Saturday, August 8, 2009

களைவதாம் நட்பு

சில தினங்களுக்கு முன் என் நண்பனின் மனைவி உடனே என்னை அவள் வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு வரச் சொன்னாள்.

மறுபடியும் நண்பன் பிரச்சனையை ஆரம்பித்துவிட்டான் எனப் புரிந்தது. நண்பன் குடிப் பழக்கம் உள்ளவன். நண்பன் நல்லவன்தான். ஆனால் குடித்துவிட்டால் அவனுள்ளே இருக்கும் மிருகம் வெளியே வந்துவிடும். குடி என்றால் அப்படி ஒரு குடி ... தடுமாறி கீழே விழும் வரை குடிப்பான். குடித்துவிட்டு வாயில் வந்ததை பேசுவான். ஒரு விருந்தில் நன்றாக குடித்துவிட்டு தன் பத்து வயது மகளை தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு 'இவளை கலெக்டராக்கப் போறேன்..' என்று கூறி டான்ஸ் ஆடி,சண்டை போட்டு, அழுது மொத்த விருந்தையும் பாழாக்கினான். அதிலிருந்து இவனோடு எந்த பொது நிகழ்ச்சிக்கும் அவன் மனைவி வருவதில்லை. இப்போது என்ன புதிய பிரச்சனை என்று யோசித்தவாறு அங்கு சென்றேன். அலுவலக பியூனிடம் நான் வந்த விஷயத்தை அவளிடம் சொல்லுமாறு கூறிவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன். இப்படி பிரச்சனை வரும் போதெல்லாம் அவள் என்னிடம் புகார் சொல்லுவதும் நான் அவனிடம் பேசி சரி செய்வதும் வழக்கமான ஒன்றுதான் என்றாலும் அவள் வேலை செய்யும் அலுவலகத்துக்கே என்னை வரச் சொன்னது பிரச்சனையின் தீவிரத்தை மெலிதாக உணர்த்தியது. நண்பனின் மனைவி உள்ளேயிருந்து வரும்போதே புயலாக வந்தாள். முகத்தில் எரிச்சலும், கோபமும் நன்றாகவே தெரிந்தது.

"இதுக்குமேல தாங்க முடியாது...என்னையும் குழந்தையையும் விட்டுட சொல்லுங்க.. நாங்க போயிடறோம்.." என்று சற்று உரத்த குரலில் என்னை மிரட்டுவது போல் சொன்னாள்.

எனக்கு எரிச்சலாக வந்தது. என்னிடம் ஏன் இப்படி ஆத்திரத்தை காண்பிக்கிறாள் எனப் புரியவில்லை.

"என்ன நடந்துச்சுனு முதல்ல சொல்லு..." என்று எரிச்சலை அடக்கிக்கொண்டு கேட்டேன்.

"வேலை விஷயமா பாண்டிச்சேரி போறேனு சொல்லிட்டு போய் மூணு நாளாகுது...ஒரு போன்கூட பண்ணல..செல் போன ஆப் பண்ணி வைச்சுருக்கறார்.. விசாரித்தால் இங்க தி.நகர்லதான் ஒரு லாட்ஜ்ல ரூம் போட்டு மூணு நாளா குடிச்சிருக்கார்..நேத்து நைட் ஒரு வழியா போன்ல புடிச்சிட்டேன்...குடிச்சுட்டு பேசுறார்..நான் ஒரு கேள்விகூட அவர கேட்கக் கூடாதாம்..அவர் இஷ்டத்துக்குதான் இருப்பாராம்..என்னன்னவோ பேசுறார்.. அசிங்கமாவெல்லாம் பேசினார்..நானும் பதிலுக்கு பேசினேன்..நாம பிரிஞ்சிடலாம்னு சொல்லிட்டேன்.."

எனக்கு சலிப்பாக வந்தது. ஒவ்வொரு முறையும் இப்படிதான் நடக்கும். இதுக்காகவா என்னை இவ்வளவு அவசரமாக வரச்சொன்னாள்.

"அந்த முட்டாள் எப்பவுமே இப்படிதானே பண்றான்..உனக்கு தெரியாதா..சரி வுடு..நான் பேசிக்கிறேன்.." என்றேன்.

"இல்ல..இந்த தடவ கொஞ்சம் சீரியஸ்..நேத்து நைட்டும் வீட்டுக்கு வரல்ல.. இன்னைக்கு காலையில் ஏழு மணி இருக்கும்... போன் செஞ்சார்...அப்பவே குடிச்சுதான் இருந்தார்....இன்னைக்கு சாயந்தரத்துக்குள்ள தற்கொலை பண்ணிக்க போறாராம்..அவர் தற்கொலைக்கு நான்தான் காரணம்னு எழுதி வைச்சுட்டு செய்துக்க போறாராம்.." என்றாள்.

எனக்கு பகீரென்றது.

"என்னங்க இது..இதுக்காகவா நான் இவர நம்பி என் வீட்டுலகூட சொல்லாம கிளம்பி வந்தேன்...வேண்டாம் நான் போயிடறேன்"

அவள் கண்களில் நீர் சேரத் தொடங்கியது.

"சரி..அவன் இப்ப எங்க இருக்கான்..அந்த லாட்ஜ் பேரு தெரியுமா..?" என்றேன்.

"தி.நகர்னுதான் தெரியுது..எந்த லாட்ஜ்னு தெரியல...மூர்த்திக்கு போன் பண்ணி கேட்டேன்..அவருக்கும் தெரியல.." என்று கூறினாள். இப்போது அவள் குரலில் கோபம் போய் ஒரு பயம் தெரிந்தது.

அவன் வழக்கமாக போகும் சில இடங்கள் எனக்கும் தெரியும். அவனை பிடிப்பது ஒன்றும் சிரமமான வேலையில்லை.

"சரி..நீ..ஒண்ணும் கவலைப் படாதே..இப்பவே போய் நான் அவன பாக்கறேன்.. பார்த்துட்டு உனக்கு போன் செய்றேன்..நீ டென்ஷன் இல்லாம உன் வேலைய பார்.." என்றேன்.

சில நொடிகள் அமைதி காத்துவிட்டு...

"அக்கவுண்ட்டண்ட் சார்கிட்ட டெய்லி நான் அக்கவுண்ட்ஸ் சப்மிட் பண்ணனும்... அவர் ஏர்போர்ட், ஹார்பர் ரவுண்ட்ஸ் போனால் நைட் போன் பண்ணி விவரம் கேட்டுக்குவார்...அதையெல்லாம் இவர் தப்பா பேசுறார்...என் அப்பா வயசு அவருக்கு.. குடிச்சு குடிச்சு இவர் மூளையே கெட்டுப்போச்சு.. இனி இவருகூட இருக்க முடியாது..." என்று சோர்வாகச் சொன்னாள்.

"அய்யயே...நீ போ..நான் அவன்கிட்ட பேசிக்கிறேன்.." என்று கூறினேன்.

ஒன்றும் பேசாமல் தளர்வாக உள்ளே போனாள்.

அவனை எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என நினைத்தது தவறு. யாரிடம் கேட்டாலும் தெரியவில்லை. நானே தி.நகர் சென்று சில இடங்களில் தேடினேன். அவனுடைய உதவியாளன் ஒருவன் இருக்கிறான். இந்த மாதிரி நிழல் நடவடிக்கைகளில் அவன் பங்கு நிச்சயம் இருக்கும். ஒருவாறு அவனை பிடித்து அந்த லாட்ஜை கண்டுபிடிக்க மாலை ஆகிவிட்டது. அதற்குள் நண்பனின் மனைவியிடமிருந்து இரண்டு அழைப்புகள்.

அந்த லாட்ஜை கண்டுபிடித்து அந்த அறைக் கதவை தட்டியவுடன் அவனே திறந்தான்.

"வாடா வா..நீ எப்படியும் வருவேனு எனக்குத் தெரியும்...அவளுக்கு சப்போர்ட் பண்ணி ஒரு வார்த்தை நீ பேசினே..உனக்கு மரியாதை போய்டும்..ஷீ இஸ் எ பிட்ச்..." என்றான்.

அவனை பார்த்தபோதே தெரிந்தது இந்த மூன்று நாட்களும் இடைவிடாமல் குடித்திருக்கிறான் என்பது. இப்போதும் குடித்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பதை அறையின் சூழ்நிலை விவரித்தது. நல்ல போதையில் இருக்கிறான் என்பதும் நன்றாக தெரிந்தது. இந்த நாட்களில் குளித்திருப்பானா என்ற சந்தேகமும் வந்தது.

"நான் சீரியசா சொல்றேன்..அவள பத்தி ஒரு வார்த்தை பேசாத....பிசாசுடா அவ.... மனுசன் இருப்பானா அவகூட.....பைத்தியம் பிடிச்சுரும் அவகூட இருந்தா....கண்ட கண்ட நேரத்தில் போன்ல பேசுறா..ஷீ இஸ் எ புரோ..அவ சொல்லித்தான் நீ வந்திருக்கற.. எனக்குத்தெரியும்..ஒரு வார்த்தை அவள பத்தி பேசாத" என்று உரத்த குரலில் கூறினான்.

பிசாசு என்று இவனால் அழைக்கப்படும் இந்தப் பெண்ணை , சும்மா பார்ப்பதற்காக மட்டுமே கொளுத்தும் வெயிலில் மூன்று மணி நேரம் பிராட்வே பஸ் நிலையத்தில் இவன் காத்திருந்தான் ஒரு முறை.

"இங்க பார்..அவ சொல்லித்தான் நான் வந்தேன்..உண்மைதான்..ஆனால் இந்த முறை உங்க பிரச்சனையில் நான் தலையிடமாட்டேன்.. எனக்கே சலிச்சுருச்சு. எதோ அவ சொன்னாங்கறதுக்காக வந்துருக்கேன்.. அவ்வளவுதான்..எனக்கும் இதை பத்தி பேச பிடிக்கல..எனக்கே ஆயிரம் பிரச்சனை இருக்கு.." என்று கூறி கட்டிலில் சாய்ந்தேன்.

அவன் என்னை ஆச்சரியமாக பார்த்தான்.

"ஒரே அலைச்சல்...டயர்டா இருக்கு..எனக்கு ஒரு பீர் ஆர்டர் பண்ண முடியுமா?" எனக்கேட்டேன்.

அடுத்த நொடியில் அவன் மொத்த முகபாவனையும் மாறி உடல் மொழியிலும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.

"ஒண்ணு என்ன..ரெண்டு சொல்றேன்..சைட் டிஷ் என்ன சொல்லட்டும்? இங்க மீன் நல்லா இருக்கும்..சொல்லவா?" உற்சாகமாக போனை எடுத்து ஆர்டர் செய்தான்.

அடுத்த சில மணிநேரங்களில் பல்வேறு விஷயங்கள் பேசினோம். கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கம் குறைந்து, வெடித்துச் சிரித்து... இப்போது மொத்த சூழ்நிலையும் வேறாக தெரிந்தது. அவன் பிரச்சனையை பற்றி நான் பேச்சே எடுக்கவில்லை. அவ்வப்போது அவனே அதைப் பற்றி பேச முற்பட்டாலும் நான் பேச்சை மாற்றினேன். இடையில் அவன் பாத்ரூம் சென்ற நேரத்தில் அவன் மனைவிக்கு போன் செய்து நான் அவனுடன் இருப்பதை தெரிவித்திருந்தேன். இரவு அங்கேயே தங்கப்போவதாக இவனிடமும் தெரிவித்துவிட்டேன். இரவு உணவு ஆர்டர் பண்ணுகிறேன் என்று கூறினான்.

"வேண்டாம்..வா..அப்படியே ஒரு வாக் போய்ட்டு வெளியே சாப்பிடலாம்.. அதுக்குள்ள இந்த ரூமை சுத்தப்படுத்தச் சொல்லலாம்" என்றேன்.

வெளியே கிளம்பிச் சென்றோம். டெஸ்கில் இருந்த லாட்ஜ் மானேஜர் எங்களை பார்த்த பார்வையில் ஒரு வெறுப்பு தெரிந்தது.

சிறிது தூரம் நடந்து சென்று ஒரு இடத்தில் சாப்பிட்டோம். வண்டியில் வாழைப்பழங்கள் வாங்கித் தின்றோம். திரும்பி அறையை அடைந்த போது அறை சுத்தமாக்கப்பட்டு நன்றாக இருந்தது. படுத்துக்கொண்டே நிறைய பேசினோம். வடிவேல் நகைச்சுவையைப் பேசி அறை அதிரச் சிரித்தோம். அப்படியே தூங்கிப் போனோம்.

மறுநாள் காலை நான் எழுந்து பார்த்தபோதே நண்பன் குளித்து முடித்து சுத்தமாக இருந்தான். சோபாவில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தான்.

"உனக்கு காபி ஆர்டர் பண்ணவா..?" என்றான்.

முகம் கழுவி காப்பி அருந்திவிட்டு நான் கிளம்ப ஆயத்தம் காண்பித்தேன்.

அமைதியாகக் கட்டிலில் உட்கார்ந்திருந்தான்.

"சரி..நான் கிளம்பறேன்.." என்றேன்.

மெல்ல என்னைப் பார்த்தவாறே..

"அவ கேட்டா நீ என்ன சொல்லுவ..?" என்று கேட்டான்.

"என்னத்தச் சொல்றது...எதாவது சொல்லி சமாளிக்கணும்.." என்று படாமல் பேசினேன்.

"இல்லடா..அவ ரொம்ப படுத்துறா..அன்னிக்கு பார்.. அபர்ணாவ அந்த அடி அடிச்சுருக்கா.. எனக்கு கோபம் தாங்கல." என்றான்.

சில நொடிகள் விட்டு..

"சரி..நீ அபர்ணாவுக்கு ஒரு போன் பண்ணி பேசியிருக்கலாம் இல்ல..அவ குழந்தைதானே.. உங்க பிரச்சனை பத்தி அவளுக்கு என்னத் தெரியும்..மூணு தடவ எங்கிட்ட கேட்டுட்டா 'அப்பா எங்கேன்னு" என்றேன்.

அவன் கண்களில் ஒரு கலக்கம் தெரிந்தது. சிறுது நேரம் கீழே குனிந்து பார்த்துக்கொண்டே இருந்தான்.

"இங்க பார்..நான் ஒண்ணு சொல்றேன்..எங்கூட வா.. வந்து உம் மகள ஒரு தடவை பார்த்துட்டு நீ எங்க வேணும்னாலும் போ.." என்றேன்.

ஒரு முறை நிமிர்ந்து என்னைப் பார்த்துவிட்டு குனிந்து யோசனையில் இருந்தான்.

"கிளம்புடா..வா..போகலாம்...' என்று சற்று உரத்து கூறி அவன் பொருட்களை அவன் பையில் திணிக்கத் தொடங்கினேன்.

அவன் அமைதியாக பாத்ரூம் போய் அங்கிருந்த பொருட்களை எடுத்துவந்து பையில் போட்டான். ரூமை காலி செய்து ஒரு வார்த்தை பேசாமல் என் பைக்கில் பின்னால் உட்கார்ந்து வந்தான். அவன் பலத்த யோசனையில் இருப்பது தெரிந்தது. அவன் வீட்டு வாசலில் அவனை இறக்கிவிட்டேன். அவன் கேட் கதவை திறந்து வீட்டினுள் போவதை உறுதி செய்துகொண்டு நான் கிளம்பினேன்.

அடுத்த பத்து நாட்களில் அவனிடமிருந்தோ,அவன் மனைவியிடமிருந்தோ எந்த ஒரு தகவலும் இல்லை. நானும் அவர்களை அழைக்கவில்லை.அவன் அலுவலக உதவியாளனை அழைத்து விவரம் கேட்டேன்.

"நேத்துகூட சார பார்க்க வீட்டுக்கு போயிருந்தேனே..மேடம் எனக்கு பிரிஞ்சி சாதம் கொடுத்தாங்க.." என்றான்.

பரவாயில்லையே என் நினைத்துக்கொண்டு நாமே ஒரு முறை நேரில் போய் பார்த்து வரலாம் என நினைத்து நண்பன் வீட்டுக்கு போனேன். என்னைப் பார்த்தது கணவன் மனைவி இருவருக்குமே ஒரு ஆச்சரியம், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

"வா..வா…உட்காரு..நானே உனக்கு போன் செய்யலாம்னு நினைச்சுக்கிட்டுருந்தேன். நீயே வந்துட்ட...காப்பி சாப்பிடுறியா..? என்று நண்பன் கேட்டான்.

நண்பன் தெளிவாக இருந்தான். மனைவி எனக்கு காப்பி தயார் செய்ய சமையலறைக்கு சென்றாள். அபர்ணா அவளிடம் இருந்த எல்லா பலூன்களையும் கொண்டுவந்து போட்டு ஊதி தருமாறு கூறினாள். எல்லாவற்றையும் ஊதிக்கொடுத்தேன். நண்பன் அங்குமிங்கும் அலைந்தபடியே செல்போனில் பரபரப்பாக பேசிகொண்டிருந்தான். காப்பி வந்தது. சிறிது நேரம் டி.வி பார்த்துக்கொண்டிருந்தேன். கையில் காப்பியின் பிசுபிசுப்பு. கழுவலாம் என வாஷ்பேனுக்குச் சென்றேன். உள்ளே சமையலறையில் பேசுவது கேட்டது.

"உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா? இப்ப பார்த்தா இவர வரச்சொல்றது...எப்ப கிளம்பி எப்பப் போய் சேர்றது? இந்நேரம் கேக் வெட்டியிருப்பாங்க.."

"நான் எங்க இவன வரச்சொன்னேன்..அவனா வந்திருக்கான்...நான் என்ன செய்யட்டும்..."

நான் மறுபடியும் ஹாலுக்கு வந்து சில நொடிகள் விட்டு உரத்த குரலில் நான் கிளம்புகிறேன் எனக் கூறிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் வெளியே நடந்தேன்.

5 comments:

துபாய் ராஜா said...

இயல்பான எழுத்துநடையில் காட்சிகள் கண்முன்.கணவன்,மனைவிக்கிடையில் ஏற்படும் ஊடல்,கூடல்கள் கூடாதவரை நல்லது.

KARTHIK said...

எதார்தமானா கதை :-))

Natarajan said...

After one year a good one from you
we are expecting more from you


Natraj Bank street Kilpauk

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Anonymous said...

முதல் முறை உங்கள் எழுத்துக்களை படிக்கின்றேன்.

நடைமுறை வார்த்தைகள். மிகவும் இரசனையாக உள்ளது. வாழ்க்கை நம் மீது புயலை, நாம் தென்றலாக மாற்ற தெரிந்து கொண்டால், வாழ்க்கை இன்பமானது தான்.

வாழ்த்துக்கள்.