மந்தைவெளியில் குடியிருக்கும் என் ஒன்றுவிட்ட சகோதரி, ஒரு நாள் அதிகாலை நேரத்தில் தொலைபேசியில் அழைத்து ஒரு உதவி செய்ய வேண்டுமெனவும், உடனே வருமாறும் அழைத்தாள். அவளுடைய கணவர் ஒரு ஆடிட்டர். ஒரே மகள்.பெயர் ரேணுகா. எட்டாம் வகுப்பு படிக்கிறாள்.
நான் அவர்கள் வீட்டை அடைந்தபோது காலை மணி எட்டு.ரேணுகா தாயிடம் திட்டு வாங்கிக்கொண்டிருப்பது வெளியிலிருந்தே நன்றாக புரிந்தது. மூன்றாவது தோசையை சாப்பிட மறுக்கும் ரேணுகா பள்ளிச் சீருடையில் இருந்தாள்.முகம் உம்மென்றிருந்தது. செயல்களில் ஒரு கோபம் தெரிந்தது. சோபாவின் மீது பள்ளிக்கு எடுத்துச்செல்லும் பை கிடந்தது. அதன் வாய் திறந்திருந்தது. ரேணுகா என்னை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை.
"அப்படியே நீயும் உட்கார்ந்து சாப்பிட்டுவிடு..''என்றாள் சகோதரி.
''எதற்கு வரச் சொன்னாய்..என்னப் பிரச்சனை..?" என்றேன்.
"எல்லாம் இந்த பிசாசினால் வரும் பிரச்சனைதான்..இன்றைக்கு நானோ இல்ல இவ அப்பாவோ இவ கிளாஸ் டீச்சரை பார்த்து இவளை பற்றி ரிப்போர்ட் வாங்கணும். அவர் வெளியூர் போயிருக்கிறார். கொஞ்சம் நீ போய் அவ கிளாஸ் டீச்சரை பார்த்துட்டு வந்திடேன்..நாங்க ரெண்டு பேருமே ஊரில் இல்லைனு சொல்லிடு.இன்னைக்கு போய் பார்க்கலேனா இவ கிளாஸ் 'அட்டர்ன்' பண்ண முடியாது..அந்த ஸ்கூல் ரொம்ப கண்டிப்பு" என்றாள்.
"அம்மா..நீ வாம்மா..நீ தான் வரணும்.." சிணுங்கினாள் ரேணுகா.
"வாயத் திறந்த..வாயிலேயே போடுவேன்.."
"நீ போய் அவ கிளாஸ் டீச்சர பார்ப்பதில் என்னப் பிரச்சனை..?" என்று கேட்டேன்.
"ஒவ்வொரு தடவையும் நான் அங்க போய் சமாதானம் சொல்வதற்கு சங்கடமா இருக்கு. வீட்டில் நாங்கள் இவள் படிப்பு விசயமாக கவனம் எடுத்துக் கொள்வதில்லையாம்.. அந்த டீச்சர் ஒரே குற்றச்சாட்டு. அதுவும் இந்த முறை நடந்த டெஸ்டில் இரண்டு பாடத்தில் பெயில். அந்த டீச்சர் என்னை காய்த்து விடுவாள். நீ போய் எதாவது பேசி சமாளித்துவிட்டு வா" என்றாள்.
"மா..நீ வாம்மா..இல்லாட்டி அந்த மிஸ் திட்டுவாங்க" என்று மறுபடியும் எரிச்சலோடு கெஞ்சினாள் ரேணுகா.
"வாய மூடிகிட்டு மாமாவ கூட்டிகிட்டு போ..மிஸ்ஸு ஒன்னும் சொல்ல மாட்டாங்க..நீ முதல்ல லன்ச் பாக்ஸ எடுத்து பையில வை.."
"அவ அப்பா என்னா சொல்றார்..?" எனக் கேட்டேன்.
"அவர்தானே..எல்லாத்துக்கும் காரணமே அவர்தான்..அவர் செல்லம் கொடுத்து கொடுத்துதானே இவ அடங்காப்பிடாரிய இருக்கா..ராத்திரி பதினோரு மணி வரைக்கும் டி.விய போட்டுகிட்டு அப்பாவும்,மகளும் காமெடி ஷோ பார்த்துட்டு 'கெக்க பிக்கே'னெ சிரிக்க வேண்டியது... ஒரு கிரிக்கெட் மேட்ச விட்றதில்ல..பொம்பள புள்ளைக்கு எதுக்கு கிரிகெட் மேட்ச்? இவ கேட்டாள் என்பதற்காக, அவர் ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு 'பில்லா' படம் கூட்டிகிட்டு போறார்..என்னத்த சொல்ல.. எல்லா அக்கிரமங்களும் இவுங்க ரெண்டு பேரும் செய்ய வேண்டியது...கடைசியில் பள்ளிக்கூடத்தில் போய் நான் அவமானப்பட வேண்டியது..ஒரு தடவைக் கூட அவர் ஸ்கூலுக்கு போனதில்லை.போகவும் மாட்டார்.என்னைத்தான் அனுப்புவார்."
எனக்கு தோசையை சுட்டுப் போட்டுக்கொண்டே ரேணுகா பற்றிய பல குறைகளையும், பல செய்திகளையும் கூறினாள். மகளுக்கு படிப்பை காட்டிலும் வேறு விசயங்களில் ஈடுபாடு என்பது புரிந்தது. கிளம்பும்போது ரேணுகா தன் தாயிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் கிளம்பினாள்.கடும் கோபத்தில் இருக்கிறாள் என்பது புரிந்தது. நான் வருவதில் அவளுக்கு துளியும் விருப்பமில்லை என்பது தெளிவாக புரிந்தது. வழியில் நான் கேட்ட சில கேள்விகளுக்குக்கூட என் முகத்தை பார்க்காமல் ஒரிரு வார்த்தையில்தான் பதிலளித்தாள்.
பள்ளியில் பிரார்த்தனை முடிந்து, மாணவ மாணவியரின் இறைச்சல்கள் மெல்ல அடங்கி, வகுப்பெடுக்கும் ஆசிரியர்களின் அதட்டலான குரல்கள் ஆங்காங்கே கேட்டன. ஒரு சில மாணவ,மாணவியரே அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். அது ஒரு மத்திய,உயர் மத்திய குடும்பப் பிள்ளைகள் படிக்கும் பள்ளி எனத்தெரிந்தது. அங்கு படிக்கும் பிள்ளைகளின் புஷ்டியான தோற்றமே பெற்றோரின் பொருளாதார பின்னணியை நமக்கு விளக்கியது. ரேணுகாவின் வகுப்பு ஆசிரியையின் தனி அறையை நாங்கள் அடைந்தபோது, ஏற்கனவே இரண்டு மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்து காத்திருந்தனர். உள்ளே ஒரு மாணவனின் படிப்பாற்றல் அலசப்பட்டு,மாணவனுக்கு அர்ச்சனை விழுந்து கொண்டு இருந்தது. இப்போது ரேணுகாவின் முகத்தில் பயம் அப்பியிருந்தது. கண்களில் ஒரு நீர்த்திரை. எங்கள் முறை வந்து உள்ளே சென்றோம்.
அந்த ஆசிரியைக்கு ஒரு முப்பது வயதிருக்கலாம். கண்ணாடி அணிந்து சிடுசிடுவென முகத்தை வைத்திருந்தாள். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவள் பெற்றோர்கள் வர முடியாத சூழ்நிலையை கூறினேன்.
"குழந்தைக்காக ஒரு மணி நேரம் பள்ளிக்கு வரமுடியவில்லையா? இப்படி பெற்றோர்களே அடிக்கடி வெளியூர் பயணம் போனால்..குழந்தைகளின் படிப்பு என்னாவது?" என்று கேட்டாள்.
"இல்லை மேடம்.. ஒரு அவசர சூழ்நிலை..அதனால்தான்.." என இழுத்தேன்.
"இவளுடைய 'பிராகிரஸ்' சரியில்லை...வீட்டிலிருந்து கொஞ்சமாவது எங்களுக்கு சப்போர்ட் பண்ணனும்..இந்தப் பள்ளியில் இடம் கிடைப்பதே கஷ்டம்..உள்ளே வந்துவிட்டு படிக்கமாட்டேன் என்றால் எப்படி..? போன முறையே இவள் அம்மாவிடம் சொல்லியிருந்தேன்..கொஞ்சம் கண்டிப்பாக இருக்கும்படி..ஆனால் இப்போது இரண்டு பாடங்களில் பெயில்..வீட்டில் கொஞ்சமாவது படிக்கச்செய்யவேண்டும்..வீட்டில் எதாவது இவளுக்கு பிரச்சனை இருக்கிறதா என்பது முதலில் தெரியவேண்டும்" என்றாள்.
"இல்லை மேடம்..வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை..அம்மா,அப்பா சொன்ன பேச்சை கேட்பாள். அவர்களும் இவள் மீது பிரியமாக இருப்பார்கள். இவளுக்கென்று படிக்க தனி அறை..பள்ளியிலிருந்து வந்தவுடனேயே வீட்டுப்பாடங்களை செய்வாள். காலையில்கூட சீக்கிரமே எழுந்து படிப்பாள்..வீட்டில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஒருவேளை வகுப்பில் பாடம் நடத்தப்படும் போது புரிந்துகொள்வதில் பிரச்சனை வருகிறதோ..?" என சந்தேகப்படுவது போல் கேட்டேன்.
"வகுப்பில் சந்தேகம் வந்தால் கேட்டுத்தொலைக்க வேண்டியதுதானே..மற்ற பிள்ளைகளெல்லாம் கேட்டு தெரிந்து கொள்கிறார்களே..இவளுக்கு மட்டும் என்ன கேடாம்..? இவளை போன்றவர்களை வைத்துக் கொண்டு எங்கள் பள்ளி எப்படி நூறு சதவீத தேர்ச்சி காண்பிப்பது? அதெல்லாம் இல்லை.. இவளுக்குத் திறமை இல்லை..இவளெல்லாம் பிளஸ் டூ எங்கே தாண்டப் போகிறாள்..?" என்றாள்.
"என்ன மேடம் இது...இவளுக்கு திறமை இல்லை என்று சொல்லிவிட்டீர்கள்..படிப்பில் சற்று கவனம் குறைவாக உள்ளது என வேண்டுமானால் சொல்லலாம்..திறமை இல்லாமலா பத்தாம் வகுப்பு மாணவியை 'ஜாவ்லின் த்ரோ'வில் ஜெயித்திருக்கிறாள்..? பி.டி மாஸ்டரே வீட்டுக்கு வந்து, 'இவள் 'எய்ம்' நன்றாக உள்ளது என்கிறார்...நூறு மீட்டர் 'ரன்னிங் ரேஸி'ல் அம்பு போல கிளம்புகிறாள்..தனி 'கோச்' வைத்து பயிற்சி கொடுக்கலாம்' என்றும் சொல்கிறார்..மூன்று முறை பாட்டுப் போட்டியில் வெற்றி.. பள்ளிச் சேவையில் தேனாம்பேட்டை சிக்னல் அருகில் போக்குவரத்தை திறமையாக கட்டுப்படுத்தியதில் போக்குவரத்து காவற்துறையிடமிருந்து பாராட்டு பத்திரம் வாங்கியிருக்கிறாள்..ஒரு நாளிதழ் நடத்திய ஓவிய போட்டியில் முதல் பரிசு! திறமை என்பது படிப்பு மட்டுமில்லையே மேடம்..அடுத்த முறை நிச்சயம் எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்துக் காட்டுவாள்..எங்களிடம் உறுதி கூறியிருக்கிறாள்.. எனவே இவளுக்குத் திறமையில்லை என்று மட்டும் சொல்ல வேண்டாம்.." என்று சற்று உறுதியான குரலில் கூறினேன்.
சில வினாடிகள் எங்களை அமைதியாக பார்த்துவிட்டு.."சரி..அடுத்த முறை பார்க்கலாம்..ரேணுகா..நீ இப்ப கிளாஸுக்கு போகலாம்" என்று கூறினாள் அந்த ஆசிரியை.
நாங்கள் அந்த அறையை விட்டு வெளியே வந்தோம். அப்போது ரேணுகா என் கையை பற்றிக் கொண்டிருந்தாள்.
4 comments:
நல்ல வேலை செஞ்சீங்க பாபு.
உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
:-) very good (story ?)
mug adichu mark vaanguradhu thaan 18 varusha vaazhkainu .. ovorutharoda thanithanmaiya ipadi sitharadikira kalvi murai yepo maarum ? indha petror manamum yepo maarum ?
அன்புள்ள பாபுண்ணா...!
தொடர்ந்து உங்கள் வலைப்பதிவுகளை வாசித்து வருகிறேன் ,
வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை மிக அழகாக பதிவு செய்துள்ளீர்கள்,உங்களின் அனுபவத்தை அதன் சுவை சற்றும் குறையாமல் முடிவில் ஒரு சிறுகதைக்கான முத்திரையுடன் முடித்திருப்பது எனது வாசிப்பனுபவத்தை சுவாரசியமாக்குகிறது...
மேலும் எழுத ஆசைதான் , புதிதாய் இறக்குமதி செய்த "அழகி" தமிழ் மென்பொருளிள் இப்போதுதான் தட்டச்சு தடுமாறி பழகுவதால்,,.. விரைவில் நடைபழகி நிறைய எழுதுவேன்.. நான் யாருனே சொல்லலில, உங்கள் அன்பு தம்பி சுரேஷ் ஏகாம்பரம், திண்டுக்கல்...
கதையா இல்லை நிஜமா எனத் தெரியவில்லை. அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நிறையப் பேருக்குப் படிப்பைனையாக அமையும் கதையிது நண்பரே..!
Post a Comment