Saturday, September 1, 2007

Chak De! India..திரைப்பார்வை




இந்தியா-பாக்கிஸ்தான் இடையே ஹாக்கி உலகக்கோப்பை இறுதி ஆட்டம்-ஷாரூக் பெனால்ட்டி ஷாட்டை தவறவிடுகிறார்-இந்தியா தோல்வி-ஷாரூக் துரோகி என குற்றச்சாட்டு-ஷாரூக் ஏழு வருடம் எங்கும் தென்படவில்லை-பெண்கள் ஹாக்கி அணிக்கு பயிற்சியாளர் வேலைக்கு யாருமே தயாரில்லாத சூழ்நிலையில் ஷாரூக் ஏற்றுக்கொள்கிறார்-பயிற்சி கொடுத்து பெண்கள் ஹாக்கி உலகக்கோப்பையை வென்று வருகிறார்.

இது Chak De! India ! திரைப்படத்தின் கதை.

இப்படத்தின் கதை பெரிதாக கவரவில்லை. ஆனால் இப்படத்திற்கான shooting script-ஐ எப்படி தயார் செய்திருப்பார்கள் என்ற பிரமிப்பு நம்மை வியப்படையச் செய்கிறது. ஒரு விறுவிறுப்பான கிரிக்கெட் ஆட்டத்தையோ அல்லது ஹாக்கி ஆட்டத்தையோ முழு விறுவிறுப்புடன் நேரில் கண்டுகளிக்க முடியும். ஆனால் அதே விறுவிறுப்புடன் ஒரு ஆட்டத்தை செயற்கையாக பிலிமில் கொண்டுவருவது மிகக் கடினம். அதற்கு script எழுதுவது என்பது கடினத்திலும் கடினம்.


ஹாக்கி பயிற்சிக்கு இந்தியாவின் பல பகுதியிலிருந்தும் பெண்கள் வருகிறார்கள். பல மொழி பேசிக்கொண்டு,பல சமுக,பொருளாதார பின்னணியிலிருந்து இவர்கள் வருகிறார்கள். எல்லோருமே அவரவர் மாநிலத்தில் சிறப்பான ஆட்டக்காரர்கள். இவர்களிடையே ஆரம்பத்தில் ஒற்றுமை,புரிந்துணர்வு இல்லாமலிருக்கிறது. ஹாக்கி விளையாட்டு,பயிற்சியாளர்,விளையாடும் பெண்கள்,அவர்களின் உணர்வுகள் இவற்றை களனாக வைத்து திரைக்தையை அமைத்திருக்கிறார் திரைக்கதை எழுதிய ஜெய்தீப் சாஹ்னி. அதை மிகவும் நேர்த்தியாக திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குனர் ஷிமிட் அமின். ஹாலிவுட் படங்களின் ஒளிப்பதிவை இப்படத்தில் பார்க்கலாம்.

விளையாட்டு வீராங்கனைகளாக நடித்த பெண்கள் தங்கள் பாத்திரங்களை உள்வாங்கி நடிதிருக்கிறார்கள்.இதில் நடித்த பல பெண்களுக்கு காமிரா அனுபமே கிடையாது.சில பெண்கள் உண்மையான ஹாக்கி வீராங்கனைகள்.ஷாருக்கானின் நடிப்பு,வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழி மிகவும் அருமை.

நான் ரசித்த சில காட்சிகள்:

1)பயிற்சிமுகாம்.பதிவாளர் கேட்கிறார்.
“எங்கிருந்து வருகிறாய்?”
“ஆந்திர பிரதேஷ்”
“ஓ..மதராஸி…தமிழ்?”
“இல்லை..ஆந்திரா..தெலுகு”
“தெலுகுக்கும் தமிழுக்கும் அப்படி என்னமா வித்தியாசம்?”
“பஞ்சாபிக்கும் பீகாரிக்கும் என்ன வித்தியாசமோ அவ்வளவு வித்தியாசம்”

இந்த காட்சியில் வட இந்தியர்களின் தென்னிந்திய புரிதல்களை இயக்குனர் காட்டியிருப்பது வித்தியாசமாக இருந்தது.

2) பயிற்சியின் போது எதிர்த்து பேசும்,சண்டை போடும் பெண்களை ஷாரூக்
மைதானத்தை விட்டு வெளியேற்றிவிடுகிறார். அவர்களை கண்டுகொள்ளாமல்
மற்றவர்களை ஆட வைக்கிறார். வெளியேறிய பெண்கள் அமைதியாக
விளையாட்டை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நேரம் ஆகஆக
அவர்களால் இருப்பு கொள்ளவில்லை.விளையாடிய கால்கள் அல்லவா..
ஒவ்வொருராக ஷாரூக்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு பயிற்சியை
தொடருகிறார்கள். இந்த இடத்தில் ஷாரூக் ஒரு நீண்ட அறிவுரையெல்லாம்
கொடுக்காமல் ஒரு சைகை மூலம் அவர்களை விளையாட அனுமதிப்பது
ரசிக்கக்கூடியது.

3) இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலியா போய் இறங்குகிறது. அங்கு
ஆஸ்திரேலிய அணியினரும் மற்றவர்களும் பயிற்சி பெறுவதை ஏக்கத்துடன்
இந்திய அணி பார்ப்பதை எடுத்த விதம்.


இந்த படம் சில உறுத்தல்களையும் ஏற்படுத்தியது.

இந்த படம் அமீர்கான் நடித்த ‘லகானை’ நினையூட்டியதை தவிர்க்கமுடியவில்லை. கிரிகெட்டுக்கு பதில் ஹாக்கி ..வித்தியாசம் காட்டுவதற்கு பெண்கள் அணி.. அதிலிருக்கும் அதே தேசபக்தி கலந்த விளையாட்டு. தேசபக்தி ஒரு proved subject என்பதை மறுபடியும் இந்தப் படம் நிரூபித்துள்ளது.

பெண்கள் ஹாக்கி அணி உலகக் கோப்பை போட்டிக்குச் செல்வதை.. எப்படியும்
தோற்கப் போகிறார்கள்…செலவு எனக்கூறி நிறுத்திவிடுகிறார்கள். ஷாரூக் அவர்களிடம் வாதாடி, வேண்டுமானால் ஆண்கள் அணி பெண்கள் அணியோடு மோதி பார்க்கட்டும் என போட்டிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. பெண்கள் அணி தோற்பதாக இக்காட்சி முடிகிறது. இந்த ஆண்கள்-பெண்கள் ஆட்டம் சாத்தியம்தானா? சற்று அதீத கற்பனை போல் தெரிந்தது.


பின்னணி இசை உணர்ச்சிகளை தூண்டினாலும்,சில இடங்களில் திடீரென விழித்துக் கொண்டு வாசித்தது போல் இருந்தது.

சில குறைகள் இருந்தாலும்…குத்து பாட்டுக்களை பார்த்துப்பார்த்து சேர்த்துக் கொண்ட பாவங்களை,இந்த மாதிரி படங்களைப் பார்த்துப் போக்கிக் கொள்ளலாம்.

குறிப்பு: இப்படத்தின் திரைக்கதையை, சினிமா தயாரிப்பாளர்கள்,மாணவர்கள்
மற்றும் சினிமா பற்றிய ஆராய்ச்சியாளர்கள் பார்வையிடுவதற்காக
Beverly Hills- ல் இருக்கும் Oscar Library கேட்டிருக்கிறது.

1 comment:

chezhian said...

திரைப்படம் குறித்து எழுதுவதற்கு யாருமில்லாத சூழலில் நீங்கள் எழுதி இருப்பது ஆறுதல் அளிக்கிறது.நீங்கள் சிலாகித்த அதே காட்சிகளை நானும் ரசித்தேன்.திரைக்கதை இப்படத்தின் மிகமுக்கியமான பலம்.ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் ஒரு குணாதிசயம் இருப்பதும் அவை கடைசி வரையில் பிசகல் இல்லாமல் கையாளப்பட்டிருப்பதும் கூடுதல் சிறப்பு.படம் முடிகையில் துரோகி என்ற எழுத்தைச் சிறுவன் அழிக்கிற காட்சி வலிந்து திணிக்கப்படிருக்கிறது.இவ்வளவு நுணுக்கமான வணிகப்படத்திற்கான திரைக்கதையில் அது கொஞ்சம் கொஞம் நெருடல்.