Sunday, March 16, 2008

குரங்கு பொம்மை!

என் நண்பர் ஒருவரை பார்க்க அவர் வீட்டிற்கு போனேன். வீட்டுப் பணியாள் நான் வந்திருப்பதை உள்ளே போய் சொல்ல, நண்பரின் மனைவி என்னை வரவேற்று அமரச் சொன்னார். நண்பர் குளித்துகொண்டிருப்பதாகவும் சிறிது நேரத்தில் வந்துவிடுவாரென்றும் கூறினார்.

நான் சோபாவில் உட்கார்ந்தேன்.

நண்பரின் மூன்று வயது பெண்குழந்தை; தரையில் அமர்ந்து, ஒரு ஓவிய முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள். சுற்றிலும் வண்ணக் கலவைகள், தூரிகைகள், காகிதங்கள். அருகிலேயே ஒரு ஒல்லியான fur-ல் செய்ப்பட்ட ஒரு குரங்கு பொம்மை; குரங்கின் ஒரு கை, பிய்த்தெடுக்கபட்டு தனியே வைக்கப்பட்டிருந்தது. குரங்குக்கு மூக்கு மட்டும் நீளமாக இருந்தது. குரங்கு இவள் வரைவதை பார்ப்பதுபோல் கட்டாயமாக உட்கார வைக்கபட்டிருந்தது. குரங்கும் சிரித்தமுகத்துடன் ஓவியத்தை பார்த்துக்கொண்டிருந்தது. உள்ளேயிருந்து அம்மாவின் குரல் வந்தது...

'தீபு... பெயிண்டையெல்லாம் கீழே சிந்தக்கூடாது... பார்த்துக்க...' தீபிகா என்ற தீபு, அதை கவனித்ததாக தெரியவில்லை!

நான் சற்று எட்டி, என்ன ஓவியம் எனப் பார்த்தேன். ஒரு பச்சைக் கிளி முயற்சிக்கபட்டு அதற்கு வண்ணம் தீட்டும் பணி நடந்துகொண்டிருந்தது. சற்று நெருங்கி பார்க்கலாம் என எத்தனித்து, எழுந்தேன். அவ்வளவுதான்... என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு, வண்ணங்கள், காகிதம் மற்றும் குரங்கு பொம்மை எல்லாவற்றையும் வாரி எடுத்துக்கொண்டு தீபு உள்ளே சென்று விட்டாள்.

துண்டினால் தலையை துடைத்தவாறும், செல்போனில் பேசியவாறும் என் நண்பர் உள்ளிருந்து வந்தார். சைகையிலேயே 'வா... அங்கு போய்விடலாம்' எனக்கூறி பக்கத்து அறையை காண்பித்தார். அந்த அறை நாற்காலி, மேசை எல்லாம் போடப்பட்டு ஒரு அலுவலக அறை போலவே இருந்தது.

இவருடைய வியாபார அலுவலகம் கிண்டியில் இருக்கிறது. அது இல்லாமல் இங்கு ஒரு குட்டி அலுவலகம். மேசையில் இரு தொலைபேசிகள், கணிணி, பேக்ஸ் மிசின், பேனாக்கள், குண்டூசி, காகிதங்கள் என, அறை முழு அலுவலக வாசனையில் இருந்தது. இது போக, இன்னொறு செல்போனும் மேசைமேல் இருந்தது. இன்னும் நண்பர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். நண்பருக்கு logistics சம்பந்தமான தொழில். excise துறைகளிலும், சுங்கத்துறையிலும் இம்சையை அனுபவித்து எந்நேரமும் பணத்தை துரத்துபவர். சிறிது நேரத்தில் பேசி முடித்துவிட்டு "...ஸாரி... முக்கியமான அழைப்பு... இப்போ சொல்" என்றார், என்னிடம். நான் வந்த நோக்கத்தை சொல்லத்துவங்கி சில நிமிடங்கள்கூட இல்லை; மேசையின் மீதிருந்த தொலைபேசி அடிக்கத்துவங்கியது. அதை எடுத்து காதில் வைத்த அடுத்த நொடி 'அப்படியா..நான் பார்க்கிறேன்' எனக்கூறியவாறே கணிணியை 'ஆன்' செய்தார்.

பேச்சுத்தொடர்ந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு '...சரி..அப்புறமா பேசுறேன்' எனக்கூறி வைத்துவிட்டார். என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு "இந்தத் தொழிலில் பத்து நிமிசத்துக்கு ஒரு பிரச்சனை வரும்..நீ சொல்லு.." என்றார்.மறுபடியும் எங்கள் பேச்சு துவங்கியது.

அப்போது "அப்பா... இங்க பாருங்க!!! அம்மு ஜூஸ் குடிக்குது!!!" என்ற அலறலோடும், ஆச்சரிய குரலோடும் தீபிகா உள்ளே வந்தாள். தீபிகாவின் ஒரு கையில் 'பிளாஸ்டிக்' டம்ளரில் சிகப்பு நிற வண்ணம் கலந்த தண்ணீர்; மறு கையில் அம்மு என்று பெயரிடப்பட்ட குரங்கு பொம்மை. 'அப்பா..இங்க பாரு...'என்று சொல்லி குரங்கின் நீண்ட மூக்கை டம்பளரின் உள்ளே நுழைத்து எடுத்தாள். அம்முவின் மூக்கு இப்போது நனைந்து மூக்கு சிவப்பு நிறத்தில் இருந்தது. அதை பார்த்த நண்பர் வெடித்துவிட்டார். 'விமலா... என்ன பண்ற உள்ளே? இந்த சனியன பாரு... முதல்ல இந்த பெயிண்டையெல்லாம் பிடுங்கு இவகிட்டயிருந்து' என்று கத்தினார். இவர் போட்ட கூச்சலில் தீபிகா அதிர்ந்து போய் குரங்கின் மூக்கை பார்த்துக்கொண்டே விலகிவிட்டாள்.

அடுத்த ஐந்து நிமிடங்களுக்குதான் எங்கள் பேச்சு நீடித்தது. மேசையின் மேல் வைக்கப் பட்டிருந்த இன்னொறு செல்போன் ஒலிக்கத் தொடங்கியது. எடுத்து காதில் வைத்தவுடன் 'சொல்லுங்க சார்...' எனச் சொல்லிகொண்டே பால்கனி பக்கம் போனார். போகும் போது என்னிடம் ஐந்து நிமிடம் என சைகையில் என்னிடம் கூறிச்சென்றார்.என்ன மனிதர்கள் இவர்கள்!... வீட்டில் ஒரு அலுவலகம் வைக்கலாமா?ஒரு வீட்டில் இத்தனை தொலைபேசிகளா? ஒரு நாளின் பெரும்பகுதி ஒலிகளுடன் மட்டும்தான் உரையாடல்களா? வீட்டிற்குள் கூட மனைவி, குழந்தைகள் இவர்களுடன் தொலைபேசியில்தான் பேசமுடியும் போல. நான் திரும்பவும் ஹாலுக்கு சென்று எதாவது படிக்க கிடைக்குமா எனப் பார்த்தேன்.

இப்போது மறுபடியும் ஹாலில் தீபு.

அம்மு என்ற அந்த குரங்கு இன்னும் ஜூஸ் குடிக்க வைக்கப் பட்டுக்கொண்டுடிருந்தது. என்னை நிமிர்ந்து பார்த்த தீபுவின் முகத்தில் இப்போது ஒரு நட்புணர்வு தெரிந்தது. ஒரு மெலிதான புன்னகைகூட அவள் முகத்தில் காணப்பட்டது.

நான் சற்று கவனமாக தள்ளியே உட்கார்ந்துகொண்டு 'அம்மு ஜூஸ் குடிச்சுருச்சா?' எனக் கேட்டேன். அவள் முகம் மலர்ந்து... 'அம்மு... இன்னும் ஜூஸ் கேட்குது...' என்றாள். 'எங்கே காமி...' என்று கூறிக்கொண்டே அவள் அருகில் தரையில் அமர்ந்துகொண்டேன். குரங்கு பொம்மையின் மூக்கை மறுபடியும் வண்ண நீரில் அமிழ்த்து எடுத்தாள். டம்ளரில் நீரின் அளவு குறைவது அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

நான் குரங்கு பொம்மையை தூக்கிப்பார்த்தேன். பொம்மை, நிறைய நீரை உறிஞ்சி கனமாக இருந்தது. அந்த விஞ்ஞானம் அவளுக்கு ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் அளித்து குரங்கு ஜூஸ் குடிக்கிறது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாள்.அவள் முகத்தில் இருந்த ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் பார்க்க நன்றாக இருந்தது. ஆனால் அவளுக்கு ஏற்ப்பட்ட சந்தேகத்தை பகிர்ந்துகொள்ள யாருமில்லை. நான் அந்த பிய்த்து எடுக்கப்பட்டு தனியே வைக்கப்பட்டிருந்த பொம்மையின் கையை எடுத்து அந்த வண்ண நீரில் முக்கி எடுத்தேன். அதை அப்படியே அவள் கையில் கொடுத்தேன். அவள் அதை மெல்ல அமுக்கி பார்த்தாள். கொஞ்சம் நீர் பிதுங்கி வெளியே வந்தது. நிமிர்ந்து என்னை பார்த்தாள். அவளே மறுபடியும் அந்தக் கையை நீரில் அமிழ்த்து எடுத்தாள். அமுக்கி பார்த்தாள். அப்போதும் சற்று நீர் வந்தது. குழப்பமாக என்னைப் பார்த்தாள்.

அப்போது நண்பர் என்னை அழைக்கவே நான் மீண்டும் பேசப்போனேன்.

அவரிடம் பேசிவிட்டு விடைபெற்றேன். வாசல்வரை வந்து வழிஅனுப்பினார். உள்ளேயிருந்து தீபிகா ஓடிவந்து 'டாட்டா' என்று கூறினாள்.

நண்பர் சற்று ஆச்சரியபட்டு 'இவள் யாருக்குமே 'டாட்டா' காட்டியதில்லை' என்று கூறினார்.

அதற்கு நான் கூறியது 'அது ஏன் என்று யோசியுங்கள்.'

7 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

முக்கியமான விசயத்தைப் பத்தி எழுதி இருக்கீங்க. நன்றி.

நந்து f/o நிலா said...

நல்ல பதிவு பாபு மனோகர். குழந்தைகள் உலகத்தை புரிந்து கொள்ளாத பெற்றோர் அதிகம்தான்.

தீபுக்காக வருத்தம்தான் பட முடிகிறது

ச.மனோகர் said...

கருத்துச் சொன்ன ரவிசங்கர் மற்றும் நந்து ஆகியோருக்கு நன்றி!

Anonymous said...

அருமையான பதிவு.

gomax said...

Babu sir, Finnsly you gave a nice Punch..."THINK WHY SHE IS DOING LIKE THAT"..sUPERB

Vetirmagal said...

மனதை என்னவோ செய்கிறது.
இந்த மாதிரி உள்ள பெற்றோர்களுக்கு நீங்கள் கொடுத்த 'sublte jolt' புரியுமா?. இல்லை தொலைபேசி இதையும் புதைத்து விடுமா?

magudapathy said...

நல்ல பதிவு ...:)