Wednesday, August 20, 2008

அறையில் ஒரு நாள்

அறையில் விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. எல்லோரும் திரைத்துறையில் முயற்சிக்கிறவர்கள். உதவி இயக்குனர்கள்,உதவி ஒளிப்பதிவாளர்,கவிதை பண்ணுபவர் என்று.

"நேரடியான படுக்கை அறை காட்சிகளை எதிர் கொள்ளும் மனநிலை நம் ரசிகர்களுக்கு கிடையாது.. அதற்கு ஈடாக குத்துப்பாட்டுகளும், வக்கிரம் மிகுந்த நடன அசைவுகளும் அந்த இடத்தை பிடித்துக்கொள்ளுகின்றன.." என்ற தாமு ஒரு கவிஞன்.

"இத்தாலி படமான 'லாஸ்ட் டாங்கோ இன் பாரீஸ்' -ல் ஒரு ஆணும்,பெண்ணும் முதல் சந்திப்பிலேயே எந்தவித அறிமுகமும் இல்லாமல் செக்ஸில் இறங்குவார்கள்..மர்லன் பிராண்டோவும், மரியா ஷீனீடரும் மிருகங்களை போல இயங்குவதுகூட எனக்கு ஒரு அழகிய கவிதை போலத்தான் தெரிந்தது..." என்றான் ஜெயராஜ்,உதவி ஒளிப்பதிவாளர்.

"சித்திரம் பேசுதடி படம் பார்த்தாயா? அதில் ஒரு காட்சி..கதாநாயகி ஒரு ரவுடி மேல் காதல் வயப்படுகிறாள்.. எரிச்சலோடு வீட்டிற்குள் உலா வருகிறாள்..அப்பா கேட்கிறார்..'ஏம்மா..அந்த பொறுக்கிய பார்த்தாயா?' என்று. அவள் கூறுகிறாள்.. 'இல்லப்பா..இன்னைக்கு பார்க்கல..' கைகளில் ஒரு flower vase..உருட்டிக்கொண்டு சொல்கிறாள். காதல் வயப்படும் பெண்கள் எப்போதும் கைகளில் எதாவது பொருளை கையாண்டு கொண்டே இருப்பார்களாம்..உளவியல் சொல்லுகிறது...இங்கும் இயக்குனர்கள் முயற்சிக்கிறார்கள்" இது கிருஷ்ணகுமார்..இவனும் ஒரு உதவி இயக்குனர்.

"நீ சொல்வது இயக்குனரின் திறமை பற்றி..நான் சொல்வது படம் பார்ப்பவர் பற்றி..இங்கு படம் பார்ப்பவர்களுக்கு, ஒரு காட்சியை பார்ப்பதற்கான limitations உள்ளது..பாத்திரங்கள் புகை பிடிப்பதுகூட பிரச்சனையை கிளப்புகிறது. பெரும்பாலான இயக்குனர்கள் நடிகர்களின் பின்னால் இருந்துதான் இயங்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. சினிமாவின் வியாபாரத்தை நடிகன் இங்கு தீர்மானிக்கிறான். இதை நாம் மறைக்க வேண்டியதில்லை" என்றான் மோகன்தாஸ். உதவி இயக்குனர்.

"பிரச்சனை நம் சமூக மதிப்பீடுகளில் உள்ளது. படைப்பாளிகளின் கட்டுப்படுத்தப்பட்ட படைப்புகளைத்தான் இங்கு நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய். சமூகம் வர்க்கங்களாய் பிரிந்து கிடப்பதுதான் காரணம்" என்று கூறினான் கிருஷ்ணகுமார்..

"நீ 'நியூ சென்சுரி' புத்தக தயவில், மலிவு விலையில் 'மார்க்ஸியம்' படித்தவன். இப்படி படக்கென்று வாந்தி எடுக்காதே..'மார்க்ஸியம்' அழியத் தொடங்கி ரொம்ப நாளாகிவிட்டது.. அதற்கு பின்னால் நிறைய விசயங்கள் வந்துவிட்டன..கொஞ்சம் பின்நவீனத்துவம் பற்றியும் தெரிந்து கொள் " என்றான் தாமு.

"பெரும்பாலும் சோர்ந்துபோன, முன்னாள் 'மார்க்ஸிஸ்டு'களின் குழப்பமான உளறல்கள்தான் பின்நவீனத்துவம்.. ஐரோப்பாவின் சில பகுதிகளில் இந்த பின்நவீனத்துவம் தன்னுடைய கல்லறையை கட்டத்துவங்கிவிட்டது. 'மார்க்ஸியம்' ஒரு சமூக விஞ்ஞானம்..அழிவதற்கு வாய்ப்பில்லை.அது இதுவரை நிறைய 'இசங்களை' சந்தித்துவிட்டது. post-modernism என்பது ஒரு பேஷன்..அவ்வப்போது இதுபோல நிறைய பேஷன்கள் வரும். இம்ப்ரெஷனிஸம்..அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்ப்ரெஷனிஸம் போல..அவைகள் மார்க்ஸியத்தின் முன் வந்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு வழிவிட்டுவிடும்.. மார்க்ஸியம் தொடர்ந்து நடைபோடும். மார்க்ஸ் காலத்திலேயே 'ஸிண்டிகலிச'த்தில் ஒரு பகுதியினர் அசைத்து பார்த்தனர். 'இலக்கு என்று எதுவும் இல்லை..பயணிப்பது மட்டும்தான் நடக்கும்' போன்ற மயக்கும் சிந்தனை போக்குகள் வந்து போயின.." என்றான் கிருஷ்ணகுமார்.

"எனக்கு ஒன்றுமே புரியவில்லை..புரிகிறாற்போல் சொல்" என்றான் ஜெயராஜ்.

"எல்லா நிறுவனமாதலையும் எதிர்த்துவிட்டு, அதிகார மய்யத்தை கேள்விகள் கேட்டு,சிறு சிறு குழுக்களாய் தாந்தோன்றித்தனமாக செயல்பட்டு குழப்புவதுதான் நோக்கம்..கடைசியில் தனிமனித வழிபாட்டில் போய் முடியும்" என்றான் கிருஷ்ணகுமார்.

"சுத்தம்.." என்றான் ஜெயராஜ்.

"நீ பின்நவீனத்துவம் குறித்து சரியான புரிதல் இல்லாமல் பேசுகிறாய்.." என்றான் தாமு.

"சரி..அது பற்றிய சரியான புரிதலை நீ எனக்கு விளக்கு..'ஆசிரியர் இறந்து விடுகிறார்' பற்றி நீ எப்படி புரிந்துகொண்டாய் என்பதை சொல்லு பார்ப்போம்.." என்று வினவினான் கிருஷ்ணகுமார்.

"நானும் நீயும் அதை இரு வேறு விதங்களில் புரிந்துகொண்டிருப்பதை பின்நவீனத்துவம் அங்கீகரிப்பதுதான் அதன் சிறப்பு" என்றான் தாமு.

"ஆனால் புரட்சி என்பது ஒரே தலைமையின் கீழ் கட்டுப்பாட்டுடன் நடப்பது. ஆனால் அதற்கு முன்பாக சமூகத்தில் உள்ளூர நிறைய நீரோட்டங்கள் நடக்க வேண்டியதிருக்கிறது. மெல்ல நடந்து கொண்டுமிருக்கிறது" என்றான் கிருஷ்ணகுமார்.

" எப்போதுதான் இந்த மாதிரி கனவு காணுவதைவிடப்போகிறீர்களோ..தெரியவில்லை.. 'மூலதனம்' புத்தகத்தை, அண்ணா சாலையில் நின்று கொண்டு இலவசமாக கொடுத்துப்பார்..எத்தனை பேர் வாங்கிக்கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்வாய்.." என்றான் மோகன்தாஸ்.

"அப்படியானால்..பால்-டி-அமட்டோ எழுதிய The meaning of marxism என்ற புத்தகம் இப்போது இலட்சக்கணக்கில் விற்றுக்கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றதே..அதற்கு என்ன சொல்கிறாய்..?" என்று கேட்டான் கிருஷ்ணகுமார்.

"அப்போ..பின்நவீனத்துவ இலக்கியங்கள் எல்லாம் என்னதான் செய்கின்றன..?" என்று கேட்டான் மோகன்தாஸ்.

"அதில்கூட ஏகப்பட்ட வாக்குவாதம்..சட்டை கிழிப்புகள்..உம்பர்டோ ஈக்கோ எழுதிய Name of the Rose என்ற நாவலை ஒருவழியாக பின்நவீனத்துவ நாவலாக எல்லோரும் ஏற்றுக்கொண்டதாக இணையத்தில் படித்தேன்" என்றான் கிருஷ்ணகுமார்.

"அப்படியானால் உன்னுடைய முதல் படம் இடதுசாரி சிந்தனை பிரச்சார படமாக இருக்குமா..?" என்று கிருஷ்ணகுமாரை பார்த்துக் கேட்டான் மோகன்தாஸ்.

"இருக்காது. என் படங்களில் மக்கள் பிரச்சனைகள் இருக்கும். எந்த ஒரு நேரடியான கொள்கை பிரச்சாரத்தையும், மக்கள் கலைப் படைப்புகளில் விரும்ப மாட்டார்கள் என்பது என் கருத்து. நீ தெருவில் பார்க்கும் அந்த சாதாரண மக்கள், அவர்களுடைய பிரச்சனைளோடு என் திரையில் வந்துவிடுவார்கள். நான் சொல்ல நினைப்பதை உள்ளூர உணர்த்துவேன்" என்றான் கிருஷ்ணகுமார்.

"உனக்கு நிறைய விருதுகள் கிடைக்கும்" என்றான் மோகன்தாஸ்.

"உன் கேலி புரிகிறது. அப்படியானால் அந்த சமயத்தில் நீ நிறைய படத் துவக்கவிழா பூஜையில் கலந்து கொள்வாய் என நினைக்கிறேன். நான் உன்னை தொலைக்காட்சியில்தான் பார்க்கமுடியும்" என்றான் கிருஷ்ணகுமார்.

"நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்..இரானிய,தென் அமெரிக்க படங்களை பார்த்துவிட்டு இங்கு முயற்சிக்கப் போகிறீர்கள்..எப்படியோ உங்கள் புண்ணியத்தால் தமிழ் சினிமா ஆஸ்கருக்கும், கான்ஸுக்கும் போனால் சரிதான்..." என்றான் தாமு.

"அப்போ இதையும் plagiarism மாதிரி என்று சொல்கிறாயா? நல்ல விசயத்தில் influence ஆவது தப்பா?.."

"தப்பு என்று சொல்லமாட்டேன்....ஒரு நிமிஷம்..யாரோ கதவை தட்டுகிறார்கள்..ஜெயா..கதவை திற.." என்றான் தாமு.

"அட..வாங்க கோனார்..உட்காருங்க.."

"தேவையில்லை..அது சரி..உங்களுக்கெல்லாம் இரக்கமே கிடையாதா?நானும் ஒரு மாசமா நடையா நடக்குறேனே..ஒருத்தராச்சும் காசு கொடுத்தீங்களா? உங்கள நம்பித்தானே கடன் கொடுத்தேன்.. தோசையும் இட்லியுமா தின்னீங்க இல்ல..காச கொடுக்க வேண்டியதுதானே..மொத்தமா ஆயிரத்தி ஐநூற தாண்டியாச்சு..இப்போ என்னடான்னா என் மெஸ் பக்கமா வராம பக்கத்து சந்து வழியா போறீங்க.. என்ன செய்வீங்களோ எனக்குத்தெரியாது...நாளைக்கு சாயந்திரம் எனக்கு பணம் வந்தாகணும்.. இல்லாவிட்டால் பிரச்சனையாயிடும்.." கதவை அடித்து சாத்திவிட்டு போனார் கோனார்.

விவாதம் தொடர்ந்து நடந்தது.
ச.மனோகர்
sa.manoharan@gmail.com