவனுடைய மொத்த வாக்கிங் திட்டமும் ஒரு முடிவுக்கு வந்தது. அவன் வாங்கிய அந்த ஷூ, அவன் வீட்டு நாய் ‘பிரவுனி’ யின் விளையாட்டுப் பொருளாகிவிட்டது. இப்போது மறுபடியும் புது ஷூ வாங்கி மாட்டிக்கொண்டு வாக்கிங் போகலாம் எனக்கூறுகிறான். ஒன்றும் புரியவில்லை.

அன்று இரவே கீதா மறுபடியும் அழைத்து மறுநாள் வாக்கிங் போவதை உறுதி செய்து விட்டாள். “அண்ணா..அவர் எட்டரைக்கே சாப்பிட்டு தூங்கப்போய்ட்டார்..நாலரைக்கு அலாரம் வைக்கச் சொல்லியிருக்கிறார்.. பீச்சுகெல்லாம் போகவேண்டாம்னா..லயோலா காலேஜ் இங்கதான இருக்கு.. நடந்தே போகலாம்…அங்க போங்க..நீங்க ஒரு மிஸ்டு கால் கொடுத்துட்டு வந்துடுங்க.. அவர் ரெடியா இருப்பார்..”என்று மகிழ்ச்சியாக கூறினாள்.மறுநாள் இருட்டான அந்தக் காலை நேரத்தில் அவன் வீட்டுக்குப் போனபோது சுந்தரம் தயாராக இருந்தான்.புது ட்ராக் சூட், புது ஸ்போர்ட்ஸ் மாடல் ஷூ என ஒலிம்பிக் வீரனைப் போல் இருந்தான். ‘போகலாமா..’ என்று கேட்டபடி கேட்டை திறந்து வெளிவந்தான். கீதா கேட் வரை வந்து வழி அனுப்பினாள். சுந்தரம் ‘டாட்டா’ வேறு காண்பித்தான்.எனக்கு இந்தக்காட்சி சுத்த அபத்தமாக பட்டது.நடக்க ஆரம்பித்தோம். போக்குவரத்து இல்லாத சாலைகள் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருந்தன. சில தேனீர்கடைகளே ஒற்றை பல்புடன், இயங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தன.லயோலா கல்லூரிக் காவலாளி எங்களை வாசலிலேயே மறித்து அனுமதிக்கமுடியாது என்றான். “யோவ்..நான் இந்தக் கல்லூரி பழைய மாணவன்..நாங்க உள்ளே போய் என்னையா செய்யப் போறோம்.. வாக்கிங்தான போப்போறோம்” என்று சுந்தரம் சொல்லிப்பார்த்தான் “ சார்..அட்டை இருந்தா உள்ளே போங்க..இல்லேனா முடியாது” காவலாளி உள்ளே விடுவதாக இல்லை. “சரி..உடு மாப்ளே.. இப்படியே நேரா காலேஜ் ரோடு போய் சாஸ்திரிபவன் சுற்றி வந்தால் போச்சு..” என்றான் சுந்தரம். அந்த அளவு தூரம் நடந்துவிடுவானா என்ற சந்தேகம் இருந்தாலும்,அந்த வழியில் சரவணபவன் கிளை எதுவும் இல்லை என்பது சற்று ஆறுதலாக இருந்தது..நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை சந்திப்பில் ஒரு உணவு விடுதியை பார்த்த ஞாபகம்..ஆனால் இந்த நேரத்திற்கு திறந்திருக்காது. “சரி..போகலாம்” என்று கூறி நடந்தோம்.எந்த விசயத்தை பற்றி பேசினாலும் முடிவில் ‘சப்பாத்தி சாப்பிட்டல் எடை கூடாது என்றோ, ஜூஸ் மட்டுமே குடித்தால் எடையை குறைத்து விடலாம்’ என்றுதான் முடிக்கிறான். சரி என்று அவனுக்கு பிடித்த பங்குச் சந்தை பற்றிய பேச்சை ஆரம்பித்தேன்.. “FYI ன்னா என்னடா..ஒரு எழவும் புரிய மாட்டேங்குது..” என்றேன்.உற்சாகமாக பேச ஆரம்பித்தான்.சற்று வேகமாகக்கூட நடந்தான். எல்லாம் ஸ்டெர்லிங் ரோடு சிக்னல் வரைதான்.நடையின் வேகம் குறைந்தது.பேச்சும் நின்றது.அல்லயன்ஸ் பிரான்ஸிஸ் தாண்டி வானிலை ஆராய்ச்சிமையத்தின் அருகில் நின்றே விட்டான். நன்றாக விடிந்தும் விட்டது. “முதல் நாள் கொஞ்சம் கஷ்டமா இருக்கு..இன்னைக்கு இது போதும்..நாளைக்கு இன்னும் கொஞ்சம் தூரம் போகலாம்..மெல்ல மெல்ல தூரத்தை அதிக படுத்தலாம்” என்றான். “சரி..வா..இப்படியே திரும்பிரலாம்..”என்றேன்.அவன் மெல்ல தயங்கி “ஒரு ஆட்டோ புடிச்சு திரும்பிரலாமா?..” என்று கேட்டான். “டேய்..வாக்கிங் போய்ட்டு வரேனு சொல்லிட்டு ஆட்டோ புடிச்சு திரும்பினால் அசிங்கமா இருக்கும்..” என்றேன். “ நாம கார்ல போய் வாக்கிங் போகலையா..அது மாதிரிதான் இதுவும்..வேணுமின்னா கொஞ்சம் முன்னாடியே இறங்கிக்கலாம்..இது இன்னக்கு மட்டும்தான்”என்றான் சுந்தரம். “சரி வந்துத்தொலை..ஆட்டோவ புடி” என்றேன்.

ஆட்டோ பிடித்து லயோலா தாண்டி சப்-வே முன்னாடி இறங்கிக்கொண்டோம். நான் சப்-வே நோக்கி நடந்தேன். “இப்படியே மேல போய் ரயில்வே ஸ்டேஷனை கிராஸ் பண்ணி போயிடலாம்..இது ஷாட் கட்” என்றான் சுந்தரம். வாக்கிங் போவதற்கு ஷாட்-கட் வழி கண்டுபிடிக்கும் என் புத்திசாலி நண்பன்.
" இந்த ஆட்டோ விசயம் கீதாவுக்கு தெரிய வேண்டாம்.. நாளைக்கு முழுக்க நடைதான்”என்று கேட்டுக்கொண்டான்.பரவாயில்லை இந்த முறை கொஞ்சம் அக்கறையோடுதான் இதில் ஈடுபடுகிறான் என்பது தெரிந்தது. அந்த நேரத்திலும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. சென்னை நகரம் அன்றைய பொழுதை துவங்கிவிட்டது.ரயில் நிலையத்தில் நுழைந்து அதன் மறுமுனையில் வெளிவந்தால் அவன் வீடு. பேசிக்கொண்டே வந்தவன் திடிரென்று நின்று..“இங்கு நீ ரவா கிச்சடி சாப்பிட்டிருக்கியா..?” என்று கேட்டான்.

அவன் காண்பித்த இடம் ரயில் நிலைய காண்டீன்.