Thursday, May 17, 2007

கமல்ஹாசனின் சொந்தப் பிரச்சனை

என் நண்பனின் வீடு.

எல்லோரும் டி.வி பார்த்துக்கொண்டிருக்கிறோம்.டி.வியில் ஏதோ திரைப்படத் துறையினரின் விழாவை காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.முக்கிய நடிகர்கள்,இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் என்று ஒரே கூட்டம்....அவ்வப்போது காமிரா, கூட்டத்தில் அமர்ந்திருப்போரையும் காண்பிக்கிறது.என் நண்பனின் தங்கை ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லிக்கொண்டே வருகிறாள்.

இந்த முறை காமிரா கமல்ஹாசனை காண்பிக்கிறது.அருகில் அமர்ந்திருக்கும் கெளதமியையும் காண்பிக்கிறது.உடன் அந்த இருவரின் குழந்தைகளையும் காண்பிக்கிறது.அந்த காட்சியை ஒருவித குறுகுறுப்புடன் எல்லோரும் பார்க்கிறார்கள்.அப்போது என் நண்பனின் அப்பா கேட்கிறார்" இந்தப் பெண் யார்?" என்று.அவர் கேட்டது கெளதமியை குறித்து.என் நண்பன் திடுக்கிட்டு"கூட நடிக்கிற பொண்ணு" என்று தடுமாறி கூறினான்.

ஆனால் அவனுடைய தங்கை, கமல்-கெளதமி குறித்த முழுக் கதையையும் அவிழ்த்து விட்டுவிட்டாள்.நண்பன் டென்சனாகி " போடி உள்ளே" என்று கத்தினான்.அவளும் பதில் சண்டைக்கு தயாராகி இருவரும் உள்ளே சென்றார்கள்.அவ்வளவாக சினிமா தெரியாத அந்த அப்பா அதிர்ந்து விட்டார்."இருவரையும் விட்டுவிட்டு மூன்றாவதாக இவளை சேர்த்துக்கொண்டானா? அதுவும் ஒரு குழந்தையோட.." என்று என்னிடம் கேட்டார்.நான் மய்யமாக தலையசைத்தேன்.அப்போது வந்த நண்பன் "அப்பா அதெல்லாம் அவங்களோட சொந்த விசயம்...அவங்களோட நடிப்பை மட்டும் தான் நாம பார்க்கனும்" என்று சற்று உரத்தகுரலில் கூறினான். அப்பா அமைதியாக சற்று நேரம் டி.வி பார்த்தார்.

பிறகு என்னிடம் திரும்பி "அது அவுங்க சொந்த விசயம்தான்...ஆனா இந்த உறவுகளை பற்றி சரியாக புரிந்து கொள்ள முடியாத அவர்களின் குழந்தைகளின் மனநிலை எப்பிடியிருக்கும்? இவர்களை பற்றிய செய்திகளை பத்திரிக்கையில் படிக்கும் நம் வீட்டு குழந்தைகளின் ஒழுக்கம் பற்றிய சிந்தனை என்னவாக இருக்கும்?...இதை எப்பிடி அவர்களின் சொந்த பிரச்சனை என்று கூறமுடியும்?" கேட்டார்.

உடனே என் நண்பன் இடைமறித்து "உனக்கு டயமாகுது.கிளம்பு.." என்றான்

10 comments:

தருமி said...

பொது வாழ்க்கையில் இருக்கிற ஆளுகளுக்கு என்னவெல்லாம் தொல்லை. பாவம்தான். தனிமனிதன் என்றால் அவருக்கு தன் மகள்களின் மனசு மட்டும் முக்கியம். இப்போதோ எங்கோ உட்கார்ந்து பார்க்கும் ஒரு டிவி பார்வையாளருக்கும் பதில் சொல்ல வேண்டுமோ? பாவம்தான்.

ச.மனோகர் said...

தங்கள் வருகைக்கு என் நன்றிகள் பேராசிரியர் அவர்களே!

முரளிகண்ணன் said...

பெரியார் அவர்களே சொல்லியிருக்கிறார் ஆண் பெண் இருவருக்குமே தங்கள் துணையை தேர்ந்தெடுக்கவும் பிரியவும் உரிமை உண்டு என்று. அதன் மூலமே பெண் அடிமை தனம் ஒழியும்.அவர் பெரியார் வழி செல்பவர்

ச.மனோகர் said...

முரளி..தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

Sridhar V said...

எனக்கு புரியாத ஒரு விதயம் இதுதான்...

//கமல்-கெளதமி குறித்த முழுக் கதையையும் அவிழ்த்து விட்டுவிட்டாள்//

அது என்ன 'கதை'? நமது வீட்டு குழந்தைகளுக்கு நடிகர்களால் ஆபத்து இல்லை... இந்த மாதிரி ஊதி ஊதி கதை கட்டும் பத்திரிகைகளும் அந்த கதையை பற்றி 'மட்டும்' கவலைப்படும் பெரியவர்களால்தான் என்று தோன்றுகிறது.

இந்த விதயத்தில் அந்த நடிகர் 'யாரையும்' ஒதுக்கி வைக்கவில்லை. சட்டபூர்வமாக நடந்த விவாகத்தை ரத்து செய்திருக்கிறார். அதுவும் அவருடைய முன்னாள் மனைவியர் இருவரும் படித்தவர்கள். சமூகத்தில் இப்பொழுதும் நல்ல அந்தஸ்தில் இருக்கிறார்கள்.

இதை கேவலமாக பார்ப்பவர்களின் பார்வையில் குறைபாடு இருப்பது போல்தான் தெரிகிறது. வேறென்ன சொல்ல...

ச.மனோகர் said...

ஸ்ரீதர் வெங்கட்...கருத்துக்கள் மாறுபடலாம்...ஒரே விசயம் பலரால், பலவிதங்களில் பார்க்கப்படுகின்றன என்பதுதான் நான் சொல்ல வந்தது.இதில் என் கருத்து எதையும் சொல்ல முயற்சிக்கவில்லை.

கருத்துக்கு நன்றி வெங்கட்..!

கூல் said...

ஒரு பெண் படிதாண்டுவதே குற்றம் என்றும் ஒரு காலம் இருந்தது , அது எவ்வளவு இழிவானது என்று அன்று யாருக்கும் தெரியவில்லை ,
பெண்ணுரிமை என்பது மிகமெதுவாகவே சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படுகிறது,
இன்று பிழையாகத் தெரிவது 50 வருடங்களில் உரிமையாக ஏற்றுக்கொள்ளப்படும்.

இது பெண்ண்டிமைத்தனத்தின் எச்சசொச்சமே
இது நாங்கள் வெட்கப்படவேண்டிய நிலை,

Sridhar V said...

//பலவிதங்களில் பார்க்கப்படுகின்றன என்பதுதான் நான் சொல்ல வந்தது.//

மிகச் சரி.

நான் சிலசமயம் நினைப்பதுண்டு. அந்த நடிகரோடு ஓர் ஆண் நணபரும் அவருடைய குழந்தையும் அடிக்கடி தோன்றினால் நாம் எப்படி நினைப்போம்? ஒரு பெண்ணோடு அவர் வெளியில் சென்றால் அது எப்படியெல்லாமோ கற்பனை செய்து பார்க்கப் படுகிறது என்பதுதான் கொஞ்சம் ஆதங்கமான விஷயம்.

அவர்கள் எந்த மாதிரியான் உறவுகளில் இருக்கிறார்கள் என்று அவர்களை வேறு யார் பேசுவதும் அநாகரீகமே.

இத்தனைக்கும் பொது இடங்களில் அவர்கள் கண்ணியமாகத்தான் இருக்கிறார்கள்.

இதே போல் ஒரு விஷயம் மும்பையில் நடந்தது நினைவுக்கு வருகிறது. நானா படேகர் (வயது 50) தன் கல்லூரி தோழனின் மகளுடன் (வயது 19) டின்னர் சென்றது சில பத்திரிகையில் செய்தியாக வந்தது. ஆனால் அதை சிலர் விமர்சிக்கும் போது கொஞ்சம் ஆபாசமகத்தான் இருந்தது.

அடுத்தவர் படுக்கையறையை எட்டிப் பார்க்கும் மனநிலைக்கும் இப்படிப்பட்ட விமர்ச்னங்களுக்கும் வேறுபாடு இல்லை என்றுதான் தோன்றுகிறது.

பின்னூட்டம் வெளியிட்டதற்க்கு நன்றி.

மருதநாயகம் said...

அடுத்த வீட்டில் சண்டை நடந்தால் எட்டிப் பார்ப்பவரா அல்லது நமக்கேன் வம்பு என்று விலகி செல்பவரா. நீங்கள் இரண்டாவது வகையை சேர்ந்தவர் என்றால் அக்கம்பக்கம் நடப்பதையே கண்டு கொள்ளாத நீங்கள் கமல் பற்றி வருத்தப்படுவதில் அர்த்தமில்லை. முதல் வகையை சேர்ந்தவர் என்றால் உங்களுடைய வாழ்க்கையை பற்றி அடுத்தவர் விமர்சிப்பதை ஏற்றுக் கொள்பவராக இருக்க வேண்டும்

ச.மனோகர் said...

மருதநாயகம்...

ஒரு சம்பவம் ஒரு வீட்டிற்குள்,நாலு சுவற்றுக்குள் நடக்கின்ற போது அது சமுதாயத்தை அவ்வளவாக சென்றடையாது. ஆனால் அது ஒரு செய்தியாக ஊடகங்கள் மூலம் நம் வீட்டு வரவேற்பரையில் வந்து விழும் போது பலருக்கு பல கருத்துக்கள் எழலாம்.அதனடிப்படையில் ஒரு தந்தையின் பார்வையில் விசயம் பதியப்பட்டது.

மறுபடியும் படிக்கவும். இது சம்பந்தமாக என் கருத்தை எங்கும் சொல்ல முயற்சிக்கவில்லை.