Thursday, March 6, 2008

பண்ணை வீடு!

"இந்த வாரம் சனி,ஞாயிறு எந்த வேலையும் வைத்துக்கொள்ளாதே.. நாமெல்லாம் farmhouse போறோம்..இது ஒரு family trip..with kids and all...its gonna be a real fun..கிச்சா எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிட்டான்.. எதாவது சாக்கு சொல்லி தப்பிக்கப் பார்த்தே.. மகனே நீ காலி.."

கிச்சா,சிவா, கல்யாணசுந்தரம், பிரேம், நடராஜ் ஆகியோர் அடங்கிய நண்பர் குழாம் என்னை மிரட்டியது. எதற்காக இவர்களுக்கு திடிரென்று குடும்பத்தின் மீது பாசம் பொங்குகிறது எனத்தெரியவில்லை. ஒருவேளை பொறுப்பான 'குடும்பத்தலைவர்கள்' பட்டம் பெற திட்டமிடுகிறார்களா? எனக்கு ஒருநாளும் அந்தப் பட்டம் கிடைக்கப்போவதில்லை. நான் ஒரு 'பேச்சிலர்' என்பதால். மனைவிகள் வட்டாரத்தில் ஒருவனுக்கும் அவ்வளவாக மரியாதை இல்லை.என்னை மட்டும் கொஞ்சம் மதிப்பார்கள். காரணம் அவர்களின் குழந்தைகளுக்கு நான்தான் 'பேவரைட்'.! குழந்தைகள் இரண்டு வயது முதல் பதினேழு வயது வரை இரண்டு பாலினங்களிலும் இருப்பார்கள்.அந்தக் குழந்தைகள் எதற்கும் என்னைத்தான் அணுகுவார்கள். கிரிகெட் மட்டை வாங்குவது, பள்ளிக்கூட 'பிராஜக்ட்' செய்வது,உடனடியாக 'ஐஸ் கிரீம்' தேவைப்படுவது, குட்டி சைக்கிளில் 'செயின்' அறுந்தது பற்றி, சுவற்றில் எந்த இடத்தில் பந்து பட்டால் 'அவுட்' என்ற சந்தேகம்.... அவர்களின் தொலைபேசி அழைப்பு பலவிதத்திலும் இருக்கும். 'சர்க்கஸ்' வந்துவிட்டால் போதும். எனக்கு தினசரி அழைப்புதான். இவர்களை சர்க்கஸ் அழைத்துச் சென்று வருவதே மிகப்பெரிய 'சர்க்கஸ்'. இருந்தாலும் அவையெல்லாம் எனக்கு இனிய தருணங்கள்தான். இந்தக் குழந்தைகள் காரணமாகவே, இந்தப் பெண்கள் என்னை மன்னித்து விடுவார்கள். எந்த வீட்டில் எது விஷேசமாக செய்தாலும் எனக்கு சாப்பிட அழைப்பு வந்துவிடும். இந்தப் பயணத்திற்கு வர முடியாத சில நண்பர்களின் குழந்தைகளும் லிஸ்டில் சேர்ந்து, குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அது எனக்குத்தான் சற்று கலக்கத்தைக் கொடுத்தது என்றாலும் இந்தப் பயணத்தின் போது அந்தக் குழந்தைகளின் முகத்தில் மலரப்போகும் மகிழ்ச்சியை காண விருப்பமாகத்தான் இருந்தேன்.கோகுல் பெயரும் அந்த லிஸ்டில் இருந்தது. சற்று கவனமாக இருக்க வேண்டும். இரண்டு முறை அவன் குத்திய குத்தில் உயிர் போய் உயிர் வந்தது. அவன் வயதுக்கு அந்த அளவு உயரம்தான் எட்டியது..... பெரிய பாக்ஸராக்கும். சிவாவின் மனைவி வேறு ' அண்ணே..நீங்க அவசியம் வந்துடுங்க.. இல்லாவிட்டால் இதுங்கள மேய்க்கிறது கஷ்டம்..' என்று கூறினாள். விட மாட்டார்கள்.. போவதைத் தவிர வேறு வழியில்லை.

தினமும் மாலையானால் இதே பேச்சு.ராணுவ திட்டமிடல் மாதிரி பேசினார்கள். எனக்கு ஒரு விதத்தில் இது மகிழ்ச்சியை கொடுத்தது. இவர்கள் மனைவி, குழந்தைகளை மகிழ்ச்சி படுத்தப் போகிறார்கள். அதுவே எனக்கு பெரிய விசயமாக இருந்தது. மொத்தம் எத்தனை பேர் என கணக்கிட்டு அதெற்கேற்றார்போல் வாகன ஏற்பாடு, உணவுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பது பற்றி.. பண்ணை வீட்டில் உள்ள நீச்சல்குளத்தில் குளிக்க அவர்களுக்கும், குழந்தைகளுக்கும் swim suit வாங்குவது பற்றி.. நீச்சல்குளத்தில் மிதக்கவிட பலூன்கள்,வளையங்கள்.. குழந்தைகளுக்கு தேவைபடும் 'ஸ்னாக்ஸ்' பற்றி.. அவர்களின் எல்லோருடைய தேவையும் அலசப்பட்டது. பேச்சு..பேச்சு..கிளம்பும் வரை இதே பேச்சுதான்..

''முதலில் பசங்களுக்கு கொஞ்சம் 'மாயாஜாலில்' விளையாட்டு.. அப்புறம் 'முட்டுக்காடில்' போட்டிங்.. முதலை பண்ணையில் கொஞ்ச நேரம்.. அப்புறம் நேரா மகாபலிபுரம்.. திரும்பி 'உத்தண்டி' வந்து பண்ணைவீட்டில் இரவு தங்குறோம்.. அங்க சமையல் பாத்திரங்களோடு அருமையான 'கிச்சன்' இருக்குது ..பெண்கள் இரவு உணவு தயார் செய்கிறார்கள்..நான் கொரியன்பாணி முட்டைப் பொறியல் செய்யப் போகிறேன்..அதிகாலையில் பசங்களை எழுப்பி கடற்கரையில் சிப்பிகளை பொறுக்கச் சொல்லலாம்..அங்கேயே அருமையான மீன் கிடைக்கும்..மதிய சாப்பாட்டிற்க்கு மீன் குழம்பு மீன் வறுவல்" இது பிரேம்.

"சந்திரா பல்லியை பார்த்தாலே நடுங்குவாள்..முதலைப் பண்ணையில் நிச்சயம் அவள் காரை விட்டு இறங்கப்போவதில்லை. அப்புறம்.. ரிட்டர்ன் வரும்போது 'மாயாஜால்' போகலாமே.." என்று சிவா சொன்னான்.

"ஒ.கே.." குழு ஒப்புதல் அளித்தது.

"ஹலோ..கீதா..நான் பரமேஸ்வரி பேசுறேன்..இந்த ஹேமா வருவேன்னு அலுச்சாட்டியம் பண்றா..அவள அனுப்பி வைக்கிறேன்..கொஞ்சம் பார்த்துக்க..வளர்ந்த பொண்ணு மாதிரியா நடந்துக்குறா..?அப்புறம்..அவள 'ஸ்விம்மிங்பூலில்' குளிக்கவிடாதே.. ஆமா..'pads' இருக்கு..அவ 'பேக்' லேயே வைச்சு இருக்கேன்.."

ஹேமா, இந்தப் பயணத்தில் கலந்துகொள்ள முடியாத ராஜேந்திரனின்-பரமேஸ்வரி தம்பதியின் பத்தாம் வகுப்பு படிக்கும் அருமைபுத்திரி.. 'அந்தாஷ்சரி' மன்னி.. புதிய இந்தி,தமிழ் படங்களின் ஆடியோ ரிலீஸான மறுநாள் அனைத்துப் பாடல்களையும் பாடுவாள். வீடுகளில் குழந்தைகளை வைத்து அவ்வப்போது நடைபெறும் ஆடல்,பாடல் நிகழ்ச்சிக்கு இவள்தான் இயக்குனர். எங்களையெல்லாம் வைத்து 'கேம் ஷோ' நடத்துவாள். எனக்கு 'பபூன்' குல்லா வைத்து எல்லாக் குழந்தைகளையும் சிரிக்க வைப்பாள்.உற்சாகத்தின் மறு பெயர் ஹேமா!

"சந்திரா..உன்கிட்டே 'பிரட் டோஸ்டர்' இருந்தா எடுத்துக்க..பசங்க பசின்னு சொன்னா.. உடனே போட்டுக் கொடுத்திடலாம்.."

"அம்மா..இங்க வந்து அப்பாவ பாரு..!"

" அய்யோ..என்னா எழவு ட்ரெஸ் இது..முக்கா காலுக்கு பேண்ட்.. கழட்டுங்க முதல்ல.."

"நோ சான்ஸ்..அய்யா இன்னும் இரண்டு நாளைக்கு 'பீச் காஸ்டியூம்தான்'.."

"கருமம்.."

"நாம சரியா 10.30க்கு கிளம்பி விடனும்.."

"நடராஜ்..என்னடா இது..உன் மாமனார் எல்லோருக்கும் முன்னாலே வேனில் ஏறி பளிச்சுனு உட்கார்ந்து இருக்கார்..முதல்ல அவர கழட்டிவிடுடா.."

"டேய்..அவர வேண்டாம்னு சொன்னேன்னு வைச்சுக்க.. அவ்வளவுதான்.. என் பொண்டாட்டி பத்தரகாளியா மாறிடுவா.. அவரால ஒரு பிரச்சனையும் இல்லடா.."

"திருவான்மியூரில் வண்டியை நிறுத்தி அவர பொடி வாங்க அனுப்பி அப்படியே ஆள தொலைச்சிடலாமா?"

"டேய்.."

"இத முதல்ல ஏத்துங்க..இதுல தான் அரிசி,பருப்பு மசாலா அயிட்டமெல்லாம் இருக்கு."

"அம்லு..அஜய்..தீபிகா..எல்லோரும் வேன்லே ஏறுங்க..லேடிஸும் அதிலேயே ஏறுங்க..நாங்க கார்ல வறோம்"

"எங்கள வெட்டி உடுருதிலேயே குறியா இருங்க..அப்படி என்னத்ததான் சேர்ந்து சேர்ந்து பேசுவீங்களோ.."

"சரி..சரி..ஏறு..டயமாச்சு.."

அனைவரையும் ஏற்றிக்கொண்டு, இரைச்சல்களோடும் உற்சாகமாகவும் கிழக்குக் கடற்கரை சாலையை நோக்கிக் கிளம்பின, அந்த வாகனங்கள். சன்னல்களில் இரண்டொரு பலூன்கள்கூட தலைகாட்டின.

ஆனால் மறுநாள் அதே வாகனங்கள் சென்னையை நோக்கி திரும்பி வருகையில் மிக அமைதியாக திரும்பின. யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. கணவர்கள் அமைதியாக சாலையை பார்த்து வாகனங்களை ஓட்டினார்கள். மனைவிகளின் முகங்களில் எரிமலை தெரிந்தது.எடுத்துப் போன மூன்று முழுஅளவு 'விஸ்கி' பாட்டில்களால் வந்த வினை. நான் கல்யாணசுந்தரத்தின் காரில் பின் இருக்கையில் உட்கார்ந்திருக்கிறேன். முன்இருக்கை இடது புறத்தில் கீதா உர்ரென்று கடந்து செல்லும் சாலையின் நடுவே பார்த்தவாறு உட்கார்ந்திருக்கிறாள். அவளை பார்க்கும் போது இலக்கை நோக்கி விரையும் ஏவுகணையை போலவே இருந்தாள். வீட்டில் போய்தான் விழுந்து வெடிக்கும் என நினைக்கிறேன்.என் இடப்புற இருக்கைகளில் குழந்தைகள் ஒன்றோடொன்று கலந்து அசதியில் உறங்கிக் கொண்டிருந்தன. பிரேம்'மின் இரண்டரை வயது மகள் அஸ்வினி என் கழுத்தைக் கட்டிக்கொண்டு தூங்கிக்கொண்டு வந்தாள். அவள் தூக்கம் கெட்டுவிடாதவாறு அதிகம் அசையாமல் வந்தேன்.கண்ணாடி வழியாக சுந்தரத்தின் முகத்தைப் பார்த்தேன். அமைதியாக வண்டி ஓட்டினான். திரும்பி வரும்போது நாங்கள் போவதாக இருந்த 'மாயாஜால்' இடதுபுறம் சட்டென்று தோன்றி ஓடி மறைந்தது. யாரும் அதை கவனித்ததாகவும் தெரியவில்லை. இதே அமைதி மற்ற நண்பர்கள் வரும் வண்டியிலும் இருப்பது அவர்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ் செய்தியிலிருந்து எனக்குத் தெரிந்தது. தாம்பத்யத்தில் அவ்வப்போது குறுக்கிடும் இந்த மெளனராகக் காலம், பிரம்மச்சாரியாக இருந்தபோதிலும் நான் அறிந்த ஒன்றுதான். சில நாட்களில் சரியாகும் எனவும் எனக்குத் தெரியும்.அவரவர் வீடு வந்ததும் அமைதியாக பிரிந்தார்கள்.கணவர்கள் gas chamber-ன் உள்ளே போகும் யூதர்கள் போல் வீட்டினுள் சென்றார்கள்.

அடுத்து வந்த தினங்களில் ஒரு மாலைப் பொழுதில் நண்பர்கள் கூடி பேசிய பேச்சு இப்படியாக இருந்தது..

" useless ladies..next time no females..only stags..கிச்சா..இனிமே ஒருத்தியையும் வண்டிலே ஏத்தாதே..சீரியல கட்டிகிட்டு அழட்டும்.. அவள்களும் 'எஞ்ஜாய்' பண்ண மாட்டாள்க..நம்மையும் 'எஞ்ஜாய்' பண்ண விடமாட்டாள்க..!"

எனக்குப் புரியவில்லை.. 'எஞ்ஜாய்' பண்ணுவது என்றால் என்ன?

பண்ணைவீடு முழுவதும் வாந்தி எடுப்பதா?

7 comments:

ILA (a) இளா said...

முடிஞ்சி போச்சா? நல்லா ஆரம்பிச்சு இருக்கீங்க? தொடருந்தானே..

M.Rishan Shareef said...

ஹா ஹா ஹா..
அருமையான நடை.
நல்லாயிருக்கு.

கதையல்ல ...நிஜம் தானே? :P

துளசி கோபால் said...

நல்லா வந்துருக்கு இந்த நடை.

ரசித்தேன்.

நாடோடி இலக்கியன் said...

கோகுலின் உயரத்தை குறித்து எழுதிய இடத்தில் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அருமையான எழுத்துநடை.
தொடரட்டும்,வாழ்த்துகள்!!

ச.மனோகர் said...

நன்றி இளா,ரிசான்,துளசிடீச்சர்!

gomax said...

super.oru naal payanam ellamal palla nattkal erunthirunthal.....?

Anonymous said...

you can write stories with this style...congrats/