Wednesday, October 3, 2007

அமெரிக்க கூலிப்படை-Blackwater

அமெரிக்காவின் அடியாள் படையில் முக்கியமானது இந்த ‘பிளாக் வாட்டர்’ (Blackwater- private military and security company) தனியார் ராணுவ கம்பெனி. காசு கொடுத்தால் போதும்..எங்கு வேண்டுமானாலும் இறங்கி அடித்து நொறுக்குவார்கள்.எரிக் பிரின்ஸ் என்பவரால் அமெரிக்காவில் உள்ள நார்த் கரோலினாவில் 1997-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த தனியார் ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு, வருடத்திற்கு 40,000 பேருக்கும் அதிகமாக பயிற்சி தருவதாக கூறப்படுகிறது.

எரிக் பிரின்ஸ் ஒரு முன்னால் அமெரிக்க கப்பற்படையின் கமாண்டோ ஆவார்.இந்த நிறுவனம் தன்னை ஒரு தொழில்முறை ராணுவம் என்றும்,சட்ட ஒழுங்குகளை அமல்படுத்துவது, பாதுகாப்பு மற்றும் போர் நடைபெறும் இடங்களில் அமைதிப்படையாகவும் செயல் படுவதாகவும் சொல்லிக்கொள்கிறது.இந்த தனியார் ராணுவத்தில் அமெரிக்கர்கள் அல்லாது கொலம்பியா,சிலி,தென் ஆப்ரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்களும் பணத்திற்காக பணியாற்றுகிறார்கள்.தற்போது இதன் தீவிரமான செயல்பாடுகள் இராக்கில் நடைபெற்று வருகின்றன.இராக்கிற்கான அமெரிக்க தூதர், அங்கு பயணம் செய்யும் அரசு அதிகாரிகளின் பாதுகாப்பு, மற்றும் சில பாதுகாப்பு நடவடிக்கைகளும் இந்த நிறுவனத்திடம்தான் ஒப்படைக்கப் பட்டுள்ளது.இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள்தான் இப்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.இராக்கிய பாதுகாப்பு படையினரோடும், பொதுமக்களிடமும் அத்துமீறலில் இறங்கியதாகவும் கடும் குற்றச்சாட்டுக்கு எழுந்துள்ளது

சென்ற மாதம் பாக்தாதில் நடைபெற்ற ஒரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் 11 இராக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். அதில் இந்த ‘பிளாக் வாட்டர்’ கடுமையான குற்றச்சாட்டுக்கு ஆளானது.ஒரு முறை இராக்கிய துணை அதிபரின் மெய்காப்பாளரை ‘பிளாக்வாட்டர்’ வீரர் ஒருவர் குடிபோதையில் சுட்டுவிட்டார்.அந்த வீரர் மீது எந்த ஒரு வழக்கும் பதியப் படாமல் இராக்கை விட்டு அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டார். இராக்கில் நடைபெற்ற 195 மோதல் சம்பவங்களில் இந்த ‘பிளாக்வாட்டர்’ படைதான் துப்பாக்கி சூட்டை 163 முறை முதலில் துவக்கியுள்ளது.இராக்கின் பலூஜாவில் இந்தக் கூலிப் படையின் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டு அதில் இரண்டு பேரின் உடல்கள் பாலத்தில் தொங்கவிடப்பட்டன. அதைத் தொடர்ந்து நடந்த அமெரிக்க படையின் பதிலடியில் ஏகப்பட்ட இராக்கிய பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். எண்ணற்றோர் அகதிகளாக இடம் பெயர்ந்தார்கள்.

பெரும்பாலான மோதல்களில் ‘பிளாக்வாட்டர்’படை ஒடும் வாகனங்களில் இருந்து சுட்டிருக்கிறார்கள். எத்தனை பேர் இறந்தார்கள் என்ற கணக்கையும் இவர்கள் எடுப்பதில்லை.காயம் பட்டவர்களுக்கு உதவுவதும் கிடையாது.

ஆப்கனிலும் இவர்களின் செயல்பாடுகள் நடந்து வருகிறது. இவர்களின் விமானிகள்
எந்த ஒரு விதிமுறைகளையும் கடைபிடிப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது.2004-ல் ஆப்கனில் இரண்டு அமெரிக்க வீரர்கள் விமான விபத்தில் கொல்லப்பட்டதற்கு ‘பிளாக்வாட்டர்’ விமானிகளும்,அவர்கள் விமானமும்தான் காரணம் என்று செய்திகள் கூறுகின்றன.வெளிநாட்டில் மட்டுமல்லாமல் அமெரிக்காவின் நியு ஆர்லியன்ஸ் நகரிலும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டபோது மக்களின் அதிருப்தியை பெற்றது. அவர்கள் அதிநவீன ஆயுதங்களோடும், லூசியானா மாகாணத்தின் பாதுகாப்புத் துறையின் ‘பேட்ஜ்’களை மார்பில் அணிந்திருந்ததும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் லூசியானா மாகாணத்தின் கவர்னரின் அனுமதியோடு புயல் நிவாரண பணிகளைத்தான் தாங்கள் செய்வதாக அந்த நிறுவனம் சொன்னது.

FBI இவர்கள் சம்பந்தமான குற்றச்சாட்டுகளை இப்போது விசாரணையை துவக்கியுள்ளது. இந்த விசாரணையின் லட்சணம் எப்படியிருக்கும் என்பதை ஓரளவுக்கு யூகிக்கலாம். இருந்தாலும் அமெரிக்காவிலும்,உலகின் பல பகுதிகளிலும் இந்த கூலிப்படைக்கு எதிர்ப்பு வரத்தொடங்கி விட்டது.ஆனால் இந்நிறுவனத்தின் தலைவர்கள்,தங்கள் வீரர்கள் எப்போதுமே சரியான மற்றும் தேவைப்படும் நடவடிக்கைகளைத்தான் எடுப்பார்கள் என்று கூறுகிறது.

இந்த நிறுவனம் 2001-லிருந்து அமெரிக்க அரசிடமிருந்து ஒரு பில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டியிருக்கிறது.2004-2006 ஆண்டுக்காக மட்டும் அமெரிக்க அரசிடமிருந்து 832 மில்லியன் டாலர்களை தன் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பெற்றிருக்கிறது.

அமெரிக்கா இப்போது நாடு பிடிக்கும் பணியையும் outsourcing முறையில் ஆரம்பித்திருப்பதாக தெரிகிறது.

குவைத்தை முழுங்கியாகிவிட்டது…ஆப்கன் பிடியில் உள்ளது…இராக்கில் வேலைகள் நடை பெறுகின்றன..இரானும்,வடகொரியாவும் project list-ல் உள்ளன.

ஆகவே ஆயுதங்கள் காத்திருக்கின்றன ஆட்களுக்காக…!

5 comments:

மாசிலா said...

இது போன்ற கூலி படைகள் இருப்பதற்கு இன்னும் சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் அமெரிக்க இராணுவ பொறுப்பிலும் கணக்கிலும் வராது. இவர்கள் இறந்தாலும் இதே போல்தான். இதனால், அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்க மக்களுக்கு எந்த வித விளக்கங்களும் கொடுக்க தேவையில்லை. ஓட்டுப் பொறுக்கி சனநாயக அமெரிக்காவிற்கு இந்த முறை கூலி படை அடியாட்கள் பல வகைகளில் உதவியாக இருக்கின்றன.

இருந்தாலும் இந்த கூலிப்படையினர்களின் வாழ்க்கையும் சோகங்கள் நிறைந்ததுதான். நாய் வாழ்க்கைதான்.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

ச.மனோகர் said...

மாசிலா...நீங்கள் சொல்வது போல் அந்த கூலிப் படையினரின் வாழ்க்கை சோகங்கள் நிறைந்ததுதான்.ஆனால் முழுக்க முழுக்க பணத்திற்காக போரிடும் இவர்களிடம் குறைந்தபட்ச தேச நலநோக்கம் இல்லாத காரணத்தால் அப்பாவி மக்களுக்கு பாதிப்பு அதிக அளவில் இருக்கும்.

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

மு மாலிக் said...

இந்த செய்தியை தமிழ் மக்களுக்கு சொல்லும் உங்கள் செயல் வரவேற்கத்தக்கது.

ஜமாலன் said...

பயனுள்ள பதிவு. புதிய செய்திகளை அறிவிக்கும் உங்கள் இந்த பணிக்கு பாராட்டக்கள்.

நன்றி.

ச.மனோகர் said...

நன்றி ஜமாலன்...!