Tuesday, August 5, 2008

மனிதர்கள்

வெய்யில் கொளுத்தும் ஒரு மதிய வேளையில் என் நண்பரை பார்க்க அவர் கடைக்குச் சென்றேன். சிறிது நேரம் ஏ.சி குளுமையில் இருக்கலாம் என்ற நினைப்பையும் தவிர்க்கமுடியவில்லை. அந்த நண்பர் ஜாப் டைப்பிங், ஜெராக்ஸ் மற்றும் ஸ்பைரல் பைண்டிங், லாமினேசன், ஸ்கேனிங், எஸ்.டி.டி தொலைபேசி போன்ற தேவைகளுக்கான கடையை நடத்திக்கொண்டிருக்கிறார். நான் போனபோது அவர் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். வாடிக்கையாளர்கள் நிறைய பேர் காத்திருந்தார்கள். என்னைப் பார்த்ததுமே நண்பர் முகத்தில் மலர்ச்சி.

"வா..வா..நல்ல நேரத்தில் வந்தாய்..பையன் சொல்லாம லீவு போட்டுட்டான்..அஜீத் படம் எதாவது இன்னைக்கு ரிலீஸாகுதா?" என்றார் நண்பர்.

நண்பர் மிக மும்முரமாக தட்டச்சு செய்துகொண்டே ஜெராக்ஸ் எடுத்தார், ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டே லாமினேசன் செய்தார், லாமினேசன் செய்து கொண்டே தொலை பேசியதற்கான பில்லை கிழித்து காசு வாங்கி கல்லாவில் போட்டார். ஒரு இயந்திரம் போல இயங்கினார். இந்தக் கடைக்குப் போட்டியாக சுற்று வட்டத்தில் வேறு கடை இல்லாததாலும், அருகே ஒரு அரசாங்க அலுவலகம் மற்றும் நிறைய தனியார் நிறுவனங்களும், ஒரு கல்லூரியும் இருந்ததால் கடையில் எப்போதும் வாடிக்கையாளர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். இந்த மாதிரி சமயங்களில் நான் அங்கு இருந்தால் அவருக்கு உதவியாக எனக்குத் தெரிந்த சில வேலைகளை செய்வதுண்டு. அது போலவே அன்றும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பிளாப்பி டிஸ்க், பென் டிரைவ் மற்றும் சி.டிக்களை வாங்கி பிரிண்ட் அவுட்கள் எடுத்துக் கொடுத்தேன். சில சி.டிக்களை 'எரித்து'க் கொடுத்தேன். இப்போது மேலும் மேலும் வாடிக்கையளார்கள் வந்துகொண்டே இருந்தார்கள். நாங்கள் இருவருமே பரபரப்பாக இயங்கினாலும் நிமிர்ந்து பார்த்தால் எங்கள் மேசையை சுற்றி நிறைய தலைகள் தெரிந்துகொண்டே இருந்தன. இரண்டு கிளாஸ்களில் இருக்கும் டீ யும் ஆடைகட்டிவிட்டது. மூன்று மணி வாக்கில் சற்று கூட்டம் குறைந்தது. ஒரு தருணத்தில் கடையில் ஒரு வாடிக்கையாளர் கூட இல்லாத ஒரு சூழ்நிலை அமைந்தது.

"உனக்கு சாப்பாடு ஆர்டர் பண்ணவா?" என்று நண்பர் கேட்டார்.

"இல்லை நான் சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தேன். நீ சாப்பிடு..யாராவது வந்தால் நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றேன்.

" ஆமாம்..எனக்கும் சரியான பசி.." என்று கூறி வீட்டிலிருந்த கொண்டு வந்திருந்த டிபன் பாக்ஸை திறந்தார்.

அப்போது மூன்று பேர் உள்ளே நுழைந்தார்கள். அவர்களில் குண்டான ஒரு பெண்மணியும் இருந்தார். வந்தவர்கள் ஒரு பதட்டத்துடனும், வேகத்துடனும் இருந்தார்கள். மூன்று பேருக்கும் வியர்வை வழிந்தோடியது. இந்தக் கடையை தேடி நிறைய அலைந்திருக்கலாம். கைகளில் பைல்களும்,நிறைய பேப்பர்களும் இருந்தது. குண்டான பெண்மணி நாற்காலி தேடி உட்கார்ந்து மூச்சு வாங்கினார்.

" பிரதர்..இத டைப் பண்ணனும்..இத ஸ்கேனிங் பண்ணனும்..இந்த சி.டில இருக்குற எல்லாத்தையும் பிரிண்ட் எடுக்கணும்.." என்றார் வந்தவர்களில் ஒருவர்.

" சரி..கொஞ்சம் உட்காருங்கள்..ஒரு பத்து நிமிசம்..சாப்பிட்டுவிடுகிறேன்..உட்காருங்கள்" என்றார் நண்பர்.

"இல்லை பிரதர்..இது ரொம்ப அவசரம்..நாலு மணிக்குள் 'பிரிட்டீஸ் எம்பஸி'ல குடுத்தாகனும்..விசா பேப்பர்ஸ்"

"சார்..இத டைப் பண்ணவே முக்கா மணி நேரம் ஆகும்,அப்புறம் ஸ்கேனிங்,பிரிண்ட் எல்லாம் இருக்கு..ஒரு அஞ்சு நிமிசம்..சாப்பாட முடிச்சுடுறேன்..கொஞ்சம் வேயிட் பண்ணுங்க" என்றார் நண்பர்.

"பிளீஸ்..ரொம்ப அவசரம்..கொஞ்சம் உதவி பண்ணுங்கள்" என்றார்கள் வந்தவர்கள்.

" சரி சார்..ஒரு ரெண்டு நிமிசம்..இங்க பாருங்க....இப்ப ஆரம்பிச்சுடலாம்" என்றார் நண்பர்.

" இல்ல..நாலு மணிக்கு முன்னால இந்த பேப்பர்ஸ உள்ள கொடுக்கலனா அப்புறம் திங்கக்கிழமைதான் முடியும். கொஞ்சம் சிரமம் பார்க்காம உடனே இத செஞ்சு கொடுங்க..பிளீஸ்"

நண்பரின் முகம் சற்று எரிச்சலில் மாறியது. இருந்தாலும் நொடியில் அதை மாற்றிக்கொண்டு டிபன் பாக்ஸை மூடி வைத்துவிட்டு அவர்களுடைய டைப்பிங் வேலையை ஆரம்பித்தார். நான் பிரிண்ட் எடுக்க ஆரம்பித்தேன். வந்தவர்கள் இப்போது சற்று நிம்மதியாகி அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் நாங்கள் அவர்கள் வேலையைத்தான் செய்கிறோமா என்பதை அவ்வப்போது உறுதி செய்துகொண்டார். நண்பரின் கைகள் படுவேகமாக இயங்கியது தெரிந்தது. இப்போது வந்தவர்கள் முழுவதுமாக இயல்புக்கு வந்துவிட்டார்கள். சில நிமிடங்கள் பொறுமையாய் இருந்த அவர்கள் கேட்டார்கள்..

"பிரதர்..இந்த எல்லா வேலையையும் முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?"

"எப்படியும் ஒரு அரைமணி நேரமாவது ஆகும்" என்றார் நண்பர்.

"அப்ப ஒண்ணு செய்யுங்க..நீங்க டைப் அடிங்க..அதுக்குள்ள நாங்க போய் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறோம்"

3 comments:

Anonymous said...

எனக்கும் தட்டச்சு நிலையத்திலிருக்கும் போது இது போல இம்சை அனுபவங்களுண்டு மனோகர்.

Anonymous said...

உங்களின் "மனிதர்கள்" படித்தேன் , பரபரப்பான இந்த வாழ்க்கையில் மனிதர்களின் சுயநலமான போக்கை மிக அழகாகவும், ரசிக்கும் வகையிலும் எளிதாக உங்களுக்கே உரிய நடையில் அசத்தியுள்ளீர்கள்.... தொடர வாழ்த்துகள்...

அன்புடன் அருணா said...

அடப்பாவமே!! என்ன சுயநலம்????
அன்புடன் அருணா