‘இது குருவாயூர் எக்ஸ்பிரஸ் டிரெயின் தானே?..’
‘ஆமா…’
‘மாலா…இந்த வண்டிதான்…ஓடி வா..ஏறு’
‘நான் ஒத்தாளுதான்…’
‘சரி..உட்கார்ந்துக்குங்க’
‘யோவ்..வழியவிட்டு உள்ளே போய்யா..எருமை மாடு மாதிரி வழிய மறிச்சிகிட்டு..’
‘உள்ளே எங்கய்யா எடமிருக்கு? இவரு வந்துட்டாரு பெரிய இவராட்டம்..’
‘யோவ்..உன்னாலே உள்ளே போக முடியலேனா இறங்குய்யா கீழே…பொம்பல ஆளுங்க படியிலே நிக்குது…யோய்..வண்டி கிளம்பிருச்சுய்யா..’
‘இந்தாம்மா…எங்க வந்து பைய்ய வக்கிற…?போம்மா அந்த பக்கம்..’
‘என்னையா இது..அங்கேயிருந்து எல்லாரும் இப்பிடியே சொன்னா நாங்க எங்கதான் போறது..!’
‘இங்க எங்கம்மா இடமிரூக்கு?’
‘எம் பேரன் மட்டும் இங்கன கீழேயே உட்காரட்டும்..சின்ன புள்ளைங்க.. இந்தாடா.. பைய்ய வச்சிகிட்டு இங்கனயே உட்காரு..’
‘பாட்டி….’
‘எழவெடுத்தவனே…உட்காருடா…எல்லாம் உங்க ஆத்தாகாரினாலே வந்த வினை..’
‘பரதேசி பசங்க..22,000 ஆயிரம் கோடி லாபம்கிறாங்க…இன்னும் ரண்டு வண்டியத்தான் விட்டா என்ன?
‘காமாட்சி…தண்ணி பாட்டில் இருக்குதில்ல…?’
‘கருமம்…உங்களதானே தண்ணி புடிச்சு பையிலே வைக்க சொன்னேன்..ஒரு வேலையே உருப்படியா செய்யிரதில்ல..’
‘நீ வச்சிருப்பேனு நான் நினச்சேன்..சரி விடு..இங்க விப்பான்.. வாங்கிக்கலாம்..’
‘ஆமாம்..ஒரு பாட்டில் பத்து ரூபாம்பான்…காசு விளையுதில்ல…புள்ளைங்க எதாவது கேட்டா எறிஞ்சு விழறது…இங்க வந்து வாரி இறைக்கவேண்டியது…விடுடி சேலைய..’
‘அண்ணே..கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க…கால்ல ஒரு சின்ன ஆக்சிடெண்ட்…ரொம்ப நேரம் நிக்கமுடியாது..’
‘இங்க ஏற்கனவே மூணுபேரு…இந்த பையனையும் சேர்த்தா நாலு பேரு.. இதுல நீங்க எங்க வந்து உட்காருவீங்க..?’
‘ஒண்ணும் பிரச்சனையில்ல அண்ணே…தம்பி இங்க வா..மாமா மடியில உட்கார்ந்துக்கோ..’
‘அப்ப்பா..’
‘சும்மா வா ராஜா…இங்க பார்…செல்போன்ல வீடியோ கேம்ஸ் விளையாடலாம்…’
‘ஏம்மா..பச்ச குழந்தய வச்சுகிட்டு…ரிசர்வேசன் பண்ணி வரக்கூடாது?எங்கம்மா போற?.’
‘நாகர்கோயில்’
‘அட பாவமே…நைட் எட்டறைக்குதானே போவான்..அதுவரைக்கும் நின்னுகிட்டா போவ..?’
‘மேடம்..பைய்ய வேன்னா இங்க கீழே வச்சுகிங்க..கொஞ்ச நேரம் கழித்து கீழேயே உட்கார்ந்துடுங்க..கொழந்தைய வச்சுகிட்டு எவ்வளவு நேரம் நிப்பீங்க..? தனியாவா மார்த்தாண்டம் போறீங்க..?’
‘இல்ல..எங்க அண்ணன் ஒருத்தர்..அதோ அங்க நிக்கிறார்..’
‘அப்போ சரி..’
‘பாட்டி…அந்த பைய்ய கொஞ்சம் தள்ளுங்க…இருமல் மருந்த எடுக்கணும்..’
‘ஏன்யா மேலே வந்து விழுறீங்க…பொம்பளைங்க இருக்கிறது கண்ணுக்கு தெரியலே..?’
‘ஏம்மா இவ்வளவு கூட்டத்திலே வந்துகிட்டு ‘பொம்பல ஆம்பலெனு’ இம்சைய கொடுத்துகிட்டு..’
‘இல்ல…நான் இருக்கிறது சத்தீஸ்கர்…பூரா நக்ஸலைட் ஏரியா.. முதலில் நக்ஸலைட்டுக்கு காசு கட்டிவிட்டுதான் வேலையை தொடங்கணும். ரோடுபோட ஒரு காண்டிராக்ட் காரனும் வரமாட்டேங்குறான். அரசாங்க அதிகாரியெல்லாம் டவுன்ல தான் இருப்பாங்க…சாயந்தரம் நாலரைக்கே வீட்டுக்கு போய்டுவாங்க…அந்த ஊரு உருப்பட ரொம்ப நாளாகும்...ரண்டு வருசம் கழிச்சு இப்போதான் ஊருக்கு போறேன்…மெட்ராஸ்ல இந்த பய படிக்கிறான்…அக்கா மகன்..அதுதான் இங்க வந்து இவனையும் கூட்டிகிட்டு போறேன்..நீங்க..?’
‘நமக்கு மதுரை…கூட்டுறவு பாங்க்லே வேலை..வீட்டுகாரம்மா டீச்சர்… லீவு விட்டதிலிருந்து இந்த பயக தொந்தரவு தாங்க முடியல.. மெட்ராஸ்ல ஒய்பு சித்தப்பா வீடு இரூக்கு… வில்லிவாக்கம்…அதான் வந்து ஒரு ரவுண்டு அடித்து விட்டு போறோம். பய புள்ளைங்க பத்தாயிரத்தை காலி பண்ணிடுச்சுக…போத்தீஸ் போனோம்…பாக்கட் காலி…முறைக்காதம்மா…உள்ளததானே சொல்லுறோம்… கடையா அது… லட்சம் பேர் உள்ளார இருக்கான்…எப்படியா இந்த ஊர்ல மனுசன் இருக்கான்…!’
‘இட்லி…வடை…மசாலா தோசை..’
‘யோவ்..இந்த கூட்டத்தில எங்கயா போய் இதெல்லாம் விக்க போறே..’
‘சாமி…நீங்க இன்னைக்கு ஒரு நாளைக்கு இதுல போறீங்க…நாங்க டெய்லி போறோம்..இட்லி..வடை..மசால்தோசை..’
‘நாளைக்கே திரும்ப வேண்டியதுதான்…மச்சானுக்கு ஓரகடத்தில் ஒரு இடம் பார்த்திருக்கு…ஒரு ரண்டு வருசம் கடைய நடத்திட்டோம்னா.. அப்புறம் நின்னுக்கலாம்…இனிமே அந்த ஏரியாதான் டெவலப்பாக போகுதாம்…நிறைய பேக்ட்டரியெல்லாம் வரப் போகுதாம்…பார்ப்போம்..நாம ஒரு பிளான் போடுறோம்..ஆண்டவன் என்ன நினைக்கிறானோ..’
‘அம்மா..ஒண்ணுக்கு வருது..’
‘ஹலோ..ஜெயந்தி…நான்தான்…என்னாச்சு? மூர்த்தி கிளம்பிட்டானா இல்லையா? …சொதப்பிட்டான்…சரி…செட்டியாருக்கு போன் செஞ்சு செவ்வா கிழமை செட்டில் செஞ்சுடுலாம்னு சொல்லு….பாரமொவுண்ட்டா? அட நீ வேறே…குருவாயூர் எக்ஸ்பிரஸ்…அன் ரிசர்வுடு கம்பார்ட்மெண்ட்…நின்னுகிட்டு போறேன்..சரி..சரி..நா கூப்பிடுறேன்..’
‘காப்பி..காப்பி…..காப்பி..’
‘பாத்திமா…சேட் வீடு எங்க இருக்கு? விளக்கு தூண்லயா?..ஒண்ணு செய்யு..நீ மட்டும் போயிட்டு வந்துடு…அவன பார்த்தாலே எனக்கு எரிச்சல் வருது…நாங்கு நேரில இடம் வித்து பணம் வந்திருக்கு….ஒரு வார்த்த சொன்னானா பார்த்தியா? வட்டி பணத்தையாவது கொடுத்திருக்கலாம்லே..’
‘என் பேரா…நாகலச்சுமி… எல்.கே.ஜி….இப்பவா..? விருதுநர்க்கு போறோம்..எங்கப்பா ஐஸ் பாக்டரி வச்சுருக்கார்..’
‘பிரதர்…சட்ட பாக்கெட்ல ஒரு மாத்திரை இருக்கு..பிரசருக்கு..கொஞ்சம் எடுத்து கொடுங்க..பிளீஸ்…கைய கூட எடுக்க முடியல..என்ன எழவு கூட்டம்டா இது..’
‘விழுப்புரத்திலே இஞ்சின் மாத்துவான்யா….’
‘அட கருமாந்திரமே..இங்க பார்ரா கூட்டத்தை…இவங்க எல்லோரும் இந்த வண்டியிலே ஏறப் போறாங்களாமா? கிழிஞ்சது…’
‘பெரியவனே…வடை சாப்பிடுறியா…நல்லா இருக்கும்டா..’
‘பிரட் சாண்ட்விச்…சமோசா…’
‘ஏங்க…புளியோதரை இருக்கா? பிரட் சாண்ட்விச் எல்லாம் யாருங்க சாப்பிட போறாங்க?’
‘அட நீங்க வேற..இது இல்லேனு சொன்னா வெள்ளைக்காரன் கம்பளைண்ட் எழுதி போட்டுட்டு போயிருவான்..நம்ம தாழி அறுந்துடும்..’
‘ஏய்..வெள்ளரிபிஞ்சு…உப்பு, மிளகாய் தூள் இருக்கா…?’
‘இந்த கூட்டத்திலே எப்படி தடவி தர்றது…இந்தா…நீயே தடவிக்க..’
‘இந்தாம்மா..கொஞ்ச நேரம் நீ உட்கார்ந்துக்கோ…காலுக்கு நல்லாயிருக்கும்… நான் கொஞ்ச நேரம் நிக்கிறேன்…’
‘அய்யா…இந்தாங்க தண்ணி..முதல்ல மாத்திரைய சாப்பிடுங்க…கண்ணெல்லாம் ஒரு மாதிரி இருக்கு..’
‘பாப்பா..குழந்தைய ஏங்கிட்ட கொடு…கொஞ்ச நேரம் நான் வச்சிருக்கேன்…’
‘பெரியம்மா…நான் திருச்சிலே இறங்கிடுவேன்…அப்ப நீ இங்க உட்காந்துக்க…’
‘புண்ணியமா போச்சு…நீ நல்லா இருப்பய்யா…’
இந்திய ரயில்கள் ஒரு பயணம் அல்ல…ஒரு அனுபவம் என்று ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணி எழுதியிருந்தார்.
12 comments:
non-linear writing அப்டின்னு சொல்லுவாங்களே .. அந்த ஸ்டைலில் எழுதினதா ..
நல்லா இருக்கு..
வசிஷ்ட்டர் வாயால் பாராட்டு...நன்றி பேராசிரியர் அவர்களே! தங்களின் பதிவுகளை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.நாமும் எழுதி பார்ப்போமே என்றுதான் இந்த சிறு முயற்சி.
தங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும் மீண்டும் என் நன்றிகள்!
தருமி சார்...இது கடந்த மாதம் நான் சென்ற ரயில் பிரயாண அனுபவம்.ஒரு கட்டத்தில் ரயிலில் என்னைச் சுற்றி மக்கள் கூட்டம் பெருகி, என்னுடைய கண் பார்வையிடும் பகுதி குறைந்து வெறும் ஒலிகளாகவே கேட்டு பயணத்தை தொடர்ந்தேன். விதவிதமான மனிதர்கள்..
அவர்களின் விதவிதமான பிரச்சனைகள். இதைத்தான் இந்த வடிவத்தில் சொல்ல முயற்சித்தேன்.
இருந்தும் அந்த பயணத்தின் போது மக்கள் அடைந்த சிரமங்கள் ஒரு புறமிருக்க, அவர்கள் காட்டிய பொறுமை என்னை எரிச்சலூட்டியது.
Hi Bobz Uncle,
This is Ramanan from Los Angeles, California. I take this opportunity to introduce myself.. I am your future Son-in-law. Fiance of Priya. Your linear writing about the happenings on a trian is very impressive. I liked it a lot which made to imagine myself in that situation when I used to travel in such crowded train from Chennai to Trichy.. Keep up the good work and looking forward to read your next article sooner.
PS: I had no clue how to write the comment in Tamil. Please do let me know how others had written comments in Tamil...
Cheers,
Ram
வாங்க மாப்ளே..
முதலில் வாழ்த்துக்கள்.நமக்கு அறிமுகம் இப்படி அமைகிறது..! IT மற்றும் Internet சமாச்சாரங்கள் நம் குடும்ப பின்னனியிலும் புகுந்து விளையாடும் என்று எழுத்தாளர் சுஜாதா பல வருடங்களுக்கு முன்பே எழுதியது இப்போதுதான் புரிகிறது.
தமிழில் டைப் செய்ய இங்கு செல்லவும்.
http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=3
இ-கலப்பை இயக்குவதற்கு மிக எளிதான ஒரு மென்பொருள்..முயற்சித்து பாருங்கள்..கூடவே இந்த வலைத் தளங்களையும் படிக்கவும்.
http://www.thamizmanam.com/
http://www.thenkoodu.com/
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமணன்!
கூட்டத்தில் சிக்கி மனிதன் படும் துயரத்தை நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்.பாவம் தான் நாமெல்லோரும்.
தலைவரே உங்கள் ப்ளாக்கரை திறந்து comment moderation ஆன் செய்யுங்கள்.செய்தால் தான் இந்தப்பதிவு மறுமொழிதிரட்டியில் திரட்டப்படும்.
ரொம்ப இயல்பா..ரயிலில் போகும் போது நடந்த உரையாடல்களை ரெக்கார்ட் பண்ணி திரும்ப அதைக் கேட்டு எழுதிய மாதிரி எழுதியிருக்கீங்க.. சூப்பர் :)
ஜாலி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...இந்த comment moderation டெக்னிக்கல் எழவெல்லாம் இன்னும் தெரியவில்லை...முயற்சி செய்து பார்க்கிறேன்.
கோபாலன்...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல!
:-) வித்தியாசமான முயற்சி.. வாழ்த்துக்கள்.
நன்றி மனதின் ஓசை!
Post a Comment