Thursday, October 4, 2007

கொஞ்சம் சிந்திப்போமா சகோதரிகளே...?

சமீபத்தில் நண்பரொருவர் புதிதாக ஆரம்பித்த (Fancy Store)கடைக்குச் சென்றிருந்தேன்.நண்பர் சில சாமான்களை அடுக்கிக் கொண்டிருக்க,நானும் உதவலாமே என்ற எண்ணத்தில் சாமான்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.அவை முகப்பூச்சு அழகுக் க்றீம்கள்.சில க்றீம்கள் அடங்கியிருக்கும் பெட்டிகளின் பின்பக்கத்தைப் பார்க்க,சின்ன எழுத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு வரி கண்ணில் பட்டது."Not tested on animals" (விலங்குகளின் மேல் இச்சாதனம் உபயோகிக்கப் படவில்லை).வேறு சில நிறுவனங்களின் க்றீமில் அவ்வரி காணப்படவில்லை. அன்று முழுவதும் அவ்வரியே என் மனதில் வந்து போக,அது என்ன "Not tested on animals" என ஆராய்ச்சி செய்ய களத்தில் குதித்தேன்.இதற்காக எனக்கு இணையத்தளங்கள் பெரிதும் உதவின.எவ்வளவு கொடூரமான உண்மைகள்...?

மனிதர்களது முகப்பூச்சுக்காக என்னென்ன கொடுமைகளை ஒன்றும் அறியா விலங்குகள் அனுபவிக்க நேரிடுகின்றன?அந்த வேதனைகளை நீங்களும் சற்றுப் படித்துப் பாருங்கள்.

விலங்குகளின் மீது திணிக்கப்படும் அமிலக் கொடுமைகள் :

மனிதர்கள் அன்றாடம் உபயோகிக்கும் பலவித அழகுசாதனங்களிலும் அமிலப் பொருட்கள் கலந்துள்ளன என்று தெரியும்.ஆனால் ஒவ்வொரு அழகுப்பொருளிலும் 50,000 இலிருந்து 60,000 வரை அமிலக்கூட்டுப் பொருட்கள் அடங்கியுள்ளன தெரியுமா...?ஆனால் பலருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால் இந்த அபாயகரமான அமிலக்கூட்டுக் கலவைகள் ஆயிரமாயிரம் முயல்கள்,குரங்குகள், எலிகள்,அணில்கள்,பன்றிகள் மீது மிகவும் கொடூரமான முறையில் பரிசோதிக்கப்படுகின்றன.பரிசோதனைகளின் போது அவற்றின் கண்கள் குருடாக்கப் படுகின்றன.உறுப்புக்களை எரித்து,அரித்து விடும் அமிலங்கள் வாய்க்குள் ஊற்றப்படுகின்றன.

கொடூரமான சில பரிசோதனைகள் :

அழகு சாதனங்களின் முடிசூடா மன்னியான உதட்டுச் சாயம் எல்.டி 50 முறையில் அதாவது Lethal dose என்ற முறையில் 1927ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வருகின்றன.இந்த லிதல்டோஸ் முறையில்,ஆசனிக் என்ற தீங்கு விளைவிக்கும் அமிலத்தை முயல் போன்ற பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் விலங்குகளின் வாயில் ஒரு குழாயை நுழைத்து அதில் ஊற்றி பரிசோதனை செய்யப்படுகின்றது.இதனால்,அவ்விலங்குகளின் கண்களிலிருந்தும் வாயிலிருந்தும் இரத்தம் கசிந்து விடுகின்றன.அல்லது வாழ்நாள் முழுவதும் பக்கவாத நோய் தாக்கி அவதிப்பட்டு இறந்து விடுகின்றன.

நாம் தலைக்குத் தேய்த்து தலைமுடியை பளபளவென்று வைத்துக்கொள்ள உதவும் ஷாம்புக்கள்,கண்களை அழகுபடுத்தும் மஸ்கராக்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன தெரியுமா?இந்த வகை பரிசோதனைகளை குருட்டுப்பரிசோதனைகள் என்கிறார்கள்.
இதில் கருணை,இரக்கம்,அன்பு சிறிதளவேனும் இன்றி விலங்குகளின் கண் இமைகளை கத்தரித்து எடுத்து விடுகிறார்கள்.பின் கண்களைப் பெரிதாக்குவதற்காக,அவைகள் கண்களை மூடாமல் இருக்க அவற்றின் கண்மேல் பகுதியை கிளிப் போட்டு நெற்றிப் பகுதியோடு இணைத்து விடுகிறார்கள்.தலையைத் திருப்பாமல் இருக்க சுவரோடு ஒரு உலோக பெல்ட் போட்டு விடுகிறார்கள்.

அதன் பின் ஆரம்பிக்கும் கொடுமைகள்.விதவிதமான அமிலக்கலவைகள் கண்களில் ஊற்றும் போது கதறித் துடிக்கும் இம் மிருகங்களின் கண்களிலிருந்து வெளிப்படும் இரத்தத்தை பரிசோதனைக்கூடத்தில் பரிசோதனை செய்து அழகுசாதனங்களில் அவற்றை உபயோகப்படுத்துவதால் மனிதர்களுக்குத் தீங்கு விளையுமா,விளையாதா எனக்கண்டுபிடிக்கப் படுகின்றன.ஆனால் அவ்விலங்குகளோ மருத்துவ உதவி ஏதுமின்றி,இரத்தம் கக்கி மடிகின்றன.

இதற்கான தீர்வு என்ன ?

PETA (People for Ethnic Treatment of Animals) போன்ற விலங்குகளின் பாதுகாவலர்களின் எதிர்ப்புக்குரலால் சிந்திக்கத் தொடங்கியவர்களின் சட்டம் ஒன்று அமுல்படுத்தப் பட்டிருக்கின்றது.அதாவது எல்லா அழகு சாதனங்களிலும் ஒரு வாக்கியம் இருக்க வேண்டும்.
"இச்சாதனம் விலங்குகளின் மேல் பரிசோதிக்கப்பட்டதல்ல"

எனவே சகோதரிகளே !அடுத்த முறை உங்களுக்குப் பிடித்த மேக்-அப் பொருட்கள் வாங்கும் முன் அந்தப் பொருளில் "விலங்குகளின் மேல் பரிசோதிக்கப் படவில்லை" என்ற லேபிள் உள்ளதா என்று பார்த்து வாங்கவும்.இல்லையென்றால் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத (Herbal) அழகுசாதனங்கள் வாங்கவும்.இதனால் அவற்றை உபயோகிக்கும் போது பரிதாபமாக வலியினால் கதறும் விலங்குகளின் குரல் உங்களை உலுக்காதல்லவா..?!

குறிப்பு: இந்த பதிவு நண்பர் ரிஷான் ஷெரீப் என்பவரின் பதிவிலிருந்து,அவருடைய அனுமதியுடன் இங்கு மறுபதிவு செய்யப்படுகிறது.மூலத்திற்கு இங்கு செல்லவும்:

http://rishanshareef.blogspot.com/2007/10/blog-post.html

6 comments:

மாசிலா said...

//அடுத்த முறை உங்களுக்குப் பிடித்த மேக்-அப் பொருட்கள் வாங்கும் முன் அந்தப் பொருளில் "விலங்குகளின் மேல் பரிசோதிக்கப் படவில்லை" என்ற லேபிள் உள்ளதா என்று பார்த்து வாங்கவும்//

இனிமேல், நேரடியாக மனிதர்கள் மீதே பரிசோதிக்கப்படும் என எடுத்துக்கொள்ளலாமா?

;-D

நல்ல பதிவு.

ச.மனோகர் said...

மாசிலா.. ஏகாதிபத்திய நாடுகள் சில மருந்துகளை மூன்றாம் உலக நாடுகளிலும்,ஆப்பிரிக்க நாடுகளிலும் மக்களை வைத்தே சோதிப்பதாக கூட செய்திகள் வந்தது.

பக்க விளைவு காரணமாக 'மெக்ஸோபாம்' என்ற மாத்திரை அமெரிக்காவில் தடை செய்யப்பட்டாலும் இந்தியாவில் வெகுகாலம் பன்னாட்டு கம்பெனியால் விற்கப்பட்டு வந்தது.இதெல்லாம் மனிதர்கள் மீதான பரிசோதனை தானே!

வருகைக்கு நன்றி.

வடுவூர் குமார் said...

விலங்குகள் மீது சோதனை என்பது கொடுமையாக இருக்கு.

துளசி கோபால் said...

body shop என்ற நிறுவனம் தயாரிக்கும் அழகுசாதனங்கள் விலை கொஞ்சம் கூடுதல்ன்னு சொன்னாலும், விலங்குகள் மேல் பரிச்சோதிக்கபடாதது.

அதென்ன அழகோ......... மனுஷனை மாதிரி அபாயமான விலங்கு உலகத்தில் வேற ஒண்ணு இருக்கா என்ன?

ஏந்தான் இப்படி வெளிநாட்டு அழகு சாதனத்துக்கு நம்ம மக்கள் அலையறாங்க? (-:

Anonymous said...

//மாசிலா.. ஏகாதிபத்திய நாடுகள் சில மருந்துகளை மூன்றாம் உலக நாடுகளிலும்,ஆப்பிரிக்க நாடுகளிலும் மக்களை வைத்தே சோதிப்பதாக கூட செய்திகள் வந்தது.//

முற்றிலும்உண்மை.....
//விலங்குகளின் மேல் பரிசோதிக்கப் படவில்லை" என்ற லேபிள் உள்ளதா என்று பார்த்து வாங்கவு//
அப்படி என்றால்அதுமிகவும்ஆபத்தானஒருபொருள்

http://bruno.penandscale.com/2007/09/drugs-trials-human-volunteers-and.html


பரிசோதனை எதுவுமே செய்யப்படாதமருந்து...

மாசிலா அவர்கள்கூறியதுமுற்றிலும்சரி!!!

அதுபோல்தான் ஆயுர்வேத (Herbal) அழகுசாதனங்கள்.... சோதனை செய்யப்படாதவை... என்னபக்கவிளைவுவரும்என்றுயாருக்கும்தெரியாது....

ச.மனோகர் said...

'அதுபோல்தான் ஆயுர்வேத (Herbal) அழகுசாதனங்கள்.... சோதனை செய்யப்படாதவை... என்னபக்கவிளைவுவரும்என்றுயாருக்கும்தெரியாது....'

இந்த சந்தேகம் எனக்கும் இருந்தது. தெளிவு படுத்தியதற்கும்,வருகைக்கும் நன்றி டாக்டர்!