திருக்குறளில் ஆகச்சிறந்த கவிதை எது என்று நான் ஒருமுறை மறைந்த பேராசிரியர்ஜேசுதாசனிடம் கேட்டேன். ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுகஉலகியற்றியான்’ என்ற குறள்தான் என்றார்.
பத்து வருடங்களுக்கு முன்பு, இளைஞனான எனக்கு அது விந்தையாக இருந்தது. அருமையானஅணிகளும் சொல்லாட்சிகளும் உள்ள எத்தனையோ குறள்கள் இருக்க, உள்ளர்த்தங்களேஇல்லாத நேரடியான இந்த உணர்ச்சிவெளிப்பாட்டை ஏன் தெரிவுசெய்தார் பேராசிரியர்என்ற எண்ணம் ஏற்பட்டது.
ஆனால் பேராசிரியர் சொன்னார் .”கவிஞனின் மிக உன்னத வெளிப்பாடு என்பதுஅறச்சீற்றம் அவனை மீறி வெளிப்படும் நிலைதான். இந்தக் கவிதையை கொஞ்சம் நிதானமாகசிந்தனை செய்திருந்தால் வள்ளுவரே முட்டாள்தனமாக உணர்ந்திருப்பார். உலகைஉருவாக்கியவனை அவனால் உருவாக்கப்பட்டவனே அழிந்துபோகும்படி சாபம் போடுவதாவது….ஆனால் அந்த உணர்வெழுச்சி உண்மையானது. தமிழில் வெளிப்பட்ட அறச்சீற்றங்களின்உச்சமே இக்குறள்தான். ஆகவே இது மகத்தான கவிதை…”
பாலாஜி சக்திவேல்லின் ‘கல்லூரி’ கேளிக்கையை மட்டுமே அடிப்படை இலக்காகக் கொண்டதமிழ்த் திரையுலகில் வெளிப்பட்டிருக்கும் ஆழமான அறச்சீற்றத்தின் பதிவு.ஆகவேதான் இந்த எளிமையான, அடக்கமான, படம் எனக்கு ஒரு காவியமாகவே தெரிகிறது.மேலான கலை என்பது ஒருபோதும் உத்தி சார்ந்த அலட்டல் அல்ல, செயற்கையானஎடுப்புகளும் அல்ல. அது அடிபட்டவனின் வலி முனகல் போலவோ ஆனந்தக் கண்ணீரின்விம்மல் போலவோ இயல்பாக, தன்னிச்சையாக வெளிப்படுவது.
‘கல்லூரி’ இன்றுவரை நம் திரையுலகம் முன்வைத்துவந்த கல்லூரிகளில் இருந்து அதன்யதார்த்தம் காரணமாகவே வேறுபடுகிறது. உயர்தர உடையணிந்த விடலைகள் பளபளக்கும்இருசக்கர வண்டிகளை சாய்த்துவைத்து உலகையே நக்கல்செய்து திரியும் கல்லூரிகளையேநாம் கண்டிருக்கிறோம். காதல் அல்லாமல் வேறு விஷயமே நிகழாத இடங்கள் அவை. கல்உடைப்பவர்களின், பீடி சுற்றுபவர்களின், ஆட்டோ ஓட்டுபவர்களின்அரைப்பட்டினிப்பிள்ளைகள் படிக்கும் ஒரு கல்லூரி என்பது முப்பது வருடங்களுக்குமுன்னரே தமிழ்நாட்டில் ஒரு அன்றாட யதார்த்தமாக ஆகிவிட்டாலும் கூட இப்போதுதான்அது திரையில் முகம் காட்டுகிறது.
அந்தப் பிள்ளைகள் அவர்களின் துயரங்களால், ஓயாத போராட்டத்தால் ஒன்றாகச்சேர்வதும்அவர்கள் நடுவே உருவாகும் ஆழமான நட்பும் மிகுந்த நுட்பத்துடன்காட்சிப்பதிவாகியுள்ளது இந்த திரைப்படத்தில். அவர்கள் ஒருவரை ஒருவர்‘கலாய்ப்பதும்’ அவர்களின் ஊடல்களும் திரைப்படம் என்ற கலையின் அனைத்துவல்லமைகளும் வெளிப்பட சித்தரிக்கப்பட்டிருந்தமையால் உண்மையான வாழ்க்கையை கண்எதிரே பார்த்த பிரமிப்பும் நிறைவும் ஏற்படுகிறது.
கதாபாத்திரங்களுக்கு ஏற்ப முகங்களைத் தேர்வுசெய்ததில்தான் இப்படத்தின்முதல்பெருவெற்றி நிகழ்ந்திருக்கிறது. முத்து, ஆதிலெட்சுமி, கயல் போன்றகதாபாத்திரங்கள் மிக மிக யதார்த்தமாக இருக்கின்றன. படத்தில் ஒவ்வாமை அளிக்கும்ஒரு முகம் கூட வெளிப்படவில்லை. உழைத்து வாழும் எளிய முகங்கள் தொடர்ந்துவந்தபடியே இருப்பதை பரவசத்துடன் பார்த்தபோது இந்த சாதாரணமான விஷயத்தை எண்ணிஏங்கும்படி இருக்கிறதே தமிழ் திரையுலகு என்ற கசப்பும் ஏற்பட்டது. உதாரணமாககயலின் அப்பாவாக வருபவரின் அந்த முகம்! உழைத்து குடும்பத்தைகரையேற்றத்துடிக்கும் பாசமுள்ள ஒரு தந்தையின் அந்த இனிய சிரிப்பு! அதேபோலசலீமாவாக வரும் அந்தப்பெண். தென்தமிழ்நாட்டு மரைக்காயர் முகங்களுக்கே உரியகூறுகள் துலங்குகின்றன அதில்.
நடிப்பைக் கொண்டுவருவதிலும் பாலாஜி சக்திவேல் பெருவெற்றி பெற்றிருக்கிறார்.கல்லூரி முதல்வராக நடிப்பவரின் முகபாவனைகள் தவிர அனைத்து வெளிப்பாடுகளுமே மிகமிகக் கச்சிதமாக அமைந்துள்ளன. ஒரு பொம்மையாக மட்டுமே வரமுடியும் எனஎதிர்பார்க்கவைத்த கதாநாயகி கூட அற்புதமான மெய்ப்பாடுகளை வழங்கி மனம்நெகிழச்செய்கிறார்.
நமது கிராமப்புற கல்வி நிலையங்களில் இன்றுள்ள உண்மையான அடிப்படைச் சிக்கலேபடத்தின் மையக்கருவாகியுள்ளது.
கட்டுப்பெட்டித்தனமான நம் சமூகம் ஆணும் பெண்ணும்பழகுவதை அனுமதிக்காது. ஆனால் கல்வி நிறுவனங்களில் அதற்கான வாய்ப்புஏற்படுகிறது. ஆனால் அங்கே நட்பும் பாலியல் கவற்சியும் ஒன்றுடன் ஒன்று கலந்துஇனம்பிரிக்க முடியாதபடி சிடுக்குபட்டிருக்கின்றன. கல்லூரிகளில் நிகழும்பெண்சீண்டல்கள் அடிப்படையில் இச்சந்தர்ப்பத்தை எப்படி எதிர்கொள்வது என்றுதெரியாத இளைஞர்களின் வெளிப்பாடுகள். நம் திரைப்படங்கள் தொடர்ந்து பெண்ணைச்சீண்டி மட்டப்படுத்தும் கதாநாயகர்களை முன்வைத்து அவர்களுக்கு வழிகாட்டுகின்றன.ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் மட்டுமே நிகழ முடியும் என்ற எண்ணத்தைமீண்டும் மீண்டும் அவை வலியுறுத்துகின்றன.
அதை மீறி இயல்பான நட்புடன் ஆணும் பெண்ணும் பழக முடியுமா என இளம் உள்ளங்கள் கனவுகாண்கின்றன. அவர்களை தடுப்பது இரு வல்லமைகள். ஒன்று எப்போதும் ஒழுக்கக்கட்டுப்பாட்டின் குண்டாந்தடியுடன் பார்க்கும் சமூகத்தின் கண்கள். இன்னொன்றுஅவர்களுக்குள்ளேயே எழும் இயல்பான பாலியல் இச்சை. அவ்விரண்டாலும் கடுமையானமனக்குழப்பத்துக்கும் குற்றவுணர்வுக்கும் ஆளாகிறார்கள் அவர்கள். நம்குழந்தைகளின் வளர்இளமைப்பருவத்தில் அவர்களை சுழற்றியடிக்கும் மையச்சிக்கலாக இதுவிளங்குகிறது
மிக நேர்மையுடனும் கவித்துவத்துடனும் அதை கலையாக்கியிருக்கிறார் பாலாஜிசக்திவேல். அவ்விளைஞர் குழுவுக்குள் உள்ள இயல்பான நட்பும் அதில் இருவர் அவர்களைமீறி காதல் கொள்ளும்போது ஏற்படும் உக்கிரமான குற்றவுணர்வும் அதனுடன் அவர்கள்நிகழ்த்தும் போராட்டமும் உணர்ச்சிகரமான தருணங்கள் மூலம் வெளிப்படுகின்றன.படத்தில் இளைஞர்களின் போராட்டம் என்பது எந்த புறச்சக்தியுடனும் அல்ல தங்கள்அகமன அலைகளுடன் மட்டுமே என்பது இப்படத்தின் மிக நுட்பமான சிறப்பம்சம்.
கடைசியில் தருமபுரி பேருந்து எரிப்பில் உச்சம் கொண்டு முடிகிறது படம்.துளித்துளியாக ஏழை மக்கள் உருவாக்கியெடுத்த கனவுகளை மூர்க்கமாகஅழித்துச்செல்கிறது வன்முறை அரசியலின் ஈவிரக்கமற்ற கை. ”கெடுக!” எனமூண்டெழும் ஓர் அடிவயிற்று ஆவேசம் தொனிக்க படமாக்கப்பட்டுள்ள இந்தக் காட்சிகளேதமிழ்திரையுலகின் மறக்கமுடியாத படங்களுள் ஒன்றாக இதை நிலைநிறுத்துகின்றன.
எத்தனையோ மௌன அர்த்தங்கள் கோண்டது இக்காட்சி. சிராய்ப்புகளுடனும் கண்ணிருடனும்கனவுகளுடனும் அவ்விளநெஞ்சங்கள் நாளை வெளிச்சென்று எதிர்கொள்ள தங்களைதயாரித்தபடி இருக்கும் புறவுலகம் எப்படிப்பட்டது? அவர்கள் பேணும் மலரசைவுபோன்றமெல்லிய உணர்வுகளுக்கும் தவிப்புகளுக்கும் அங்கு என்ன இடம்? அக்கனவுகளை ஈசல்சிறகுகள் போல உதிர்த்துவிட்டுத்தான் குண்டாந்தடிகளுடன் அலையும் மனிதர்களின்சூழலுக்கு அவர்கள் வந்துசேர வேண்டுமா?
‘கல்லூரி’ உண்மையில் பலநூறு ஏழை உழைப்பாளிகளின் எதிர்காலம் குறித்த கனவுகளின்கூடமாக இந்நாவலில் காட்டப்பட்டுள்ளது. தங்கையை கல் உடைக்க அனுப்பி அண்ணாவைபடிக்க அனுப்பும் கல் உடைப்பவனின் கனவு. ஊதுவத்தி சுற்றி அக்காவை படிக்கஅனுப்பும் தங்கைகளின் கனவு. அவர்கள் படிக்கும் அந்த வரலாறு இளங்கலை அவர்களுக்குஎன்ன அளிக்கப்போகிறது? குண்டாந்தடிகளும் பெட்ரோலுமாக அலையும் அரசியல்வாதிகளிடம்அல்லவா இருக்கிறது அவர்களின் எதிர்காலம்?
செழியனின் ஒளிப்பதிவு இயல்பான ஒளியில் எடுக்கப்பட்டது என்ற எண்ணத்தைஉருவாக்கும் அளவுக்கு அழகும் இயல்பான தன்மையும் உடையதாக இருக்கிறது. இயற்கையானமழை இருளை படம்பிடித்திருப்பதும் சரி, கல் குவாரி சித்தரிப்பில் ஒளிப்பதிவுக்கோணங்களும் சரி நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் உச்ச்சகட்ட காட்சி அதற்குதேவையான உழைப்பையும் பொருட்செலவையும் அளிக்காமல் எடுக்கப்பட்டது போலப் படுகிறது.
சென்ற சில மாதங்களாக ஆழமான மன இக்கட்டில் இருந்தேன். என் நுண்ணுணர்வைஅவமானப்படுத்தி எரிச்சலூட்டிய சில படங்கள், ‘பருத்தி வீரன்’ ‘கற்றது தமிழ்’போன்றவை, ஊடகங்களால் பெரும் படங்களாக முன்வைக்கப்பட்டமைதான் காரணம். ஹாலிவுட்படங்களை நோக்கி பிரதிசெய்த ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு உத்திகளைஎந்தவிதமான கலைநுட்பமும் இல்லாமல் அசட்டுத்தனமான மிகையுடன் தோன்றியவிதமெல்லாம்கையாண்டு எடுக்கப்பட்ட இலக்கற்ற முதிரா முயற்சிகள் அவை. அவற்றின்இயக்குநர்களின் அசட்டு ஆணவமும் கலை மொண்ணைத்தனமும் மட்டுமே வெளிப்படுபவை. அவைபோன்ற படங்கள் கொண்டாடப்படும் ஒரு சூழல் காலப்போக்கில் தன் கலைமனத்தையே இழக்கநேரும் என்றே நான் அஞ்சினேன்.
நல்ல படைப்பு அடிப்படையில் உண்மையான மனஎழுச்சிகளை ஒட்டி உருவாவது. எத்தனைதொழில்நுட்பச் சரிவுகள் இருந்தாலும் ஆத்மா பங்கப்படாதது. அவ்வகைப்பட்ட படம்‘கல்லூரி’. எளிமையையே வலிமையாகக் கொண்டது. செயற்கையான மன வக்கிரங்களுக்குப்பதிலாக நம்மைச்சுற்றி வாழும் வாழ்க்கையை நம்மைப் பார்கக்ச்செய்வது. ஒரு எளியசமூகம் தன்னைத்தானே பார்க்க, தன் வலிகளை தானே சொல்லிக்கொள்ள , முயல்வதன் விளைவுஇது வெற்றிபெற்றாக வேண்டியவை இவ்வகைப்பட படங்களே. இவற்றின் வெற்றியே நம்மைப்பற்றியபெருமிதத்துடன் நாம் மேலும் எதிர்பாக்கச் செய்யும். குறைகள் இருக்கின்றன,அவற்றை இப்படம் நூறுநாள் ஓடும்போது அம்மேடையிலேயே அலசவேண்டும்.
source: http://jeyamohan.in/?p=111
14 comments:
நல்லதொரு விமர்சனத்தை அளித்திருக்கிறீர்கள். நன்றி நண்பரே
நன்றி, இந்தவாரம் இந்தப் படம் பார்த்தாகணும்!
Jayamohan praised Pithamagan directed by Bala and then wrote dialogu for Bala's "Naan Kadavul".
Now he is praising this film and
perhaps expects to write dialog
for Balaji Shakthivel's next film.
The hype in his review is obvious.
வித்தியாசமான விமர்சனம்..
விமர்சனம் அருமை. இதுபோன்ற படங்கள் வெர்றி பெற்று வருவது சிறப்பான முன்னேற்றம்.
வித்தியாசப்பட்ட பார்வை...
காதல் படத்தின் க்ளைமேக்ஸ் இந்த படத்தை பார்க்கவேண்டுமா என்ற எண்ணம் எழுந்தது. ஆனால், பார்க்க வேண்டிய படம் என நீங்கள் சொல்வது யோசிக்க வைக்கிறது.
//சென்ற சில மாதங்களாக ஆழமான மன இக்கட்டில் இருந்தேன். என் நுண்ணுணர்வைஅவமானப்படுத்தி எரிச்சலூட்டிய சில படங்கள், ‘பருத்தி வீரன்’ ‘கற்றது தமிழ்’போன்றவை, ஊடகங்களால் பெரும் படங்களாக முன்வைக்கப்பட்டமைதான் காரணம்.//
'கற்றது தமிழ்' நான் பார்க்கவில்லை. ஆனால் நிச்சயம் 'பருத்தி வீரன்' ஒரு சிறந்த படம் என்பதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்றே தோன்றுகிறது.
I truly second the comments shared by Jeyamohan. The effect stayed in for a couple of days….need to watch ( not see)the movie a couple of times to understand the subtle details it’s got. Fantastic job by the director, Balaji Sakthivel. To my knowledge this was the first time the students, in movies, looked very genuine. The background of the students studying in the rural area is apt. The little girl, muthu’s sister, conveys so much through her eyes. They way she interacts portrays their class difference.
ஜெமோ ஒரு புத்திசாலி எழுத்து வியாபாரி.
தன்னுடைய சிறப்பான விமர்சனக் கட்டுரையிலும், உள்ளுணர்வால் நனைந்த தானியங்களை உள்ளே வைத்து விற்றுவிட அவரால் முடிகிறது.
//சென்ற சில மாதங்களாக ஆழமான மன இக்கட்டில் இருந்தேன். என் நுண்ணுணர்வைஅவமானப்படுத்தி எரிச்சலூட்டிய சில படங்கள், ‘பருத்தி வீரன்’ ‘கற்றது தமிழ்’போன்றவை, ஊடகங்களால் பெரும் படங்களாக முன்வைக்கப்பட்டமைதான் காரணம்.//
:)
தர்மபுரி பேருந்து எரிப்பின் போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன், அதனைக்கண்டிக்கும் விதமாக போராட்டம், ஸ்ட்ரைக் எல்லாம் செய்தோம். எனக்கும் இப்படம் அதன் அடிப்படையில் வந்தது என்பதால் பார்க்க வேண்டும் என்று ஆசை, ஒரு வேளை அந்நிகழ்வை கொச்சைப்படுத்தி இருப்பார்களோ என ... தவிர்த்து வருகிரேன்.
அரசியல்வாதிகளின் செயல் முற்றிலும் கண்டிக்கத்தக்கது, கல்லூரிப்பெயர் போட்டு கல்வி நிறுவன வாகனம் என கொட்டை எழுத்தில் எழுதி இருக்கும் ஒரு பேருந்தை எரிக்க வருகிறார்கள் எனில் அவர்களை என்னவென்று சொல்வது.இப்படம் வந்த சமயத்தில் தான் குற்றவாளிகளுக்கு தண்டனையும் உறுதி செய்து தீர்ப்பும் வந்துள்ளது.
அந்நிகழ்வினைக்குறித்து நேரடியான அனுபவம் பெற்ற மாணவர்களிடமும் பேசி இருக்கிறேன்.
ஆனால் வணிக ரீதியாக அத்துயர சம்பவத்தை பயன்படுத்திக்கொண்டவர்கள், அம்மாணவர்களுக்கு என்ன செய்து இருப்பார்கள்? இந்த வழக்கை இறந்த மாணவர்களின் பெற்றோர் சொந்த செலவில் நடத்தியே தண்டனை வாங்கி தந்தார்கள், அரசு ரீதியாக எவ்வுதவியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
ஒரு படத்தை பாராட்டலாம் அதற்காக இன்னும் சில படங்களை திட்ட வேண்டும் என்பது என்ன விதி, பருத்தி வீரன், கற்றது தமிழ் படங்களில் குறைகள் இருந்தாலும் வழக்கமான வணிகத்தனம் இல்லாத படங்கள் அவை.
அதிலும் பருத்தி வீரனில் கார்த்தி என்ற புதுமுக நடிகரை அப்படி எண்ணும் வாய்ப்பு இல்லாத வண்ணம் நடிக்க வைத்தது ஒரு இயக்குனரின் திறமை இல்லையா?
ஜெயமோகன் யாருக்கொ தனது விசுவாசத்தை காட்ட யாரையோ காவு வாங்குகிறாரே!
இப்படத்தில் மற்ற கதாப்பாத்திரங்களை பாருங்கள், தமிழ் சூழலோடு ஒத்துப்போவது போல தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமணா என்ற அந்த நடிகையின் தோற்றம் எந்த சூழலிலும் தமிழ் சூழலோடு ஒத்துப்போகாத வண்ணம் உள்ளது அப்படி இருக்கும் போது , அவரது பாத்திரமும் நிறைவாக இருக்குனு எப்படி சொல்லவந்தார்.ஒரு வெள்ளைத்தோல் உள்ளவர் தான் நாயகியாக இருக்க வேண்டும் என்ற சராசரி தமிழ் பட இயக்குனர் போலவே இவரும் செயல்பட்டுள்ளார் என்றே தோன்றுகிறது.
//ஆனால் உச்ச்சகட்ட காட்சி அதற்குதேவையான உழைப்பையும் பொருட்செலவையும் அளிக்காமல் எடுக்கப்பட்டது போலப் படுகிறது.//
அடுத்தவர்களுக்கு இயக்குவதென்றால் பல கோடிகள் செலவு வைக்கும் ,கேட்கும் ஷங்கர் , தன் தயாரிப்பென்றால் இப்படி கஞ்சத்தனம் காட்டுவது ஏன்?
ஐயா, இது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியது என்று தெளிவாகப் போடக்கூடாதா. ஒரு சுட்டியும் கொடுக்கக்கூடாதா.
http://jeyamohan.in/?p=111
சுட்டி கொடுங்கள் ஐயா அசல் பதிவைச் சுட்டி.
அப்பாடா ஒரு வழியாக இந்த source பிரச்சனைக்கு தீர்வு வந்துவிட்டது. அனானியாக வந்து என் பிரச்சனையை தீர்த்தமைக்கு நன்றி!
"பாலாஜி சக்திவேல்லின் ‘கல்லூரி’ கேளிக்கையை மட்டுமே அடிப்படை இலக்காகக் கொண்டதமிழ்த் திரையுலகில் வெளிப்பட்டிருக்கும் ஆழமான அறச்சீற்றத்தின் பதிவு.ஆகவேதான் இந்த எளிமையான, அடக்கமான, படம் எனக்கு ஒரு காவியமாகவே தெரிகிறது.மேலான கலை என்பது ஒருபோதும் உத்தி சார்ந்த அலட்டல் அல்ல, செயற்கையானஎடுப்புகளும் அல்ல. அது அடிபட்டவனின் வலி முனகல் போலவோ ஆனந்தக் கண்ணீரின் விம்மல் போலவோ இயல்பாக, தன்னிச்சையாக வெளிப்படுவது". என்கிறார் ஜெயமோகன். இங்கு நாம் விளக்க வந்தது. இது அறச்சீற்றம் அல்ல. நடந்த வன்முறையில் தனது பக்கச்சார்பை காட்டும் ஒரு மேசாமான அரசியலே என்பதுதான். அறச்சீற்றம் என்பது இப்படி ஒரு நுட்பமான கட்டமைக்கப்பட்ட அரசியல் கதையாடலாக உருவாகாது. அதற்கு பதிலாக இறந்தவர்களின் உண்மைக்கதையையே எடுத்திருக்கலாம். இப்படத்தில் காட்டப்படும் அரசியலைவிட ஆறு படத்தில் திட்டமிட்டு 5 பேரை தீக்குளிகக்ச் செய்யும் காட்சியமைப்பு அதிகம் பாதிப்பை பொதுப்புத்தியில் உருவாக்கக்கூடியது.
"நமது கிராமப்புற கல்வி நிலையங்களில் இன்றுள்ள உண்மையான அடிப்படைச் சிக்கலேபடத்தின் மையக்கருவாகியுள்ளது." என்கிறார் ஜெயமோகன். கல்லூரி என்பது ஒரு கதைத்தளமாக இப்படத்தில் இல்லை என்பது தமிழின் முக்கிய படைப்பாளியான ஜெயமோகனுக்கு நம்மைவிட நன்றாகவே தெரியும். கல்லூரி என்பது கதையாடலுடன் எந்தவகையிலும் முக்கியத்துவப் படுத்தப்படவில்லை. படத்தின் மைய்க்கரு காதல் நட்பு என்பதை சுற்றி வருவதாக காட்டி இறுதியில் அதற்கு எந்த தீர்வும் இல்லாமல் கலவரம் பற்றிய அரசியல் பிரச்சனையாக முடிக்கப்பட்டுள்ளது.
"வெற்றிபெற்றாக வேண்டியவை இவ்வகைப்பட படங்களே. இவற்றின் வெற்றியே நம்மைப்பற்றியபெருமிதத்துடன் நாம் மேலும் எதிர்பாக்கச் செய்யும். குறைகள் இருக்கின்றன,அவற்றை இப்படம் நூறுநாள் ஓடும்போது அம்மேடையிலேயே அலசவேண்டும்." ஜெயமோகனின் இந்த எலிப்பொறி வாக்கியத்தில் உள்ள பொறுப்புணர்வு அவரது எழுத்து அறத்தடன் ஒத்துப் போகக்கூடியதா? அல்லது இவர் குறைகளை சுட்டிக்காட்டினால் அப்படம் ஓடுவது நின்று போய்விடுமா? தமிழக மக்கள் இவரது கருத்துக்காக காத்திருப்பது போன்ற ஒரு கற்பனையையே இதில் காணமுடிகிறது. தவிரவும் இது நல்ல படம் ஓட வேண்டும் என்று அவர் விரும்புவது படத்தயாரிப்பாளர் படவேண்டிய கவலை. அந்த கவலை இவருக்கு ஏன்? வெற்றியே ஒரு படத்தின் சிறப்பம்சம் என்பது எந்தவகை அளவுகோல்? உண்மையில் இன்றைய வெகுமக்களிடம் வெற்றியடையும் படங்கள் பெரும்பாலானவை மோசமானவை என்று இலக்கியவாதிகளால் புறம் ஒதுக்கப்படக்கூடியவைதான். உதாரணம் பருத்திவீரன். மிகவும் மோசமான யதார்த்தமான கிராமப்பின்னனியில் எடுக்கப்பட்ட படம். வெற்றிபெற்றது என்பதால் அதை சிறந்ததாக கொள்ளமுடியுமா? வெற்றிபெற்றதாக தம்பட்டம் அடிக்கப்பட்ட பல படங்கள் மோசமானவை என்பது சொல்லாமலே விளங்கும். அல்லது மோசமானது நல்லது என்பதைவிட அதனை ஒரு பிரதியாக அதன் இயக்கம் ஏற்படுத்தும் சமூக உளவியல் கூறுகளை ஆய்வு செய்வதே சரியாக இருக்கும். இன்றைய சூழலில் பெரும்பாலான படங்களை எல்லோரும் பார்த்து விடுகிறார்கள். திருட்டு வீசிடி அல்லது இணையம் அல்லது ஓரிருமாதங்களில் தொலைக்காட்சிகளில் உலகிலேயே முதன்முறையாக போட்டு காட்டி விடுகிறார்கள். ஜெயமோகன் எல்லோரும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறாரா? அல்லது தயாரிப்பாளர் ஷங்கர் லாபம் பெற வேண்டும் என்று விரும்பகிறரா? என்பது அவருக்கே வெளிச்சம். எல்லோரும் பார்ப்பதற்கு 100 நாள் தியேட்டரில் ஓடினால் மட்டும் போதாது.
கீழ்கண்ட தொடுப்பில் இதுகுறித்து எனது விரிவான கருத்து உள்ளது.
http://jamalantamil.blogspot.com/2007/12/blog-post.html#links
நன்றி.
ஜமாலன்.
Post a Comment